Tamilnadu
2010 முதல் 2019 வரையிலான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதாளர்கள் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்கு 2010 முதல் 2019 வரை பத்து விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெருமுயற்சியால் இந்தியாவில் முதன்முறையாக தமிழ் மொழியானது 2004–ஆம் ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. செம்மொழித் தமிழுக்கென தனித்தன்மையுடன் ஓர் நிறுவனத்தை தொடங்கப்பட வேண்டும் என்ற முத்தமிழறிஞர் அவர்களின் கனவினை நிறைவேற்ற, ஒன்றிய அரசினை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதன் அடிப்படையில், 2006-இல் இந்திய மொழிகளுக்கான நடுவண் நிறுவனத்தின் ஒரு அங்கமாக இந்நிறுவனம் அமைக்கப்பட்டது. பின்னர் 2008-ஆம் ஆண்டில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் என தன்னாட்சி பெற்ற நிறுவனமாக சென்னையில் அமைக்கப்பட்டது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் ஆவார்.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசால் தோராயமாக 17 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்நிலத்தினை சமன் செய்ய ரூ.1.45 கோடி நிதி வழங்கப்பட்டது.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முக்கியத்துவம் கருதி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமது சொந்த நிதியிலிருந்து ரூ.1 கோடி நிதியினை வழங்கி கலைஞர்.மு.கருணாநிதி செம்மொழித் தமிழாய்வு அறக்கட்டளையை அந்நிறுவனத்தில் நிறுவினார். அவ்வறக்கட்டளையின் வாயிலாக செம்மொழித் தமிழாய்வுக்கு சிறந்த பங்களிப்பினை வழங்கிய அறிஞர் பெருமக்களுக்கு ஆண்டுதோறும் கலைஞர்.மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது இந்தியாவிலேயே உயரிய விருதாக ரூ.10 இலட்சம் பரிசுத்தொகையுடன் பாராட்டுச்சான்றிதழும், கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உருவச்சிலையும் அடங்கியதாகும்.
தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் ஆகிய துறைகளில் செம்மொழித் தமிழாய்வுக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள அறிஞருக்கு இவ்விருது வழங்கப்படும்.
அறக்கட்டளை துவங்கப்பட்ட பின் 2009ஆம் ஆண்டிற்கான முதல் விருது பின்லாந்து நாட்டு அறிஞர் பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா அவர்களுக்கு 2010, ஜூன் 23 அன்று கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அன்றைய குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது 2010 முதல் 2019 வரையிலான பத்து ஆண்டுகளுக்கு வழங்கப்படாமல் இருந்தது. தற்போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வளர்ச்சிக்கான முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அவ்வகையில் நிறுவனத்தின் 8 வது ஆட்சிக்குழுக் கூட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் 30.08.2021 அன்று நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அமைக்கப் பெற்ற விருதுத் தேர்வுக்குழுவினரால் கீழ்க்காணும் பத்து விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்:
2010 – முனைவர் வீ.எஸ். இராஜம், (Former Senior Lecturer, Department of South Asia Regional Studies, University of Pennsylvania) .
2011 – பேராசிரியர் பொன். கோதண்டராமன் (மேனாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை)
2012 - பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி (மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்)
2013 - பேராசிரியர் ப. மருதநாயகம் (மேனாள்இயக்குநர், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம், மேனாள் பதிவாளர், புதுவைப் பல்கலைக்கழகம்)
2014 – பேராசிரியர் கு. மோகனராசு (மேனாள்பேராசிரியர்&தலைவர், திருக்குறள்ஆய்வுமையம், சென்னைப்பல்கலைக்கழகம், சென்னை)
2015 – பேராசிரியர். மறைமலை இலக்குவனார் (மேனாள்தமிழ்ப்பேராசிரியர், மாநிலக்கல்லூரி)
2016 – பேராசிரியர் கா. ராஜன் (மேனாள் பேராசிரியர், வரலாற்றுத் துறை, புதுவைப் பல்கலைக்கழகம்),
2017 – பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ், Professor and Head of the Institute of Indology and Tamil Studies, Cologne University, Germany.
2018 – கவிஞர் ஈரோடு தமிழன்பன் (மேனாள் தமிழ்ப் பேராசிரியர், புதுக் கல்லூரி, சென்னை).
2019 – பேராசிரியர் கு.சிவமணி (மேனாள்முதல்வர், கரந்தைப் புலவர் கல்லூரி, தஞ்சாவூர் & திருவள்ளுவர் கல்லூரி, நெல்லை).
2010 முதல் 2019 வரையிலான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகளுக்கான விருதாளர்கள் பட்டியல் மீது 30.08.2021 அன்று நடைபெற்ற செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் 8வது ஆட்சிக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேலும் 2020, 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளுக்குரிய கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகளுக்கான முன்மொழிவுகளைப் பெறுவதற்கு விளம்பரம் வெளியிடவும் ஆட்சிக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
2010 முதல் 2019 வரையிலான பத்து ஆண்டுகளுக்குரிய கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது, தமிழறிஞர்கள் மற்றும் தமிழ்நாட்டு பெருமக்களின் முன்னிலையில் மாநில அளவிலான தமிழ்மொழி சார்ந்த விழாவில் கூடிய விரைவில் வழங்கப்படவுள்ளது. மேலும் 2020, 2021 மற்றும் 2022 ஆண்டுகளுக்கான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்கான பணிகள் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தால் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!