Tamilnadu

“ராம்குமார் மின்சாரம் தாக்கி இறக்கவில்லை”: உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்-என்ன நடந்தது?

அ.தி.மு.க ஆட்சியின்போது கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி அடையாளம் தெரியாத மர்ம நபரால் படுகொலை செய்யப்பட்டார்.

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தப் படுகொலை குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அடுத்த சில நாட்களில் திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் ராம்குமார் (22) என்ற இளைஞரைக் கைது செய்தனர்.

ராம்குமார் ஸ்வாதியை ஒரு தலையாக காதலித்ததாகவும், காதலை ஏற்காததால் வெட்டிக் கொன்றதாகவும் போலிஸ் தரப்பில் கூறப்பட்டது. காவல்துறையினர் கைது செய்ய வருவது தெரிந்து உடன் ராம்குமார் தன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக போலிஸார் தெரிவித்தனர்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் அடுத்த சில வாரங்களில் மின்சார ஒயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. ராம்குமார் மரணத்தில் உள்ள மர்மம் வெளிவர நீதி விசாரணை நடத்தவேண்டும் என்று அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

ராம்குமார் மரணம் தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு இந்த வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.

அதன்படி, ராம்குமார் உடலை உடற்கூராய்வு செய்த 2 மருத்துவர்கள் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அவர்கள் ராம்குமார் உடலில் மின்சாரம் பாய்ந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனக் கூறியுள்ளனர்.

“நான் முன்பு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பேராசிரியராக பணியாற்றிய போது ராம்குமார் என்ற நபரின் மூளை மற்றும் இதர உறுப்புகள் திசு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. நானும் இன்னொரு மருத்துவரும் பரிசோதனை செய்தோம்.

மூளைத் திசு பரிசோதனை செய்ததில் நல்ல நிலையில் இருந்தது. இதய திசுக்களை பரிசோதனை செய்ததில் அதுவும் நல்ல நிலையில் இருந்தது. நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், மேலுதடு, கீழுதடு, சிறுநீரகம் போன்றவற்றின் திசுக்களை பரிசோதனை செய்து அறிக்கையில் அவை நல்ல நிலையில் இருந்ததாக சான்று வழங்கி இருக்கிறோம்” என உடற்கூராய்வு மருத்துவர் கூறியுள்ளார்.

ராம்குமார் மின்சாரம் தாக்கி உயிரிழந்தாக காவல்துறையினர் கூறிய நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை அவரது மரணம் மின்சாரத்தில் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளது.

இதனால் ராம்குமார் மின்சாரம் தாக்கி உயிரிழக்கவில்லையெனில் அவரது மரணம் எவ்வாறு நிகழ்ந்தது எனவும், யாரைக் காப்பாற்ற அ.தி.மு.க ஆட்சியில் போலிஸார் தவறான தகவலை அளித்தனர் என்பது குறித்தும் அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளன.

Also Read: கொடநாடு வழக்கு.. கொள்ளை நடந்த அன்றே குற்றவாளிகளை தப்பிக்க வைத்த அ.தி.மு.க முக்கிய புள்ளி?: ‘பகீர்’ தகவல்!