Tamilnadu

“பழங்குடியின மக்களுக்கும் ஆன்லைன் வாயிலாக சாதி சான்றிதழ் வழங்கப்படும்”: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்!

பழங்குடியின மக்களுக்கும் மற்ற சாதியினரைப் போல ஆன்லைன் வாயிலாக சாதி சான்றிதழ் வழங்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தேவையற்ற காலதாமதத்தை தவிர்க்கும் நோக்கில், சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமான வரித்துறை சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் உள்ளிட்டவற்றை மின்னணு முறையில் வழங்க அரசு கொள்கை முடிவு எடுத்ததன் அடிப்படையில் வருவாய்த்துறை சார்பில் கடந்த 2010ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

பழங்குடியின மக்கள் சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் போது, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் ஆகியோரின் ஒப்புதல் மற்றும் கருத்துகளைக் கேட்டறிந்து ஆன்லைன் வாயிலாகவே டிஜிட்டல் கையெழுத்துடன் கூடிய சான்றிதழ் வழங்க வருவாய் கோட்டாட்சியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளராக இருந்த அண்ணாமலை ஐ.ஏ.எஸ், தகுதியற்ற நபர்கள் முறைகேடாக பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்குவதை தடுக்க வேண்டும் என தெரிவித்து, இனி பழங்குடியின மக்களுக்கு ஆன்லைன் வாயிலாக சாதி சான்றிதழ் வழங்கக்கூடாதென அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களுக்கும் தனிப்பட்ட முறையில் கடிதம் ஒன்றை எழுதினார்.

இதன் காரணமாக ஆன்லைன் வாயிலாக பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்குவது நிறுத்தப்பட்ட நிலையில் அதனை எதிர்த்தும், மற்ற சாதியினருக்கு வழங்கப்படுவது போல பழங்குடியின மக்களுக்கும் ஆன்லைன் வாயிலாக சாதி சான்றிதழ் வழங்கக் கோரியும் ஆதி பழங்குடி நல சங்கத்தின் பொதுச் செயலாளர் குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கல்யாணசுந்தரம் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துரைசாமி மற்றும் இளங்கோவன் ஆகியோர், பழங்குடியினருக்கான சாதிச்சான்று உரிய நேரத்தில் வழங்காமல் ஆண்டு கணக்கில் கால தாமதம் செய்யப்படுவதால், மாணவர்களின் படிப்பும் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படுவதாகவும், விசாரணை, சரிபார்ப்பு என்ற பெயரில் இழுத்தடிக்க படுவதாகவும், ஆன்லைன் வாயிலாக சான்றிதழ் வழங்கினால் காலதாமதம் தவிர்க்கப்படும் என்றும் எடுத்துரைத்தனர் அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிறப்பிடுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்களை போல இனி பழங்குடியினருக்கும் சாதி சான்றிதழ்களை மின்னணு முறையில் வழங்கப்பட உள்ளதாகவும், விண்ணப்பிப்பவர்களும் ஆன்லைன் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டுமெனவும், இது தொடர்பாக வருவாய்த் துறை ஆணையர் சார்பில் கடந்த 3ஆம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறி அதன் நகலை தாக்கல் செய்தார். அதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Also Read: ”மனிதாபிமானம் மனித உரு கொண்டு முதலமைச்சராக உலா வருகிறது” -மு.க.ஸ்டாலினை புகழ்ந்து சிலந்தி சிறப்பு கட்டுரை