Tamilnadu
காலி நிலம்; நோட்டமிட்டு கைமாற்றிய கும்பல்; ரூ.15,000க்காக தாயை வைத்து ஆள்மாறாட்டம் -சிக்கிய மோசடி பேர்வழி
15 ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு பெற்ற தாயை வைத்து ஆள்மாறாட்டம் செய்த ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது தாயார் ஆகிய இருவரும் கைது. சென்னையில் நீண்ட வருடமாக காலியாக கிடக்கும் நிலங்களை குறிவைத்து மோசடி நடத்தும் கும்பலை கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் வசித்து வருபவர் நிர்மலா சுந்தரம். இவர் 1982ம் ஆண்டு சென்னை மடிப்பாக்கம் அருகே தற்போதைய மதிப்பின்படி 2 கோடி ரூபாய் வரை மதிப்பிலான 6160 சதுர அடி நிலத்தை வாங்கி தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக பதிவு செய்திருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நிர்மலா சுந்தரத்தின் இடத்தில் பெயர் தெரியாத ஆட்கள் வந்து நிலத்துக்கு வேலி போடுவதும், அதை சுத்தப்படுத்துவதும் குறித்து நிலத்துக்கு அருகில் உள்ளவர்கள் நிர்மலா சுந்தரத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக சுதாரித்த நிர்மலா சுந்தரம் நிலத்தின் மீது EC போட்டு பார்த்த போது நிர்மலா சுந்தரத்தின் பெயரில் பாஸ்கரன் என்பவருக்கு விற்றதாக நிலம் பதிவு செய்யப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிர்மலா சுந்தரம், உடனடியாக இணையதளம் மூலமாக அமெரிக்காவில் இருந்தபடியே சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் அளித்தார்
இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு ஆவண மோசடி தடுப்பு பிரிவு ஆய்வாளர் தனலட்சுமி, நிர்மலா சுந்தரத்தின் பெயரில் ஆள்மாறாட்டம் நடந்து இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இந்த மோசடி தொடர்பாக நிர்மலா சுந்தரம் போன்ற ஆள்மாறாட்டம் செய்த அன்னபூஷ்பம் (68) என்பவரை கைது செய்து விசாரணை நடத்திய பின்புதான் தெரிய வந்துள்ளது. ஆட்டோ ஓட்டுநரான அவரது மகன் பிரபு என்பவர் 15 ஆயிரம் ரூபாய்க்காக ஆசைப்பட்டு தனது தாயை ஆள்மாறாட்டம் செய்திருக்கிறார். இதனை தொடர்ந்து அவரது மகன் பிரபுவும் கைது செய்யப்பட்டார்.
மேலும் தொடர் விசாரணையில் மகேஷ் என்பவரை கைது செய்துள்ளனர். இந்த மகேஷ் என்பவர்தான் சென்னையில் காலியாக இருக்கும் நிலத்தை நோட்டமிடுவதும், முதற்கட்டமாக அந்த நிலத்தை சுத்தப்படுத்துவது அப்போது யாரும் எந்தக் கேள்வியும் கேட்க ஆள் இல்லை என்றால், இரண்டாம் கட்டமாக நிலத்துக்கு வேலி போடுவது, அப்போதும் யாரும் நிலத்திற்கு உரிமை கோரவில்லை என்றால் மூன்றாவது கட்டமாக ஆள்மாறாட்டம் செய்து ஆவணம் மோசடி செய்து நிலத்தை விற்பதுதான் இந்த கும்பலின் வேலை என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவருக்கு உதவியாக சாலமன், நந்தினி, பாஸ்கரன் ஆகியோர் கும்பலாக சேர்ந்து இந்த நூதன கொள்ளையில் ஈடுபடுவது தெரிய வந்ததைத் தொடர்ந்து இவர்கள் 6 பேரும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த போலியான பத்திரப்பதிவு வேளச்சேரி சார் பதிவாளர் அலுவலகத்தின் மூலமாக தான் நடத்தப்பட்டு இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளதால், வேளச்சேரி சார் பதிவாளர் அலுவலக அதிகாரிகளும் விரைவில் வழக்கில் சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!