Tamilnadu

“தீரன் பட கொள்ளையர்களையே மிஞ்சிய வடமாநில கும்பலின் கொள்ளை சம்பவம்” : விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ தகவல்!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள களாவூர் கிராமத்தில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் கடந்த 15ம் தேதி ஷெட்டரை உடைத்து முகமூடி அணிந்த மர்ம கும்பல் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருந்தது.

அப்போது , அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலிஸாரின் வாகனத்தைப் பார்த்த உடன் இந்த மர்ம கும்பல் தப்பி ஓடிவிட்டது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை நடத்திவந்தனர்.

மேலும் அரக்கோணம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் ஷெட்டரை உடைத்து சுமார் ரூ.4 லட்சம் பணத்தைக் கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து விசாரணை நடத்திய போது இதே கும்பல்தான் களாவூர் கிராமத்திலும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது போலிஸாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை அமைத்து போலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கும்மிடிப்பூண்டி பகுதியில் போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ராஜஸ்தான் பதிவு கொண்ட லாரி ஒன்று வந்தது.

அந்த லாரியில் வந்தவர்கள் போலிஸாரை கண்டவுடன் தப்பி ஓட முயன்றனர். இதைக் கண்ட போலிஸார் அவர்களை மடக்கி பிடித்தனர். இவர்கள் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சோஹில், லுக்மன், சாஜித், ஹர்சாத் என்பது தெரியவந்தது. இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கும்பல்தான் களாவூர், பெருங்களத்தூர் பகுதியில் ஏ.டி.எம் மையங்களில் கொள்ளையடித்தது என்பது தெரியவந்ததது.

மேலும் இந்த கும்பல் வட மாநிலத்திலிருந்து பருப்பு ஏற்றிச் செல்வதாகக் கூறி, நெடுஞ்சாலையில் ஓரம் இருக்கும் கார்களை திருடிக் கொண்டு ஏ.டிஎம் மையங்களில் கைவரிசை காட்டிவந்துள்ளனர். இதையடுத்து போலிஸார் இந்த கும்பலை கைது செய்து, வேறு எந்தெந்த பகுதிகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: தொழிலதிபர் கடத்தல் வழக்கில் திருப்பம்: குறுக்கு வழியில் சம்பாதிக்க ஆசைப்பட்டு சிறை சென்ற ஒப்பந்ததாரர்!