Tamilnadu

“காஷ்மீர் எங்களுக்கு நரகமாகிவிட்டது; அது சொர்க்கமாக இல்லை’’ : பா.ஜ.க அரசால் வெளியேறும் காஷ்மீர் மக்கள்!

“காஷ்மீர் எங்களுக்கு நரகமாகிவிட்டது; அது சொர்க்கமாக இல்லை’’ - என்ற குரல் காஷ்மீரமெங்கும் கூக்குரலாக ஒலிக்கிறது. “1990களில் மோசமான நிலையில் காஷ்மீர் இருந்தபோதுகூட நாங்கள் இந்தப் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறவில்லை. இப்போது சிறுபான்மையினரைக் குறிவைத்துத் தாக்கும் நிலை - எங்களை இந்த நகரை விட்டு வெளியேற வைத்துள்ளது’’ - எனும் அங்கலாய்ப்புகள் கேட்கின்றன.

இந்த அங்கலாய்ப்புகளும் - கூக்குரல்களும் காஷ்மீரின் பல பகுதிகளில் கேட்கத்தொடங்கியுள்ளதை ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ போன்ற ஏடுகள் சுட்டிக்காட்டியுள்ளன. “Kashmiri Pandits flee from Valley” - “காஷ்மீரி பண்டிதர்கள் (காஷ்மீர்) பள்ளத்தாக்கிலிருந்து தப்பி ஓடுகிறார்கள்”- எனப் பதைபதைக்கும் தலைப்பிட்டு ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஐந்து நாட்களில் மட்டும் அப்பாவி காஷ்மீரி மக்கள் ஏழு பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சிறுபான்மைச் சமுதாயத்தினர் சுட்டுக்கொல்லப்பட்டதாகச் செய்திகள் சில ஏடுகளில் வந்தாலும் - சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பாகுபாடின்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

காஷ்மீரி பண்டிட், சீக்கியர், முஸ்லிம் என பல தரப்பட்ட சமுதாயத்தினர் அந்தக் கொடூரக் கும்பலால் கொல்லப்பட்டுள்ளனர். பிந்த்ரூ (Bindroo) என்ற காஷ்மீரி பண்டிட், வீரேந்திர பஸ்வான், முகமது சபி - என சமுதாயப் பாகுபாடின்றி பலரையும் சகட்டு மேனியாகச் சுட்டுச் சாய்த்துள்ளனர்.

ஏன் இந்த அவல நிலை?

2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி 370-வது சட்டப்பிரிவை நீக்கியபோது, அதனால் ஏற்படப்போகும் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என எதிர்க்கட்சிகள் கூறிய கூற்றுகளை பிரதமரோ, உள்துறை அமைச்சரோ காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முடிவு; அது ஜனநாயகப் பாதையிலிருந்து விலகிச் செல்லத் துடிப்பதைக் காட்டுகிறது. இந்திய ஜனநாயகத்தைக் கைவிடும் எவ்வித நடவடிக்கைகளையும், இப்படி அவசர கதியில் எடுப்பதை பா.ஜ.க அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

“சிறப்பு அந்தஸ்தை நீக்கியது பயனற்றது. காஷ்மீர் விவகாரத்தில் வெற்றி பெற்றதாக மோடி அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இதில் நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்பதை வரலாறு நாளை நிரூபிக்கும்” - என, காங்கிரஸ் சார்பில் பேசிய ப.சிதம்பரம் எச்சரித்தார். இப்படி எதிர்க்கட்சியினர் பலரும் விடுத்த எச்சரிக்கைகள் எதையும் மோடி அரசு அன்று காதில் போட்டுக் கொள்ளவில்லை. வழக்கம்போல ஒரு மாபெரும் ஜனநாயக விரோதச் செயலைச் செய்துவிட்டு, தாங்கள் செய்த ஜனநாயகப் படுகொலையை நியாயப்படுத்தி பிரதமர் மோடி மக்களிடையே பேசினார்.

‘காஷ்மீர் மற்றும் லடாக்; உலகின் மிகச் சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்றப்படும்’- இப்படி பிரதமர் மோடி பேசியது 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ந் தேதியன்று! ஆனால் 2021ஆம் ஆண்டு அக்டோபரில் நடைபெறுவதென்ன? காஷ்மீர், பிரதமர் மோடி கூறியபடி சுற்றுலாத்தலமாக மாறியதா என்றால் இல்லை; முன்பிருந்ததை விட படுமோசமான நிலையை எட்டியுள்ளது. வெளியிலிருந்து சுற்றுலாத் தலத்தை அனுபவிக்க யாரும் வரவில்லை.

ஆனால் மோடி அறிவித்த சுற்றுலாத் தலத்தில் வசித்த மக்கள் அலறி அடித்து அந்த நகரிலிருந்து, தங்கள் உடமைகளை விட்டு விட்டு உயிரைக் காத்துக்கொள்ள தப்பி ஓடுகிறார்கள். “காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு அங்கு போர்மேகம் மூளாது; அமைதி உருவாகும்.’’ - இப்படி 2019-ல் பிரதமர் மோடி பேசினார். அவர் பேசி ஆண்டுகள் இரண்டுக்கு மேல் உருண்டோடிவிட்டன.

ஆனால், என்ன நடக்கிறது; அங்கே? அமைதி உருவானதா? 1990களில் இருந்த நிலையை விட பயங்கர நிலையைச் சந்திப்பதாக அங்கிருந்து வெளியேறி ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் கூறிக்கொண்டே ஓடுகின்றனர் என ஏடுகள் செய்தி வெளியிடுகின்றன. 370, 35ஏ சட்டப் பிரிவை நீக்கியது, தேன்கூட்டில் கல்லெறியும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் எச்சரித்தபோது, “370, 35 ஏ இருந்ததால் காஷ்மீரில் தீவிரவாதம், வன்முறை, ஊழல்தான் இருந்தது; காஷ்மீர், ஜம்மு, லடாக் வளர்ச்சி தடைபட்டது.

அதை நீக்கியதால் அந்தப்பகுதிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஷ்மீரில் புதிய சகாப்தம் தொடங்கப்பட்டுள்ளது; தற்போது ஒன்றிய அரசின் நேரடிக்கட்டுப்பாட்டில் காஷ்மீர், லடாக் பகுதிகள் இருப்பதால், காஷ்மீர் பகுதிகளில் இருந்த அசாதாரண நிலை மாறிவிட்டதால் இனி அங்கு சினிமா படப்பிடிப்புகள் கூட நடத்தலாம்; எல்லா மொழி திரையுலகினரையும் அழைக்கிறேன் ” என்றெல்லாம் பிரதமர் மோடி, பேச்சில் தேன் கலந்து பேசியது நினைவிருக்கலாம்!

பிரதமர் பேசியது 2019ஆம் ஆண்டு. இப்போது நடைபெறுவது 2021ஆம் ஆண்டு! இன்று நிலை என்ன?

அவ்வப்போது பனியில் உறைந்து கிடக்கும் காஷ்மீர் இப்போது, பீதியில் உறைந்து கிடக்கிறது. பல குடும்பங்கள் அந்தப் பள்ளத்தாக்கை விட்டு பதறி ஓடிடத் தயாராகிவிட்டனர் என்ற செய்திகள் வருகின்றன!

அங்கு பிரதமர் கூறியபடி சினிமா படப்பிடிப்புகள் நடைபெறவில்லை; சினிமாவில் வரும் காட்சிகளைவிட படுபயங்கரக் காட்சிகள் நித்தம் அரங்கேறுகின்றன. இந்தப் பூவுலகின் சொர்க்கமாக வர்ணிக்கப்பட்ட காஷ்மீரை அங்கு வாழும் மக்களே நரகமாகக் கருதும் அளவு அதனைச் சீரழித்துள்ளது; மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு எடுத்த, ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ முடிவுகள்!

ரஜினிகாந்த் ஒருமுறை ஜெயலலிதா ஆட்சியின் அவலம் குறித்து குறிப்பிடுகையில், “மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’’ - எனக் கூறினார்.

அவர் கூறியதுபோல, பாரதிய ஜனதா ஆட்சி தொடர்ந்தால் இந்தியாவை இனி ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்பதற்குச் சிறந்த உதாரணமே; காஷ்மீர் குறித்து பாரதிய ஜனதா அரசு எடுத்த முடிவும், அதனைத் தொடர்ந்து அங்கு நடைபெறும் படுபயங்கரங்களும்!

“காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்’ என்று பாடல் எழுதிய வாலி, இன்று எழுதினால் “காஷ்மீர்‘ டிரெட்புல்’ (Dreadful) காஷ்மீர்” என்று எழுதியிருப்பாரோ - எனும் நிலையைத்தான் இன்றைய காஷ்மீர், நாட்டு மக்களுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.

- சிலந்தி

நன்றி: முரசொலி

Also Read: நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்.. செல்ஃபி எடுக்க முயன்ற சுற்றுலா பயணிகளை விரட்டிய காட்டு யானை!