Tamilnadu

ஆறாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் எப்போது? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய தகவல்!

கட்டுமான உரிமையாளர்கள், தொழிற்சாலைகள் மற்றும் வியாபாரிகள் சங்க உறுப்பினர்களுக்கு டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு அளிக்கும் கூட்டம் சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ. கருணாநிதி, மருத்துவர் எழிலன், பிரபாகர் ராஜா, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடிஎஸ் கொசு உருவாகுவதற்கான காரணிகள், அவற்றை தவிர்க்கும் நடைமுறைகள் உள்ளிட்டவற்றை பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் விளக்கினார். இதையடுத்து பேசிய கட்டுமான உரிமையாளர்கள் சங்க நிர்வாகி சாந்தகுமார், டெங்கு பாதிப்பை தடுப்பதற்கான அரசின் வழிகாட்டுதல்களை அனைத்து கட்டுமான தளங்களிலும் முறையாக பின்பற்றுவோம் என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழகம் முழுவதும் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. டெங்கு பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வணிகர் சங்கத்தினர் தாமாகவே முன்வந்து துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்ய முடிவு செய்துள்ளது வரவேற்புக்குரியது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் டெங்கு பாதிப்பை கண்டறிய 29 ஆயிரத்து 484 மாதிரிகள் மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு, முதலமைச்சரின் தொடர் அறிவுறுத்தல்படி இன்று வரை 89 ஆயிரத்து 91 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைவிட 3 மடங்கு கூடுதல் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை 342 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். அனைவரும் பாதுகாப்பான நிலையில் உள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

Also Read: ”பருவமழையை எதிர்கொள்ள நாங்க ரெடி” - மின்வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி நச் பதில்!

விழிப்புணர்வு மட்டுமின்றி, கொசு ஒழிப்பு பணிகளும் மிக வேகமாக நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 21 ஆயிரத்து 968 பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் உள்ளனர். 14 ஆயிரத்து 833 புகை மருந்து அடிக்கும் எந்திரங்கள் உள்ளன. கொசு ஒழிப்பிற்கான மூன்று விதமான மருந்துகளும் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன.

பண்டிகை காலத்தை கவனத்தில் கொண்டு மக்கள் நல்வாழ்வுத்துறை, சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறையுடன் இணைந்து முக்கிய கடை வீதிகளில் கூட்டம் கூடுவதை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலவேம்பு குடிநீர் தொடர்ந்து மருத்துவ முகாம்களில் கொடுக்கப்படுகிறது. மேலும் தேவைக்கு ஏற்ப பயன்படுத்த உள்ளோம்.

காசநோய் குறித்த விழிப்புணர்வு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் 86% நோய் தடுப்பு நடவடிக்கைகள் மிக சிறப்பாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

ஆறாம் கட்ட தடுப்பூசி முகாம், பண்டிகை நாட்களை கருத்தில் கொண்டு அடுத்த வாரத்தில் இல்லை. எப்போது நடத்துவது என பின்னர் அறிவிப்போம். அதேநேரம், தினமும் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் பணிகள் வழக்கம் போல நடைபெறும். மக்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்" என்றார்.

Also Read: “ரூ.1200 கோடி முதலீட்டில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா” : முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்!