Tamilnadu

வீதி வீதியாகச் சென்று திடீர் ஆய்வு... பருவமழையை எதிர்கொள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி அதிரடி நடவடிக்கை!

பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளதாக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கரூர் பசுபதிபாளையம் பகுதியில் “தூய்மை கரூர்” திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வீதி வீதியாக நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுப் பணியின்போது செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, “கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அனல் மின் நிலையங்களில் 58% மின் உற்பத்தி செய்யப்பட்டது. தமிழகத்தில் அனல் மின் உற்பத்தி மூலம் 4,320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் இருந்தும் 1,800 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்தனர்.

தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதற்காகவே முறையாக பராமரிக்காமல் குறைவாக மின்சாரம் உற்பத்தி செய்தனர். தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி 3500 மெகாவாட் மின்சார உற்பத்தியை அதிகரிக்க பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது உள்ளதை விட 70% உற்பத்தி அதிகரிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

மேலும், “கரூர் நகராட்சியில் 11,575 தெருவிளக்கு மின் கம்பங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில், நீண்ட காலமாக பழுதடைந்து கிடந்த 3,550 மின் கம்பங்கள் கடந்த 4 மாதங்களில் மாற்றப்பட்டுள்ளன. மேலும், 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,300 புதிய தெரு விளக்குகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பருவமழையை எதிர்கொள்வதற்கு மின்சாரத்துறை தயாராக உள்ளதாகவும், அதற்கு தேவையான மின் கம்பங்கள், மின் தளவாடங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், இனி வரும் காலங்களில் சூரிய மின்சக்தி மூலம் மின் உற்பத்தி ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது கரூர் நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி, நகர்நல அலுவலர் லட்சியவர்ணா, கரூர் கிழக்கு நகர தி.மு.க பொறுப்பாளர் கோல்ட்ஸ்பாட் ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Also Read: தி.மு.கவில் இணைந்த அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள்.. உள்ளாட்சி தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பெருகும் ஆதரவு!