Tamilnadu

நாட்டிலேயே முதல்முறை... மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செயல்பாட்டுக்கு வந்தது அசத்தலான திட்டம்!

இந்தியாவிலேயே முதல் முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அமெரிக்கத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வயர்லெஸ் பயோ சென்சார் கருவியுடன் கொரோனா நோயாளிகளை கண்காணித்து சிகிச்சை அளிக்கும் முறை பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

கொரோனா பேரிடர் காலத்தில் நோயாளிகளை மருத்துவக்குழுவினர் அடிக்கடி அருகே சென்று கண்காணிக்க இயலாது. போதிய பாதுகாப்பு உபகரணங்களுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தாலும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவப் பணியாளர்கள் பலர் உயிரிழக்கவும் நேரிட்டது.

கொரோனா பரவல் அச்சம் இன்னும் ஓயாத நிலையில், தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பெற்ற பின்னர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை முடுக்கிவிட்டுள்ளது.

நாட்டி லேயே முதல் முறையாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் கொரோனா நோயாளிகளை அமெரிக்க தொழில்நுட்பத்தில் தயாரான வயர்லெஸ் பயோ சென்சார் கருவி மூலம் கண்காணித்து சிகிச்சை அளிக்கும் முறையை சமீபத்தில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தொடங்கிவைத்தார்.

பின்னர் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், “கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் அதிகமான நோயாளிகளை குறைவான பணியாளர்களை கொண்டு கண்காணிப்பது சிரமம். இதுபோன்ற தொழில்நுட்பங்கள் தொற்று நோய் காலத்தில் அவசியமானது” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் ரத்தினவேலு பேசுகையில், “மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு லைப் சயின்ஸ் நிறுவனம் ஆயிரம் வயர்லெஸ் பயோ சென்சார் கருவிகளை வழங்கி உள்ளது. இக்கருவிகள் ஐசியூவில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் உடலில் பொருத்தப்படும்.

இதன் மூலம் நோயாளியின் சுவாசம், இதயத் துடிப்பு, ஆக்சிஜன் அளவு, வெப்பநிலை உள்ளிட்ட 6 விதமான உடலியக்கச் செயல்பாடுகளை அறிந்து கொள்ளலாம்.

மருத்துவமனையில் உள்ள நர்ஸிங் ஸ்டேஷனில் வைத்து கருவி மூலம் சேகரிக்கும் தகவல்களை ஒருங்கிணைத்து நோயாளிக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்கலாம். இந்தக் கருவியை நோயாளியின் உடலில் பொருத்துவதால் எந்தவொரு பிரச்னையும ஏற்படாது. இதன் மூலம் ஒரு செவிலியர் 50 நோயாளிகளைக் கண்காணிக்க முடியும்.” எனத் தெரிவித்தார்.

Also Read: 2010 முதல் 2019 வரையிலான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதாளர்கள் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!