Tamilnadu
அடக்குமுறைகளை அஞ்சாமல் எதிர்கொண்ட பத்திரிகையாளர் வி.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளரும் மூத்த பத்திரிகையாளருமான வி.அன்பழகன் (61) கடந்த சில தினங்களாக உடல் நலமின்றி சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று 13-10-2021 புதன்கிழமை பிற்பகலில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இதழியல் உலகில் பணியாற்றிய வி.அன்பழகன் கடந்த ஏழு ஆண்டுகளாக மக்கள் செய்தி மையம் என்ற ஊடக நிறுவனத்தின் மூலம் கடந்த ஆட்சிக் காலத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி பல முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்தார்.
மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், “சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளரும் மூத்த பத்திரிகையாளருமான வி.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக மறைவுற்றார் என்ற அதிர்ச்சி தரும் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நக்கீரன், தமிழ் முரசு உள்ளிட்ட ஊடகங்களில் பணியாற்றிய அன்பழகன் மாற்றுக்குரல்களின் முக்கிய முகமாகத் திகழ்ந்தார் என்பதை அனைவரும் அறிவர். மக்கள் செய்தி மையம் என்ற ஊடகத்தைத் தொடங்கிய அவர் அதிகார மையங்களின் தவறுகளை வெளிக்கொண்டுவந்து மக்கள் முன் நிறுத்துவதில் முனைப்புடன் செயலாற்றியவர்; அடக்குமுறைகளை அஞ்சாமல் எதிர்கொண்டவர்.
உண்மையின் பக்கம் நின்று செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க துணிவுடன் செயல்பட்ட அவரது பணி ஊடக உலகில் நிலைத்து நின்று அவரது புகழைப் பேசும். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஊடகத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!