Tamilnadu

சிங்கார சென்னை 2.0 செயல்படுத்த வெளியானது வழிகாட்டு நெறிமுறைகள்: என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன?

பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தவும், சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும் சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து 2021-22ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தை செயல்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 42 உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சரியான முன்னேற்றம் இல்லாததால் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், சென்னை மாநகர கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும் சிங்கார சென்னை 2.0 என்னும் புதிய திட்டம் தமிழக அரசால் தீட்டப்பட்டு இவ்வாண்டு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இத்துடன் வேறு பல திட்டங்களை இணைத்து பெருநகர சென்னை மாநகராட்சியில் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் மற்றும் சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மநாகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சர்வதேச தரத்திற்கு இணையாக வாழ்வாதாரத்தை மேம்படுத்த சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் "தூய்மை சென்னையின்" கீழ் குப்பை மற்றும் கழிவுகளை உயிரியல் அகழ்ந்தெடுத்தல் முறையில் நீக்கி நிலத்தை மீட்டெடுத்தல், நுண்ணிய உர மையங்களை வலுப்படுத்துதல், கட்டிடம் மற்றும் இடிபாடு கழிவுகள் நவீன முறையில் அகற்றுதல், குடிசைப்பகுதிகளில் தேங்கும் அதிகப்படியான குப்பை கழிவுகளை அகற்றுதல், இறைச்சிக் கூடங்கள் மற்றும் வணிக வளாகங்கள் நவீன மயமாக்குதல் உள்ளிட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

பசுமை சென்னையின் கீழ் மாநகரம் முழுவதும் பெருமளவில் மரங்கள் நடுதல், நீர்மிகு சென்னையின் கீழ் குடிநீர் வழங்கல், நீர்நிலைகள் மற்றும் நீர்வழித் தடங்களை புனரமைத்து பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த இடமாக கொண்டு வருதல் உள்ளிட்ட பணிகளும், எழில்மிகு சென்னையின் கீழ், பாரம்பரியக் கட்டடங்களை புனரமைத்து வண்ண விளக்குகளால் ஒளிரூட்டுதல்,பாலங்களின் கீழ்பகுதிகள், சாலை இணைப்புகள் மற்றும் சாலை மையத்தடுப்புகள் அழகுபடுத்தப்படுத்துதல், நகரின் உட்கட்டமைப்பு வசதிகள், புதிய சாலைகள், பாலங்கள், தெருவிளக்குகள் மற்றும் மழைநீர் வடிகால்கள் அமைப்பதன் மூலம் தொடர்ந்து மேம்படுத்துதல், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் நடைபாதைகளை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

நலன் மிகு சென்னையின் கீழ், பொதுக் கழிப்பறைககள் அமைத்தல், நகரம் முழுவதும் நன்கு பராமரிக்கப்பட்ட மற்றும் தரமான பொது கழிப்பறைகள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வசதிகளை ஏற்படுத்துதல் மோட்டார் அல்லாத வாகனப் போக்குவரத்து ஊக்குவித்தல், விரிவாக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைத்து ஒவ்வொரு வீட்டையும் கழிவுநீர் அமைப்புடன் இணைத்தல் ஆகியவையும்,

"கல்வியியல் சென்னை"

கல்வியியல் சென்னையின் கீழ், சென்னைப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், படிப்பதற்கு வீட்டில் போதுமான இடம் இல்லாத பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான கற்றல் மையங்களை ஏற்படுத்துதல், நவீன நூலகங்கள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, சிங்கார சென்னை 2.0 திட்டப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்கவும், கண்காணிக்கவும், தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் அவர்களின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவில் நிதித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் இத்திட்டப் பணிகளுக்கான தொடர்பு அமைப்பாக செயல்படும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: தமிழ்நாட்டில் வருகிறது ’திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு சட்டம்’ : திமுக அரசை பாராட்டிய சென்னை ஐகோர்ட்