Tamilnadu
“சமத்துவ ஆட்சியை உலகுக்கு உணர்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : ‘முரசொலி’ தலையங்கம் பாராட்டு!
முரசொலி நாளேட்டின் இன்றைய தலையங்கம் (04-10-2021) வருமாறு:
இந்தியா சுதந்திர தினத்துக்கான கொண்டாட்டத்தில் இருந்தபோது உத்தமர் காந்தியடிகள், தலைநகர் டெல்லியில் இல்லை. மத நல்லிணக்கம் காக்க எங்கோ ஒரு கிராமத்தில் இருந்தார்!
அந்த உத்தமர் காந்தியடிகள் பிறந்தநாளில், அவரது திருவுருவச் சிலைக்கு தலைநகரில் மாலை அணிவிப்பதோடு தன் கடமை முடிந்து விட்டதாக நினைக்காமல் தென்மாவட்டத்தில் பாப்பாப்பட்டி என்ற ஒரு கிராமத்தில் உட்கார்ந்து இருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
எண்ணத்தை, சிந்தனையை வெளிப்படுத்துவது செயலே! தங்களின் செயல் மூலமாக உத்தமர் காந்தியடிகள் முதல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரைக்கும் உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள். கிராமங்களை முழு அதிகாரம் படைத்த அமைப்புகளாக மாற்றுபவை இந்த கிராம சபைகள்தான். கொரோனா என்ற பெருந்தொற்று குறைந்ததன் அடிப்படையில் கிராம சபைகள் மீண்டும் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அது அந்த நாளுக்கான சடங்காக மட்டும் நடக்காமல் அதிகாரம் பொருந்திய அமைப்புகளாக மாற வேண்டும் என்ற அடிப்படையில் அந்தக் கூட்டத்தில் முதலமைச்சரும் பங்கெடுத்தார். அப்படி தான் பங்கெடுக்கும் இடமாக மதுரை மாவட்டம் பாப்பாப்பட்டி ஊராட்சியைத் தேர்வு செய்ததுதான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
தானும் ஒரு கிராம சபைக் கூட்டத்தில் பங்கெடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் நினைத்திருந்தால் சென்னைக்கு அருகில் ஏதோ ஒரு கிராமத்துக்குச் சென்றிருக்கலாம். ஆனால் உசிலம்பட்டிக்கு அருகேயுள்ள பாப்பாபட்டிக்கு ஏன் போனார்?
பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்கச்சியேந்தல் - ஆகிய கிராமங்கள் வரலாற்றின் பக்கங்களில் பதியப்பட்டுள்ள பகுதிகள் ஆகும். தேர்தலே நடத்த முடியாது என்ற சமூகச் சூழல் நிலவும் பகுதிகளாக அவை இருந்தன. அந்தப் பகுதிகளில் உள்ளாட்சித் துறை அமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் இருந்த போதுதான் 2006 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது.
உள்ளாட்சியில் நல்லாட்சியை மட்டுமல்ல; சமத்துவ ஆட்சியையும் உருவாக்க அன்றைய தினம் மு.க.ஸ்டாலின் அவர்கள் அயராது உழைத்தார்கள். அன்று அவருக்கு மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்து அனைத்துப் பணிகளையும் செவ்வனே செய்தவர்தான் இன்று முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக இருக்கும் த.உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். அவர்கள்!
அன்றைய காலக்கட்டத்தில் என்ன நடந்தது என்பதை முதலமைச்சர் அவர்களே நேற்றைய கிராம சபைக் கூட்டத்தில் சொல்லி இருக் கிறார்கள். “அதுவும் இந்த பாப்பாப்பட்டியை நான் மறக்க முடியாது. அங்கு தேர்தல் நடத்தி முடித்த செய்தியை அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களுக்குச் சொன்னபோது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. இத்தகைய தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சித் தலைவர்களையும் அவ்வூரைச் சேர்ந்த மக்களையும்- மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர்களையும் சென்னை கலைவாணர் அரங்கத்துக்கு அழைத்து பாராட்டு விழாவையே முதல்வர் கலைஞர் அவர்கள் நடத்தினார்கள். அதற்கு ‘சமத்துவப் பெருவிழா’ என்றும் பெயர் சூட்டினோம். அந்த விழாவுக்கு நான்தான் முன்னிலை வகித்தேன். அந்த பாப்பாப்பட்டிக்குத்தான் நான் இப்போது வந்திருக்கிறேன். இந்த நாட்டிலே எத்தனையோ ஊராட்சிகள் இருந்தாலும் பாப்பாப்பட்டியைத் தேடி நான் வந்திருப்பதற்குக் காரணம் இதுதான்.” என்று முதலமைச்சர் சொல்லி இருப்பதை இன்றைய இளைய தலைமுறை எண்ணிப் பார்க்க வேண்டும். எத்தகைய சமூகநீதிப் புரட்சிகள் இந்த நாட்டில் நடந்துள்ளன என்பதை உணர்ந்தாக வேண்டும்.
‘மாபெரும் சபைதனில்' என்ற நூலில் இந்த நிகழ்வுகள் குறித்து விரிவாக எழுதி இருக்கிறார் த.உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். மீண்டும் தேர்தலை நடத்தியாக வேண்டும் என்று முதல்வர் கலைஞரும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் உத்தரவிட்ட பிறகு அந்த ஊருக்குச் சென்றபோது அந்த ஊருக்கு சென்றதும், அந்த ஊரில் உள்ளவர்களை மனமாற்றம் செய்ததும் குறித்து விரிவாக எழுதி உள்ளார்.
ஜாதி ஒழிப்பு என்பது மனமாற்றத்தால் மட்டும் நடந்து விடாது, சட்டத்தின் மூலமாகவும் தான் செய்ய வேண்டும் என்பார் தந்தை பெரியார். அந்த அளவுகோல் அப்போது பயன்படுத்தப்பட்டுள்ளதை அந்த நூலில் விவரித்து இருப்பார். ‘சர்க்கார் உத்தரவு'க்கு அடிபணிந்து அவை நடந்துள்ளன. அன்று சர்க்கார் உத்தரவுக்கு அடிபணிந்து இருந்தாலும் இன்று அது சமத்துவ மாற்றமாக நடந்ததாகவே நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.
அத்தகைய சமத்துவப் பெருவிழாவுக்கு வருகை தந்தவர்களை, ரயில் நிலையத்துக்குச் சென்று வரவேற்றவர்தான் அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சரான இன்றைய முதலமைச்சர் அவர்கள். 13.11.2006 ஆம் நாள் சென்னை கலைவாணர் அரங்கத்தில் அந்த விழா நடந்தது. வெற்றி பெற்ற அனைவரையும் அந்த மேடையில் அமர வைத்தார் முதல்வர் கலைஞர் அவர்கள். என்ன காரணம்? உங்களுக்குப் பின்னால் அரசாங்கம் இருக்கிறது, முதலமைச்சரான நான் இருக்கிறேன் என்பதை அந்தச் செயல் மூலமாக விளக்கினார் முதல்வர் கலைஞர். நேற்றைய தினம் பாப்பாபட்டிக்கு சென்றதன் மூலமாக அதே சமத்துவ ஆட்சியைத் தான் நான் நடத்திக் கொண்டு இருக்கிறேன் என்று காட்டி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
அன்றைய தினம் நடந்ததை வரவேற்று இன்றைய தினம் மக்கள் பேசினார்கள். முதல்வர் கலைஞர் நினைத்த மாற்றம் இன்று நடந்துவிட்டது என்பதை பாப்பாபட்டி மக்கள் முதல்வருக்கு கொடுத்த பாராட்டின் மூலமாக உணரலாம். வரலாற்றின் பக்கங்களில் எப்போதும் பாப்பாபட்டி மறக்க முடியாதது! ‘நான் உண்மையில் இருக்க வேண்டிய இடம் இதுதான்' என்றார் உத்தமர் காந்தியடிகள். அதேபோல், ‘இங்கே உட்கார்ந்திருப்பது தான் என் பெருமை' என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வரலாறு, தீர்ப்பெழுதும் போது நினைவில் வைக்க வேண்டிய நாளாக நேற்றைய தினம் ஆகிவிட்டது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!