Tamilnadu
“கடல்கடந்தும் ஆண்டான் சோழன்.. உலகளாவிய தமிழன் ஆட்சியை நடத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின்”: முரசொலி பாராட்டு!
முரசொலி நாளேட்டின் இன்றைய தலையங்கம் (09-10-2021) வருமாறு:
தமிழ்நாட்டுத் தமிழர்க்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்கள் நலனிலும் அக்கறை கொண்ட ஆட்சியாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்துள்ளது. உலகளாவிய தமிழன் ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடத்தி வருகிறார்கள்.
புலம் பெயர் தமிழர் நலவாரியம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் நேற்று முன்தினம் அறிவித்தது, உலகம் முழுவதும் உள்ள தமிழர் நெஞ்சங்களில் பால் வார்த்துள்ளது. ‘கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது, கடல் கடந்து போன தமிழனின் கண்ணீரால்' என்று எழுதினார் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். இதோ இப்போது முதலமைச்சரின் அறிவிப்பால் ஆனந்தக் கண்ணீர் விடுகிறார்கள் புலம் பெயர் தமிழர்கள்!
தாய்க்கோழியின் அன்போடு குஞ்சுகளைப் பாதுகாக்கும் நெஞ்சோடு முதலமைச்சர் அவர்கள் இந்தச் சொற்களை உச்சரித்தார்கள். புலம் பெயர் தமிழனுக்காகத் துடிக்கும் நெஞ்சம் என்பது இன்று நேற்று உருவானது அல்ல. தி.மு.க.வின் முதல் மாநில மாநாட்டில் பேசும் போது பேரறிஞர் அண்ணா அவர்கள், “இலங்கைவாழ் திராவிட மக்களுக்காக வோட்டு உரிமையைக் கொடுத்து நீதியை நிலைநிறுத்துங்கள். ஜனநாயகத்தைக் கேலி செய்யாதீர். வீண் போக்கு வெற்றியைத் தராது. அதிருப்தி அனல் விரைவில் எழும்பும். அது நல்லதல்ல” என்று 1952 ஆம் ஆண்டே பேசி இருக்கிறார்.
29.1.1956 அன்று சிதம்பரத்தில் நடந்த பொதுக்குழுவில் சிங்கள ஆதிக்கத்துக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை முத்தமிழறிஞர் கலைஞரும், அ.பொன்னம்பலனாரும் கொண்டு வந்தார்கள். “இலங்கையில் சிங்கள மொழி ஆதிக்க ஆட்சியாளர்கள் அங்குள்ள தமிழர்களின் உரிமைகளைப் பறிப்பதோடு, சிங்கள மொழி ஏகாதிபத்தியத்தை ஏற்படுத்த முயலும் போக்கினை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அங்குள்ள தமிழர்களின் விருப்பங்களும் முயற்சிகளும் வெற்றி பெற இப்பொதுக்குழு மனதார விரும்புகிறது. தாய்த் தமிழகத்திலுள்ள தமிழர்கள் அனைவரும் தங்களாலான எல்லா ஆதரவையும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறது” என்பதுதான் அந்தத் தீர்மானம்.
இப்படி 1950 முதல் ஈழத் தமிழினத்துக்காகக் குரல் கொடுத்த இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். அதேபோல் மலேசியாவாக இருந்தாலும், சிங்கப்பூராக இருந்தாலும் எங்கு தமிழர்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக முதல் குரல் கொடுக்கும் இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் இருந்துள்ளது. அந்த நாடுகளில் எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டு செயல்பட்டும் வருகிறது.
அந்த வகையில் பார்த்தால் திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் வாழும் தமிழர்களுக்கான இயக்கமாகத் தான் செயல்பட்டு வருகிறது. புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் உளப்பூர்வமான மற்றும் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வெளிநாடு வாழ் தமிழர் நலச்சட்டம் 2011 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் நாள் கழக அரசால் இயற்றப்பட்டது. வெளிநாடு வாழ் தமிழர் நலவாரியம் ஒன்றை உருவாக்கி அவர்களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவோம் என்று அறிவிக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக அமைக்க முடியவில்லை. அடுத்து வந்த ஆட்சியாளர்களும் இதனை அமைக்கவில்லை. இந்த நிலையில், ‘வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம்' என்ற அமைப்பை மறக்காமல் அமைத்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
பதிமூன்று பேரைக் கொண்டு இந்த வாரியம் அமைக்கப்படும்.
5 கோடி ரூபாய் வெளிநாடு வாழ் தமிழர் நலநிதி உருவாக்கப்படும்.
வெளிநாடு வாழ் தமிழர் குறித்த தரவு தளம் (Data Base) ஏற்படுத்தப்படும்.
தமிழர்கள் பணியின் போது இறக்க நேரிட்டால் அவர்கள் குடும்பத்தில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு, கல்வி உதவித்தொகை, திருமண உதவித் தொகை வழங்கப்படும்.
தமிழர்கள் புலம் பெயரும் பொழுது, பயணப் புத்தாக்கப் பயிற்சி பல்வேறு ஊர்களில் நடத்தப்படும்.
ஆலோசனை பெற வசதியாக கட்டணமில்லாத் தொலைபேசி வசதி மற்றும் வலைதளம், கைப்பேசி செயலி (Mobile application) அமைத்துத்தரப்படும்.
சட்ட உதவி மையம் அமைக்கப்படும்.
தமிழ்நாடு திரும்பியவர்களுக்கு குறு தொழில்கள் செய்திட, அதிகபட்சமாக இரண்டரை இலட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய கடன் வசதி செய்து தரப்படும். இதற்கென ஆறு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
வெளிநாடு வாழ் தமிழர்களின் முதலீடுகளை அரசு மற்றும் தொழில் நிறுவனங்களில் பாதுகாப்பான முதலீடு செய்ய ஏதுவான சூழல் உருவாக்கப்படும்.
புலம் பெயர்ந்த தமிழர்கள், ‘எனது கிராமம்' திட்டத்தின் மூலம் தங்களது சொந்த ஊருக்கு நன்மைகள் செய்து தரலாம்.
புலம் பெயர்ந்தோர் பிள்ளைகள் தமிழ் கற்றுக் கொள்ள வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.
புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் வாழும் அந்தந்த நாடுகளில் உருவாக்கியுள்ள நலச்சங்கங்கள் ஒருங்கிணைக்கப்படும்.
வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ஆம் நாள் உலகத்தமிழர் புலம்பெயர்ந்தோர் தினமாகக்கொண்டாடப்படும். - இவை அனைத்துக்குமாக 20 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!
கரும்புத் தோட்டத்திலே தமிழர் படும் இன்னலை பாரதி எழுதினார். “அவர்கள் கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி வருந்துகிறார்கள். மெய்சுருங்குகிறார்கள். அவர்கள் துன்பம் நீக்க மருந்தில்லையா? வழியில்லையா? தெற்கு மாக்கடலுக்கு நடுவினிலே அங்கோர் கண்ணற்ற தீவினிலே தனிக்காட்டினில் பெண்கள் புழுங்குகின்றனரே!” என்று கண்ணீர் விட்டார் பாரதி!
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு என்று கர்ஜித்தார் பாரதிதாசன். கண்ணீர் துடைத்தலையும், கர்ஜித்தலையும் தாண்டி கைதூக்கி அரவணைத்து அன்பு பாராட்டி வளர்த்தெடுக்கும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் உயர்ந்து நிற்கிறார். கடல்கடந்தும் ஆண்டான் சோழன்! காக்கின்றார் இன்றைய முதலமைச்சர்! இது பேரறிஞர் அண்ணாவின் கனவு! தமிழினத்தலைவர் கலைஞரின் கனவு!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!