Tamilnadu

PSBB ராஜகோபாலன் பாலியல் வழக்கு: 7 பேர் புகார்; 17 சாட்சிகளிடம் விசாரணை; தாக்கலானது குற்றப்பத்திரிகை!

சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவிகளுக்கு அந்தப் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொந்தரவு அளித்து வருவதாக கடந்த மே மாதம் சமூக வலைதளத்தில் தகவல்கள் வெளியானது. இதுதொடர்பாக தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

பள்ளி மாணவிக்கு அந்த பள்ளியில் ஆசிரியராக இருப்பவரே பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் 24 ஆம் தேதி அசோக் நகர் போலிஸார், அந்த பள்ளியின் முன்னாள் மாணவி அளித்த பாலியல் தொந்தரவு புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ பிரிவு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்து ராஜகோபலனை அசோக் நகர் மகளிர் காவல் நிலைய போலிஸார் கைது செய்தனர்.

மேலும் பத்ம சேஷாத்ரி பள்ளி நிர்வாகம் ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து கடும் நெருக்கடிக்கு பின்னர் அவரை பணியிடை நீக்கம் செய்தனர். மேலும் பத்ம சேஷாத்ரி பள்ளியில் பல மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் தொந்தரவு அளித்ததாக ஏராளமான புகார்கள் காவல் துறைக்கு வந்தன. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையரின் உத்தரவுப்படி கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

விசாரணை நடத்திய அசோக் நகர் மகளிர் காவல் நிலைய போலிஸார் 17 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இது விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அசோக் நகர் மகளிர் காவல் நிலைய போலிஸார் தெரிவித்துள்ளனர்.

Also Read: “பள்ளிக்கு சென்ற சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த இளைஞர்” : போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு!