Tamilnadu
”அதிமுகவின் அவலத்தால் தளர்ந்த தமிழகம்; திமுகவின் அதிரடியால் தலை நிமிர்கிறது” - தினகரன் நாளேடு புகழாரம்!
10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களால் தளர்ந்த தமிழகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உறுதியான நடவடிக்கையால் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டது. ஓட்டம் பிடித்த தொழில் நிறுவனங்கள் மீண்டும் தமிழகம் பக்கம் பார்வையை வீசத் தொடங்கியிருப்பது தலை நிமிரும் தமிழகத்தின் நல்ல அறிகுறி என ‘தினகரன்’ நாளேடு 29.09.2021 தேதியிட்ட இதழில் ‘தலை நிமிரும் தமிழகம்’ என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியுள்ளது.
அது பற்றிய விவரம் வருமாறு:-
10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களால் தமிழகம் தளர்ந்து விட்டது. ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்து 4 மாதங்கள் எட்டிய நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் உறுதியான நடவடிக்கையால் தமிழகம் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டது. அத்தனை வளங்கள் இருந்தும் உறுதியான தலைமை இல்லாததால் ஓட்டம் பிடித்த தொழில் நிறுவனங்கள் மீண்டும் தமிழகம் பக்கம் பார்வையை வீசத் தொடங்கியிருப்பது தலைநிமிரும் தமிழகத்தின் நல்ல அறிகுறி.
காமராஜர் ஆட்சிக் காலத்தில் இருந்து தொழிற்துறையில் தமிழகம் எப்போதும் முதலிடம்தான். பெரும் பொருளாதார பலம் மிக்க மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களைப் போல் தமிழகத்தின் வளர்ச்சியும் எப்போதும் உயர்ந்தே இருந்தது. கார் தொழிற்சாலையின் பூங்காவாக சென்னையை. மாற்றினார் கலைஞர். எண்ணற்ற கார் நிறுவனங்கள் இங்கே கார்களை உற்பத்தி செய்து உலகம் முழுவதும் அனுப்பி வைத்தன என்றால் கலைஞர் எடுத்த நடவடிக்கையின் மகத்துவம் அனைவருக்கும் புரியும்.
அதேபோல் சென்னை மட்டுமல்லாமல் ஒவ்வொரு முக்கிய நகரத்திலும் ஐ.டி. பூங்காக்கள் திறக்கப்பட்டன. அதோடு சிப்காட் தொழிற் பூங்காக்கள் அமைக்கப்பட்டு, தொழிற்சாலைகளுக்கு நிலம் ஒதுக்கி கொடுக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்புகள், உற்பத்தி திறன், தொழிற்திறன் அதிகரிக்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.க. ஆட்சியால் தமிழகத்தின் வளர்ச்சி வேகம், தொழிற்திறன் அத்தனையும் முடக்கப்பட்டன. சிறு நகரங்களின் வளர்ச்சி முடக்கப்பட்டு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமே தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மண்டலமாக கருதப்பட்டன அல்லது இங்கு மட்டுமே அத்தனை வசதிகளும் கிடைத்தன.
தற்போது எல்லாம் மாறிவிட்டது. தளர்ந்து இருக்கும் கோவை தொழில் மையத்திற்கு நம்பிக்கை ஊட்டியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். திருப்பூர் ஜவுளி தொழில், ஈரோடு சாயப்பட்டறை. உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களின் அத்தனை பிரச்சினைகளும் இப்போது முதல்வர் கையில். அதோடு கொரோனாவால் நலிந்த, மூடப்பட்ட சிறு குறு நிறுவனங்களின் பிரச்சினையை தீர்த்து மீண்டும் வளர்ச்சிப்பாதையில் தொழில் துறையை கொண்டு செல்ல அத்தனை நடவடிக்கைகளும் மின்னல் வேகத்தில் எடுக்கப்பட்டு வருகின்றன. இத்தனைக்கும் சிகரம் வைத்தாற்போல் தமிழகத்தில் முதன்முறையாக போயிங் விமான பாகம் தயாரிப்பு தொழிற்சாலை ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகி இருக்கிறது.
இந்த திட்டம் தமிழக வரலாற்றில் ஒரு மைல் கல். அத்தனைக்கும் ஊக்கசக்தியாக இருப்பவர் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின். கலைஞரால் தொடங்கப்பட்டு அ.தி.மு.க. ஆட்சியால் புதைக்கப்பட்ட நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா போன்று தமிழகம் முழுவதும் நிறுத்தப்பட்ட தொழிற்திட்டங்களும் நிச்சயம் தி.மு.க. ஆட்சியில் மீண்டும் உயிர்பெறும். அப்போது அந்தப் பகுதி இளைஞர்களுக்கு அந்த பகுதியிலேயே நல்ல வேலைவாய்ப்பு கிடைப்பதுடன் சென்னையைப் போல் ஒட்டுமொத்த தமிழகமும் முழுமையான பொருளாதார வளர்ச்சி பெற்ற பகுதியாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.
இவ்வாறு ‘தினகரன்’தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!