Tamilnadu
‘ஆட்கொல்லி புலி’ என்பது என்ன? - ஏன் புலிகள் ஆட்கொல்லிகளாக மாறுகின்றன?
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் அட்டகாசம் செய்து வரும் புலி ஒன்றை பிடிப்பதற்கு, 11 நாட்களாக தீவிர தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அது ஆட்கொல்லி புலி என்றும் ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர். இதுதான் அப்பகுதி மக்களின் முக்கிய பிரச்சனையாக தற்போது இருந்து வருகிறது.
ஆட்கொல்லி புலி என்பது என்ன? எந்த வகை புலியை ஆட்கொல்லி புலி என்று அழைப்பார்கள் என்பது குறித்துப் பார்க்கலாம்.
பொதுவாக புலிகள் இரண்டு காரணங்களுக்காக மனிதர்களை தாக்குகின்றன. முதல் காரணம் என்னவென்றால், தற்காப்பு. ஆம், புலியை பார்த்து நாம் பயப்படுவது போல, புலியும் நம்மைப் பார்த்து பயப்படும். மனிதர்களால், தனக்கு ஆபத்து வந்துவிடும் என்பதற்காக, புலி மனிதர்களை தாக்கும். குறிப்பாக, தன்னிடம் உள்ள இரையை அபகரித்துக் கொள்வார்கள் என்றும், தனது குட்டிகளை தாக்குவார்கள் என்றும், மனிதர்களை புலி தாக்கும். இன்னொரு வகை தாக்குதலுக்கு காரணம், அது ஆட்கொல்லி புலியாக மாறுவதுதான்.
ஒரு புலி எப்போது ஆட்கொல்லி புலியாக மாறும்? காட்டின் குறிப்பிட்ட சில பகுதியை கட்டுப்படுத்தும் போட்டி புலிகளிடையே நடைபெறும். இவ்வாறு காட்டை கட்டுப்படுத்தும் போட்டியில் ஒரு புலிக்கும், இன்னொரு புலிக்கும், இடையே சண்டை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவ்வாறு சண்டை ஏற்படும்போது, ஏதேனும் ஒரு புலி தோல்வி அடைந்து, காயமடையும். அவ்வாறு தோல்வி அடைந்த புலி, காட்டின் விளிம்பு பகுதிகளில், வாழ நினைக்கும். அப்போது, வேட்டைக்கு எளிமையாக உள்ள விலங்குகளை மட்டுமே அந்த காயம்பட்ட புலி, வேட்டையாட நினைக்கும்.
அந்த சமயத்தில், மனிதர்கள் யாரையாவது கண்டால், அது அவர்களை வேட்டையாட ஆரம்பிக்கும். இவ்வாறு வேட்டையாடத் தொடங்கும் புலிக்கு, மனித மாமிசத்தின் சுவையும், மனிதர்களை வேட்டையாடுவது எளிது என்பதும் தெரியவரும். இதன் காரணமாக, புலிகள் தொடர்ந்து மனிதர்களை வேட்டையாட ஆரம்பிக்கும். இவ்வாறுதான் ஆட்கொல்லி புலிகள் உருவாகின்றன. ஆனால், பல நேரங்களில், தற்காப்புக்காக தாக்கும் புலிகளை, ஆட்கொல்லி புலிகள் என்று பலரும் தவறாக நினைத்துக் கொள்கின்றனர்.
- கார்த்திகேயன்
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !