Tamilnadu
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் முதல் கிராம சபைக்கூட்டம்: பாப்பாப்பட்டி முக்கியத்துவம் பெறுவது ஏன்?
தமிழ்நாட்டில் அக்டோபர் 2ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் கிராம சபைக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அக்டோபர் இரண்டாம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை மாவட்டத்தில் உள்ள பாப்பாப்பட்டி கிராமத்தில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். இதனையடுத்து பாப்பாப்பட்டி கிராமம் தற்போது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஏனெனில், பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சித் தேர்தலே நடத்தப்படாமல் இருந்த மதுரை மாவட்டத்தில் உள்ள பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கொட்டக்கச்சியேந்தல் போன்ற ஊராட்சி மன்றங்களில் 2006ல் ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தல் நடத்த உத்தரவிட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
மேற்கண்ட ஊராட்சி மன்றங்களில் பட்டியலினத்தவர்தான் ஊராட்சி மன்றத் தலைவராக வேண்டும் என்பதற்காகவே, “சுழற்சி முறையிலான இடஒதுக்கீட்டை” நீட்டித்து, முதல் உத்தரவு பிறப்பித்து உள்ளாட்சித் தேர்தலை நடத்தியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதன்படி, தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது, மேற்கண்ட உள்ளாட்சி மன்றங்களில் எல்லாம் தேர்தலை வெற்றிகரமாக நடத்திக்காட்டினார்.
அதன் பிறகு வெற்றிபெற்ற கிராம ஊராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள், கிராம சமுதாயத் தலைவர்கள் ஆகியோரை அழைத்து சென்னையில் முதலமைச்சர் தலைமையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 2006ம் ஆண்டு நவம்பர் 11ம் நாள் சமத்துவப் பெருவிழா நடத்தப்பட்டது.
அப்போது உரையாற்றிய மு.க.ஸ்டாலின், கீரிப்பட்டி, கொட்டகச்சியேந்தல் ஆகிய கிராமப் ஊராட்சிகளுக்கு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தலா ரூபாய் 20 லட்சம் வழங்கப்படும் என்றும் பாப்பாபட்டி, நாட்டார் மங்கலம் கிராம ஊராட்சி ஒன்றியத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நிதியிலிருந்து தலா ரூபாய் 20 இலட்சம் நிதி வழங்கப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி நிதியும் வழங்கப்பட்டது.
இதன் காரணமாகவே தற்போது பாப்பாப்பட்டி கிராம சபைக்கூட்டம் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.
Also Read
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!