Tamilnadu

Operation Disarm-ன் அடுத்த அதிரடி... கத்தி, அரிவாள் தயாரிப்பை கண்காணிக்க டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவு!

அரிவாள் போன்ற ஆயுதங்களை வாங்க வருவோரின் பெயர், முகவரி, கைபேசி எண்களைப் பெறவும், ஆயுதங்கள் தயாரிப்பை கண்காணிக்கவும் போலிஸாருக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

முந்தைய ஆட்சியில் சீர்கெட்டிருந்த சட்டம் ஒழுங்கை சீர்படுத்த தமிழக காவல்துறை நடத்திவரும் அதிரடி ஆபரேஷன் மூலம் இதுவரை 3,325 ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 1,117 கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், ‘ஆபரேஷன் டிஸ்ஆர்ம்’-ஐ தொடர்ந்து தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு போலிஸ் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

இந்நிலையில், கத்தி மற்றும் அரிவாள் வாங்க வருவோர் குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்ளுதல் கட்டாயம் என காவல்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்விரோத கொலைச் சம்பவங்களைத் தொடர்ந்து மாநில அளவில் எடுக்கப்பட்ட ‛ஆபரேஷன் டிஸ்ஆர்ம்' என்னும் தேடுதல் வேட்டையில் சுமார் 3,325 கொலைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, கொலைச் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படும் 1,110 கத்திகள் மற்றும் 7 கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பவர்கள், தயாரிக்கும் இடங்களை கண்டறிய வேண்டும். பயங்கர ஆயுதங்களை வாங்க வருவோரின் பெயர், முகவரி, கைபேசி எண், எந்த காரணத்திற்காக வாங்குகிறார் போன்றவற்றை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

விவசாயம், வீட்டு உபயோகம் அல்லாமல் மற்ற காரணங்களுக்காக கத்தி போன்ற ஆயதங்களை அடையாளம் தெரியாதவர்களிடம் விற்பனை செய்யக்கூடாது. கண்காணிப்பு கேமராக்களை கடை மற்றும் பட்டறைகளில் பொருத்தப்பட வேண்டும்.

கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதில் சிரமம் ஏற்பட்டால் காவல்துறை உதவி செய்ய வேண்டும். குற்றவாளிகள் பற்றிய தகவல்களை காவல்துறைக்கு தெரிவிப்பவர்களுக்கு தக்க வெகுமதி வழங்க வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: தமிழ்நாடு முழுக்க இரவோடு இரவாக 560 ரவுடிகள் கைது : ரகசிய ஆபரேஷன் நடக்க இதுதான் காரணமா?