Tamilnadu
week daysல் கொத்தனார்; week endல் கொள்ளையன் : ஸ்ரீபெரும்புதூர் என்கவுன்டரில் நடந்தது என்ன?
கொத்தனார் வேலை செய்துகொண்டே வார இறுதி நாட்களில் வடமாநில கொள்ளையர்கள் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்திருப்பதாக வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூர் பகுதியை சேர்ந்தவர் இந்திரா (வயது 54). இவர் நேற்று பென்னலூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்த போது, 2 வடமாநில வாலிபர்கள் அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓட முயன்றனர். இதனால் அச்சத்தில் இந்திரா கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். அப்போது, கொள்ளையர்களில் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியால் சுட்டு பொதுமக்களை மிரட்டியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பின்வாங்கியதும், வழிப்பறி கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி பென்னலூர் ஏரி அருகே காட்டுக்குள் ஓடி மறைந்து கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் டிஐஜி சத்யப்பிரியா மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலிஸார் 10 தனிப்படைகளை அமைத்து வடமாநில கொள்ளையர்களை தேடி வந்தனர்.
கொள்ளையர்கள் பதுங்கி இருந்த பகுதி அடர்ந்த செடி கொடிகள் நிறைந்த பகுதி என்பதால் போலிசார் ட்ரோன் கேமராவை பயன்படுத்தி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மேவலுர் குப்பம் அருகே பட்டூர் சாலையில் தைலம் தோப்பு என்னும் பகுதியில் கொள்ளையர்கள் இருவரும் பதுங்கி இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த டிஐஜி சத்யப்பிரியா மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் தலைமையிலான 300க்கும் மேற்பட்ட போலிஸார் கொள்ளையர்களை சுற்றி வளைத்து வடமாநில கொள்ளையர்களில் ஒருவரான நைம் அக்தர் என்பவரை அதிகாலை அளவில் மறைந்திருந்த போலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வடமாநிலத்தவரிடம் விசாரணை மேற்கொண்டதில் மற்றொரு நபரான மூர்தஷா என்னும் கொள்ளையனை பிடிப்பதற்காக செடி கொடிகள் அடர்ந்த பகுதிக்குள் காவல்துறையினர் விரைந்துள்ளனர்.
இதை அறிந்த மூர்தஷா சேக் தான் வைத்திருந்த கத்தியால் காவலர்களை தாக்கி தப்பிக்க முயற்சி செய்தபோது தற்காப்பிற்காக போலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி என்கவுன்டரில் சுட்டு வீழ்த்தினர். மேலும் போலிஸார் சுற்றி வளைத்து கைது செய்த மற்றொரு வடமாநில கொள்ளையனான நைம் அக்தரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் உயிரிழந்த மூர்தசாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து போலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் இரண்டு கொள்ளையர்களும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் அதே பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வந்ததும் தெரியவந்தது. அதேபோல் இதே பகுதியில் உள்ள பிற வட மாநிலத்தவர்களுடன் உடன் சேர்ந்து கொத்தனார் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் இரண்டு வடமாநில கொள்ளையர்கள் பயன்படுத்திய துப்பாக்கி கத்தி ஏடிஎம் கார்டு வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்டவற்றையும் போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல் முன்னாதாக இந்த சம்பவத்தின் போது காயமடைந்த காவலர்களையும் நேரில் சென்று திருப்பெரும்புதூர் மருத்துவமனையில் ஐஜி சந்தோஷ்குமார் சந்தித்தார்.
இதனிடையில் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ் குமார் கூறுகையில்,
இதுபோன்று வடமாநிலத்தில் இருந்து வேலைக்கு வருவதாக கூறி வீடு கேட்பவர்களின் அடையாள அட்டை முதல் ஆவணங்கள் வரை அனைத்தும் வீட்டின் உரிமையாளர்கள் முழுமையாக சோதிக்க வேண்டும். அதேபோல் இவர்கள் தங்குவது குறித்து காவல்துறையிடம் தகவல் அளிக்க வேண்டும். அதுமட்டுமின்றி இந்த வடமாநில கொள்ளையர்கள் 3 செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரகடத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் டாஸ்மாக் ஊழியர் துளசிதாஸ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவும் இவர்களிடம் உரிய விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
அதேபோல் இவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி நாட்டு வகை துப்பாக்கிதான். ஆனால் சற்று தொழில்நுட்ப ரீதியாக மெருகேற்றப்பட்ட துப்பாக்கி ஆகவும் உள்ளது. இந்த துப்பாக்கி வடமாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட அல்லது தமிழகத்திலேயே வேறு எங்காவது கிடைத்துள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ள உள்ளோம். அதுமட்டுமின்றி இவர்களைப் போல வடமாநிலத்தில் இருந்து வேறு யாராவது வந்துள்ளார்கள் என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ள உள்ளோம் என்று வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ் குமார் தெரிவித்தார்.
Also Read
-
கேரளாவில் ரயில் மோதி தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் பலி!
-
தமிழ்நாட்டு மாணவருக்கு மெட்டா நிறுவனம் பாராட்டு : காரணம் என்ன?
-
“கருப்பி.. என் கருப்பி...” : பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த நாய்க்கு தீபாவளியன்று நேர்ந்த சோகம்!
-
“தனித்துவத்தை நிலைநாட்டும் தமிழ் மொழி!” : கேரளத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
இரயில் நிலையம் To காவல் நிலையம்... 2-வது திருமணத்துக்கு ஆசைப்பட்டு போலி எஸ்.ஐ -ஆன பெண் - நடந்தது என்ன?