Tamilnadu

”சார்பட்டா கபிலன் மாதிரி போதைக்கு அடிமையாகி வாழ்க்கைய இழக்காதீங்க” : சுகாதார துணை ஆணையர் அறிவுரை!

சார்பட்டா திரைப்படத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் சிக்கல்களைச் சந்திக்கும் கதாநாயகன் போன்று போதைக்கு அடிமையானவர்கள் வாழ்க்கையை இழக்கிறார்கள் என அரசுக் கல்லூரியில் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை துணை ஆணையர் மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை மற்றும் ரியல் அறக்கட்டளை இணைந்து போதைப்பொருள் மற்றும் மறுவாழ்வு கையெழுத்து இயக்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சென்னை மாநாகராட்சி துணை ஆணையர் டாக்டர் மணிஷ் IAS கலந்துகொண்டு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு போதை விழிப்புணர்வு குறித்து கலந்துரையாடினார்.

அப்போது பேசிய டாக்டர் மணிஷ், சார்பட்டா படத்தில் நடிகர் ஆர்யா கள்ளச்சாராயம் குடித்து தனது குடும்பத்தையும் பாக்ஸிங் விளையாட்டையும் இழந்தார். மதுப் பழக்கத்தை விட்ட பின்பு பாக்ஸிங் போட்டியில் ஆர்யா வெற்றி பெற்றார்.

அதுபோன்று போதை மாத்திரை, கஞ்சா உட்கொண்டால் சுய நினைவுகளை இழந்து குற்றச் செயல்களில் ஈடுபட நேரும் என்றும் தங்களது வாழ்க்கையே வீணாகி விடும் என்றும் எச்சரிக்கையோடு அறிவுறுத்தலும் வழங்கினார்.

பின்னர் போதைப்பொருள் மற்றும் மறுவாழ்வு கையெழுத்து இயக்கத்தை துணை ஆணையர் மணிஷ் தொடங்கி வைத்தார். இதனையடுத்து மாணவ மாணவியர் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் ஜெகதீஸ்சன், மண்டல அலுவலர் கோவிந்த ராஜ் மற்றும் கல்லூரி முதல்வர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Also Read: “மகிழ்வுடன் இரத்ததானம் செய்வோம்! மனித உயிர்களை கனிவுடன் காப்போம்!": முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!