Tamilnadu
“புதிய அரசியல்வாதியான அண்ணாமலை ஒன்றிய அரசின் உத்தரவை முதலில் படிக்க வேண்டும்”: பாஜகவுக்கு முரசொலி பதிலடி!
முரசொலி நாளேட்டின் இன்றைய தலையங்கம் (11-10-2021) வருமாறு:
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு எதிராகச் சொல்வதற்கு வேறு ஏதும் கிடைக்காததால் - கோவிலைத் திறங்கள் என்று சொல்லத் தொடங்கி இருக்கிறது பா.ஜ.க. அதன் மாநிலத் தலைவரான அண்ணாமலை அவர்கள், “கோவிலைத் திறக்காவிட்டால் அரசை ஸ்தம்பிக்கச் செய்வோம். கொரோனாவைக் காரணம் காட்டி கோவிலை மூடி இருக்கிறார்கள். இதற்கு மத்திய அரசின் வழிமுறைகளைக் காரணம் காட்டுவது பொய். அவர்களது சித்தாந்தங்களை கோவில்களிலும் பூஜை அறைகளிலும் காட்ட நினைக்கிறார்கள்” என்று அண்ணாமலை சொல்லி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் கோவில்கள் மூடப்படவில்லை என்பதுதான் முழு உண்மை. நடைபாதைக் கோவில்கள், சிறிய கோவில்கள் எல்லாநாளும் திறந்திருக்கிறது. பெரிய கோவில்களும் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் திறந்தே இருக்கிறது. மற்ற மூன்று நாட்களில் பக்தர்கள் அதிகமாக வருவார்கள் - அது கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால் திறக்க வேண்டாம் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டில் அனைத்துக் கோவில்களும் மூடப்பட்டுவிட்டது என்பது சொல்வது முழுப்பொய்.
‘சித்தாந்தங்களை திணிக்க நினைக்கிறார்கள்' என்கிறார் அண்ணாமலை. யாராவது எனது சித்தாந்தத்துக்கு வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் விடுமுறை என்று சொல்வார்களா? சொல்ல மாட்டார்கள்! கோவில்கள் திறந்திருப்பதிலோ, மூடச் சொல்லி இருப்பதிலோ சித்தாந்தம் எதுவும் காரணம் இல்லை. கொரோனாதான் காரணம் ஆகும். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்குதான் தீர்வு. கொரோனா பரவல் குறையக் குறைய கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படுகின்றன. முழுமையாக முற்றுப்புள்ளி வைத்த பிறகு அனைத்தும் தளர்த்தப்படும்.
இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் ஒன்றிய அரசால் சொல்லப்படுபவைதான். ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கிறது பா.ஜ.க அந்த அரசு போடும் கட்டுப்பாடுகள்தான் இவை. கோவிலை மூடச் சொல்கிறது தலைமை பா.ஜ.க திறக்கச் சொல்கிறது தமிழக பா.ஜ.க அந்த அடிப்படையில் பார்த்தால் அண்ணாமலை ஆர்ப்பாட்டம் செய்வது மாநில அரசை எதிர்த்து அல்ல, ஒன்றிய அரசை எதிர்த்துத்தான் இந்த ஆர்ப்பாட்டம் செய்கிறார். அதுவும் அவர் காவல்துறையில் பணியாற்றியவர். ஒன்றிய அரசின் தாக்கீதுகளை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்பது நார்மலான அரசியல்வாதிகளை விட காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும்.
கடந்த ஆகஸ்ட் 28 ஆம் நாள் ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஐ.ஏ.எஸ் அவர்கள் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பினார். “கோவிட் -19 மேலாண்மைக்கான இலக்கு மற்றும் விரைவான நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்காக 29.06.2021 அன்று வெளியிடப்பட்ட ஆணை 30 செப்டம்பர் 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் ஒட்டு மொத்த தொற்றுநோய் நிலைமை இப்போது சில மாநிலங்களில் உள்ளூர் மயமாக்கப்பட்ட வைரஸைத் தவிர, பெரும்பாலும் நிலையானதாகத் தோன்றுகிறது. மேலும், சில மாவட்டங்களில் தொடர்ந்து கவலைக்குரிய விஷயமாகவே உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டும்.
பரிமாற்றத்தின் பரவல், எச்சரிக்கை அறிகுறிகளை அடையாளம் காண்பது முக்கியம். கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வரவிருக்கும் பண்டிகை காலங்களில் பெரிய கூட்டங்களைத் தவிர்ப்பதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்கள் அறிவுறுத்தப்படுகின்றன. மேலும் தேவைப்பட்டால், இது போன்ற பெரிய கூட்டங்களைத் தடுக்கும் நோக்கில் உள்ளூர் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். நெரிசலான அனைத்து இடங்களிலும், கோவிட் பொருத்தமான நடத்தை கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும். கோவிட் -19-ஐ திறம்பட நிர்வகிக்க ஐந்து முறை மூலோபாயத்தில் அதாவது டெஸ்ட் - ட்ராக் - ட்ரீட் - தடுப்பூசி மற்றும் கோவிட் பொருத்தமான நடத்தையை கடைபிடிப்பது குறித்து நாம் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.
தொற்றுநோயை ஒரு நிலையான அடிப்படையில் சமாளிக்க கோவிட் - 19 பொருத்தணமான நடத்தை அமலாக்கம் அவசியம். அதிக வைரஸ் அல்லது குறைந்த வைரஸ் பரவுதல் இல்லாத பகுதிகள் போதிய அளவில் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். கோவிட் -19 ஐ நிர்வகிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்டத்திற்கும் சம்பந்தப்பட்ட மற்ற அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கடுமையான வழிகாட்டு தல்களை வழங்குமாறு நான் உங்களை வலியுறுத்துகிறேன். கோவிட் பொருத்தமான நடத்தையை கண்டிப்பாக அமல்படுத்துவதில் எந்த தளர்ச்சிக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும்” என்று அந்த உத்தரவில் உள்துறை செயலாளர் அஜய் பல்லா சொல்லி இருக்கிறார்.
கொரோனா பரவினால் அதற்கு அந்த பகுதியின் அதிகாரியே பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்கிறது உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு. அதனால்தான் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியம் மாநில அரசுக்கு உள்ளது. இதே அண்ணாமலை ஆர்ப்பாட்டம் செய்த அதே நாள் வெளியான நாளிதழ்களில் இரண்டு செய்திகள். ‘பண்டிகை காலங்களில் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் - பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை' என்பது முதல் செய்தி.
ஒன்றிய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் டெல்லியில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்திருக்கிறார். வரவிருக்கும் பண்டிகை மற்றும் திருமணக் காலங்களில் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். கூட்டமான இடங்களுக்குச் செல்வதையும், தேவையற்ற பயணத்தை தவிர்த்து வீடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களை காணொலி வழியில் கொண்டாட வேண்டும், பொருள்களை இணைய வழியில் வாங்குங்கள் என்றும் லவ் சொல்லி இருக்கிறார்.
ஒன்றிய ரயில்வே வாரியத்தின் செயல் இயக்குநர் நீரஜ் சர்மா, அனைத்து ரயில்வே பொதுமேலாளர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் ரயில் நிலையங்களுக்குள் வரும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவை அடுத்த ஆண்டு ஏப்ரல் 16 வரைக்கும் நீட்டிப்பதாக அறிவித்துள்ளார். பழைய போலீஸ் - புதிய அரசியல்வாதி அண்ணாமலை இதையெல்லாம் பார்க்க வேண்டும். 1680 இல் இறந்து போன சத்திரபதி சிவாஜி, 1967 ஆம் ஆண்டு சென்னைக் கோட்டைக்கு வந்தார் என்று சொல்லும் அளவுக்கு பதற்றத்தில் இருக்கும் அண்ணாமலை அவர்கள், ஒன்றிய அரசு ஒரு மாதத்துக்கு முன், ஒரு நாளுக்கு முன் வெளியிட்ட உத்தரவுகளைப் பார்க்க வேண்டும்.
‘அமைச்சர் சேகர்பாபு பொய் சொல்கிறார்' என்கிறார் அண்ணாமலை. அமைச்சர் சேகர்பாபு உண்மையைத்தான் சொல்கிறார். அதுவும் அய்யப்பன் மீது சத்தியம் செய்து சொல்கிறார். அண்ணாமலை தான் கோயபல்ஸுக்கு சத்தியம் செய்து கொடுத்துவிட்டு வந்தவர் போல பேசிக் கொண்டு வருகிறார்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!