Tamilnadu

தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏவை பாராட்டி கவுரவித்த மாவட்ட ஆட்சியர்... காரணம் என்ன?

அதிக முறை ரத்த தானம் செய்த கொடையாளர்கள் 40 பேருக்கு கோவை மாவட்டத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ நா.கார்த்திக்கும் மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு பெற்றுள்ளார்.

மனித உயிரை காப்பாற்றும் உயரிய செயலான இரத்ததானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் முதல் நாள் தேசிய தன்னார்வ இரத்ததான நாளாக கொண்டாடப்படுகிறது.

18 வயது முதல் 65 வயது வரை உள்ள ஆரோக்கியமான ஆண் பெண் இருபாலரும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்த தானம் செய்யலாம். இரத்ததானத்தின்போது 350 மில்லி இரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. இரத்ததானம் செய்த பின் 24 மணி நேரத்திற்குள்ளாக நம் உடல் இழந்த இரத்தத்தை ஈடுசெய்துவிடும்.

கோவை மாவட்டத்தில் அரசு ரத்த வங்கிகள் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி, இ.எஸ்.ஐ மருத்துவமனை ஆகிய 4 மருத்துவமனைகளில் செயல்படுகின்றன.

கோவை மாவட்டத்தில் கடந்த 2020-21-ம் ஆண்டு 4 அரசு ரத்த வங்கிகளின் மூலம் 10,925 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளன. அதில், 63 ரத்த தான முகாம்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, 2,884 யூனிட் ரத்தம் பெறப்பட்டுள்ளன.

தன்னார்வமாக இரத்த தானம் செய்வோருக்கு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. அதன்படி 2020-21ஆம் ஆண்டுக்கான தன்னார்வ ரத்த கொடையாளர்கள் 40 பேருக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமை வகித்தார். இவர் தன்னார்வ ரத்த கொடையாளர்களான முன்னாள் எம்.எல்.ஏவும், தி.மு.க மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளருமான நா.கார்த்திக் உள்ளிட்ட 40 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.

Also Read: “குறை இருந்தால் சொல்லுங்கள்..” : கிராம சபைக் கூட்டத்தில் சகஜமாக கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!