Tamilnadu

சாலையில் அடிபட்டுக் கிடந்த பெண்மணி.. தனது காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு காத்திருந்த MLA !

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்த பெண் கூலித் தொழிலாளியை தனது காரில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ எம்.சின்னதுரை.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகெ கூலி வேலையை முடித்துவிட்டு நடந்து சென்ற கந்தர்வக்கோட்டையைச் சேர்ந்த மணிமேகலை (60) என்பவர் மீது வாராப்பூரைச் சேர்ந்த இளைஞர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராவிதமாக மோதியது.

இந்த விபத்தில், பலத்த காயமடைந்த மணிமேகலை சாலையோரம் துடிதுடித்துக் கொண்டிருந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய இளைஞர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, கந்தர்வகோட்டை பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு, அந்த வழியே வந்த கந்தர்வகோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ எம்.சின்னதுரை, காரை நிறுத்தி விசாரித்து, தனது காரிலேயே மணிமேகலையை கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அங்கிருந்தபடியே கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கும், காவல் நிலையத்துக்கும் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

வாகன விபத்தில் சாலையில் அடிபட்டுக் கிடந்த பெண்மணிக்கு சிகிச்சை அளிப்பதற்காக தன்னுடைய வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உதவிய எம்.எல்.ஏவின் மனிதநேயமிக்க செயலை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.

விபத்து ஏற்படுத்திய இளைஞரை போலிஸார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் இருந்து கார் திரும்பி வந்த பிறகே, எம்.எல்.ஏ சின்னதுரை அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணிமேகலை மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: செல்போன் ஆப் மூலம் மக்களின் புகார் மனுக்களை பெற சிறப்பு ஏற்பாடு : தி.நகர் தி.மு.க எம்.எல்.ஏ அசத்தல்!