Tamilnadu

“10 வருசமா நடக்கல.. இப்போ 1 மணி நேரத்துல வீடு கெடைச்சிடுச்சு” : மாற்றுத்திறனாளி இளைஞரின் தாய் நெகிழ்ச்சி!

மாற்றுத்திறனாளி மகனுடன் ஆதரவற்ற நிலையில் வீடு கேட்டு கடந்த 10 ஆண்டு காலமாக கோரிக்கை வைத்த பெண்ணுக்கு தமிழக முதலமைச்சர் மற்றும் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவின் பேரில் ஒரு மணி நேரத்தில் வீடு வழங்கப்பட்டது.

கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. கோரிக்கை மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளிகள் இருந்த இடத்திற்கே சென்று மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வார்டு வாரியாக சென்று மனுக்களை பெற்றார்.

அப்போது கரூர் நகராட்சி காந்திகிராமத்தைச் சேர்ந்த சந்திரா என்பவர், தனது மாற்றுத்திறனாளி மகன் ரவிச்சந்திரனுடன் (29) வந்து கோரிக்கை மனு அளித்தார்.

அதில் பிறவியிலிருந்தே தனது மகன் ரவிச்சந்திரன் கை கால் இயங்காத வாய் பேச இயலாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி என்றும், தான் கணவனால் கைவிடப்பட்டவர் என்பதால் ஆதரவற்ற நிலையில் இருப்பதாகவும் தெரிவித்த அவர், இருக்க வீடு இல்லை என்று கடந்த 10 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்து வந்துள்ளேன். எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், கொரானா காலம் என்பதால் வீட்டு வேலைக்கு கூட செல்ல முடியாமல் வருமானத்திற்கு வழி இல்லாமல் மாற்றுத்திறனாளி மகனுடன் சிரமத்துடன் வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

தற்போது தனது உறவினர் வீட்டில் வசித்து வருவதாகவும் மாற்றுத்திறனாளி மகன் இருப்பதால் வாடகைக்கு கூட யாரும் வீடு தர மறுக்கின்றனர் என்றும் தெரிவித்தார். அவரது நிலையை உணர்ந்த அமைச்சர் செந்தில்பாலாஜி உடனடியாக மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்டு விவரம் தெரிவித்தார்.

விவரங்களைக் கேட்டுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதல்படியும், அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவின்படியும் அந்தப் பெண்ணுக்கு காந்திகிராமத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கி கொடுக்க துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், மாற்றுத்திறனாளி மகனை எளிதில் அழைத்துச்செல்ல ஏதுவாக தரைத்தளத்தில் வீடு ஒதுக்குமாறும், சக்கர நாற்காலி சென்று வர ஏதுவாக சாய்தள வசதிகள் செய்து தருமாறும் மாவட்ட ஆட்சியர் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சர் உத்தரவின் அடிப்படையில், ஒருமணி நேரத்திற்குள் பயனாளிக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கியதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மேலும், குடியிருப்பிற்கு பயனாளி செலுத்தவேண்டிய தொகையான ரூ.1.88 லட்சத்தை மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியில் இருந்து செலுத்துவதாகவும் தெரிவித்தார். ஒரு மணி நேரத்தில் அந்தப்பெண்ணுக்கு ரூ.8.35 லட்சம் மதிப்பிலான வீடு தரைதளத்தில் ஒதுக்கப்பட்டது.

இதற்கான உத்தரவினை இன்று நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திராவிடம் வழங்கியபோது கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து தமிழக முதல்வர் மற்றும் மின்சாரதுறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோருக்கு அதிகாரிகள் முன்னிலையில் நன்றி தெரிவித்தார்.

இதுகுறித்து சந்திரா கூறுகையில், “கணவனால் கைவிடப்பட்டு ஆதரவற்ற நிலையில் மாற்றுத்திறனாளி மகனுடன் வசித்து வருகிறேன். கூலித்தொழிலுக்கு சென்று எனது மகனை காப்பாற்றி வந்தேன்.

கொரோனா காலத்தில் எந்த வேலையும் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தேன். இந்நிலையில், எனது நிலைமையினை எடுத்துக்கூறி இருக்க வீடு கேட்டு கோரிக்கை வைத்தேன். கடந்த 15 வருடங்களாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றேன். ஆனால், தற்போது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவின்படி, காந்திகிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்து தந்துள்ளனர்.

ஆதரவற்ற நிலையில், மாற்றுத்திறனாளி மகனுடன் வாழ்வதற்கு வழி தெரியாத எனக்கு மனு அளித்த ஒரு மணி நேரத்திற்குள் வீடு ஒதுக்கீடு செய்து கொடுத்த தமிழக முதலமைச்சர் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Also Read: நடக்க முடியாமல் நடந்த 88 வயது பாட்டியை தூக்கி வந்த போலிஸ் அதிகாரி... நெல்லை அருகே நெகிழ்ச்சி சம்பவம்!