Tamilnadu

ரூ.15 லட்சம் செல்போன்கள் கொள்ளை... 48 மணி நேரத்தில் கொள்ளை கும்பலை பிடித்த போலிஸ் : நடந்தது என்ன?

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் திலீப் சிங். இவர் கடந்த 7 ஆண்டுகளாக திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் வழக்கம்போல் தனது கடையை இரவு மூடிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் காலை கடையைத் திறக்க வந்தபோது, கடையின் பூட்டை உடைத்து ரூ. 15 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மற்றும் உதிரி பாகங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டித்து அதிர்ச்சியடைந்தார்.

உடனே இதுகுறித்து ஆரணி போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு வந்த போலிஸார் அப்பகுதியில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். பிறகு அங்கிருந்த சி.சி.டி.வி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து செல்போன் கடையில் கொள்ளையடித்த கும்பல் ஆற்காடு தனியார் கல்லூரி பேருந்து நிலையத்தின் அருகே பதுங்கி இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலிஸார் அவர்களைச் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.

பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜாலம்சிங் ரத்தோர், விக்ரம் சிங், ரகுல் சிங் எனத் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 525 மொபைல் காம்போ எல்பிடி, 1100 மொபைல் டச் ஸ்கிரினை பறிமுதல் செய்தனர்.

பிறகு மூன்று வடமாநில கொள்ளையர்களையும் போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொள்ளைச் சம்பவம் நடந்து 48 மணி நேரத்திலேயே கொள்ளையர்களைக் கைது செய்த போலிஸாருக்கு ஆரணி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Also Read: 47 பேரை கடித்த வெறிநாய்... அடித்து கொன்ற பொதுமக்கள்: நடந்தது என்ன?