Tamilnadu
“அணுக்கழிவில் அலட்சியம் வேண்டாம்.. இது சுற்றுச்சூழல் பிரச்சினை அல்ல; தமிழ்நாட்டின் எதிர்காலம்”: முரசொலி !
முரசொலி நாளேட்டின் இன்றைய தலையங்கம் (12-10-2021) வருமாறு:
கூடங்குளம் அணுக்கழிவு ஆபத்துகள் குறித்து பிரதமரின் கவனத்துக்கு தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவரும், தி.மு.க பொருளாளருமான டி.ஆர்.பாலு கொண்டு சென்றுள்ளார். “அணுக்கழிவு களைக் கொட்டத் தமிழ்நாட்டைத் தவிர வேறு இடமில்லையா?” என்ற கேள்வியையும் கேட்டுள்ளார் டி.ஆர்.பாலு.
இது ஏதோ சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல; தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்த பிரச்சினை ஆகும். தமிழ்மக்களின் உயிரைப் பாதுகாக்கும் பிரச்சினை ஆகும். அதனால் அணுக்கழிவு விவகாரத்தில் அலட்சியம் வேண்டாம் என்பதை ஒன்றிய அரசுக்கு திரும்பத் திரும்பச் சொல்லியாக வேண்டி உள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக நடந்த மக்கள் போராட்டம் என்பது தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்க போராட்டமாகும். இதன் பிறகாவது புதிய அணு உலைகளை அமைப்பதை ஒன்றிய அரசு ஒத்திவைத்திருக்க வேண்டும். மாறாக அடுத்தடுத்து அணு உலைகளை அமைத்துக் கொண்டுதான் இருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் அமைக்க முடியாத, அம்மாநில மக்களால் விரட்டப்பட்ட இந்தத் திட்டங்களை இங்கு வந்து அமைப்பதன் பின்னால் இருக்கும் அரசியலை விட - அதனால் எதிர்காலத்தில் உருவாக இருக்கும் ஆபத்துகள்தான் அச்சம் தருவதாக உள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இப்போது இரண்டாவது மற்றும் மூன்றாவது அணு உலைகளின் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. அடுத்தடுத்து பல அணு உலைகளை அமைக்க இருக்கிறார்கள். இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். இப்போது அமைக்கப்பட திட்டமிட்டுள்ள அணு உலைகள் மூலமாக வெளியேறும் கழிவுகள் குறித்த நிலைப்பாடுதான் இப்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது; அச்சத்தோடு கவனிக்க வேண்டியதாக இருக்கிறது.
அணுக்கழிவுகளை அணுமின் நிலையத்திலேயே சேமித்து வைக்க ஒன்றிய அரசின் இந்திய அணுமின் கழகம் தீர்மானித்துள்ளது. அணுக்கழிவு என்பது ஏதோ கல்யாண வீட்டுக் கழிவு அல்ல. உயிரைப் பறிக்கும் ஆபத்துக் கொண்டது. அதனை அதே அணுமின் நிலையத்துக்குள் வைப்பது எப்படி சரியாகும்? இந்தக் கேள்வியைத்தான் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் டி.ஆர்.பாலு அவர்கள் எழுப்பி உள்ளார்கள்.
“கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நிரந்தரமாக அணு உலைக்கழிவுகளைச் சேமிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் இந்தக் கிடங்கை ஏற்படுத்துவது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது” என்றும் - “இதனால் கதிர் வீச்சு ஆபத்தும் மக்களிடையே உயிர் பாதுகாப்பு அச்சமும் பல மடங்கு அதிகரிக்கும்” என்றும் - “முன்னர் போட்ட ஒப்பந்தப்படி அணுக் கழிவுகளை ரஷ்யாவுக்கே எடுத்துச் செல்ல வேண்டும். அதைச் செய்யாமல் இங்கேயே வைப்பது என்ன நியாயம்?’’ என்றும் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இப்படி வைத்துள்ள கோரிக்கை என்பது ஏதோ அரசியல் கோரிக்கை அல்ல. உச்சநீதி மன்றத்தின் உத்தரவை நாம் நினைவூட்டுகிறோம். அவ்வளவுதான். 2013 ஆம் ஆண்டு பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பாக பொறியாளர் சுந்தர்ராஜன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த வழக்கில், “அணுமின் நிலையத்தில் கழிவுகளை வைப்பதால் மக்கள் நல்வாழ்வுக்கும், சுற்றுச் சூழலுக்கும் கடுமையான அபாயம் ஏற்படும்.
இந்திய அரசும், அணு சக்தி கழகமும் இது குறித்து கவனமாக திட்டமிட வேண்டும். செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும்’’ என்று உச்சநீதிமன்றம் அப்போதே தீர்ப்பளித்தது. இதுவரை எந்த திட்டமிடுதலும் இந்திய அரசிடம் இல்லை. அங்கேயே புதைத்து வைப்பதுதான் அவர்களுக்குத் தெரிந்த ஒரே தீர்வு.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு என்பதை கொள்கை அளவில் மட்டும் எதிர்க்கவில்லை. அதன் செயல்பாட்டு அளவிலும் ஏற்படுத்தும் அச்சம் என்பது அதிகமானதாகும். உலகில் உள்ள அணு உலைகள் எப்போதாவது தான் பழுதடையும். ஆனால் ஏழு ஆண்டுகளில் 100 முறைக்கு மேல் பழுதடைந்தது கூடங்குளம் அணு உலை. பராமரிப்புப் பணி என்ற பெயரால் நிறுத்திக் கொண்டே இருப்பார்கள். இதுவே அச்சம் ஏற்படுத்துவதுதான். இத்தோடு கழிவுகளை வைப்பதும் சேர்ந்தால் என்ன ஆகும்?
“அணுக் கழிவுகளைச் சேமித்து வைத்திட, அணு உலைகள் இருக்கும் இடத்திலிருந்து தொலைவில் ஒரு இடம் (Away From Reactor - AFR) அணுக் கழிவுகளை நிரந்தரமாகப் பாதுகாக்க ஆழ்நிலக் கருவூல மையம் (Deep Geological Repository - DGR) ஆகிய இரண்டு வகையான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இதில் அணுக் கழிவுகளை உலைக்கு வெளியே வைப்பதற்கான கட்டமைப்பு (AFR) ஐந்து ஆண்டுகளில் உருவாக்கப்பட வேண்டும்” என்று 2013 ஆம் ஆண்டு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். அதனைத் தொடர்ந்து ஐந்தாண்டு காலத்தில் ஏதாவது அதற்கான முயற்சியை ஒன்றிய அரசு செய்ததா?
“கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளைப் பாதுகாக்கும் வகையில் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அணுக்கழிவு பாதுகாப்புப் பெட்டகத்தை அமைத்திட வேண்டும்; இது குறித்த திட்ட அறிக்கையை ஒன்றிய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று 2018 ஆகஸ்ட் 24 ஆம் தேதி உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது. இது தொடர்பாக நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மக்கள் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்தார்கள். அதையும் மீறிச்செயல்பட்டு வருகிறது ஒன்றிய அரசு.
கூடங்குளத்தில் அணுஉலை வளாகத்திலேயே அணுக் கழிவு மையத்தை உருவாக்கி, அணுக்கழிவுகளைக் கொட்டி சேமிக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்திருப்பது தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கு ஆபத்தானதாகும். அதனால் கடுமையாக எதிர்த்தாக வேண்டும். முதல் இரண்டு அணு உலைக் கழிவுகளை ரஷ்யாவுக்கே அனுப்பி வைக்க வேண்டும். கூடங்குளம் வளாகத்தில் அணுக்கழிவுகளை வைக்கலாம் என்ற அனுமதி ரத்து செய்யப்பட வேண்டும். அணுக்கழிவில் அலட்சியம் கூடாது என்பதை ஒன்றிய அரசு உயிர் பிரச்சினையாகக்கருத வேண்டும்
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!