Tamilnadu

“தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்” : 4 பேர் படுகாயம் - நடுக்கடலில் நடந்தது என்ன ?

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் நேற்று மதியம் சிவகுமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரது அண்ணன் சிவா அவரது தந்தை சின்னத்தம்பி ஆகிய மூன்று பேர் மீன்பிடிக்க சென்றனர்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு கோடியக்கரை தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 பைபர் படகில் வந்த இலங்கை கடற் கொள்ளையர்கள் சின்னத்தம்பி படகை வழிமறித்து இவர்களது படகில் கத்தியுடன் ஏறி சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் சிவகுமாரை இலங்கை கடற் கொள்ளையர்கள் கத்தியால் வெட்டியுள்ளனர். இதில் சிவகுமார் தலையில் பலத்த வெட்டுக்காயங்களுடன் படகிலேயே சரிந்து விழுந்தார். மேலும் படகில்யிருந்த சிவா மற்றும் சின்னத் தம்பிக்கு ஆகியோரை இரும்பு பைப்பால் கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர்.

மேலும் படகில் இருந்த 400 கிலோ வலை, ஜிபிஎஸ் கருவி, செல் உள்ளிட்ட 4 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இதனையடுத்து இன்று அதிகாலை கரை திரும்பிய ஆறுகாட்டுத்துறை மீனவர்களை சக மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிவக்குமாருக்கு தலையில் வெட்டுக் காயம் உள்ளதால் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் மீன் அவரிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இந்திய எல்லைக்குள் தொடர்ந்து அத்துமீறல் நடப்பதால் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.

Also Read: “போலிப் பெருமையாக உயிர்காக்கும் தடுப்பூசியை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் மோடி அரசு” : முரசொலி சாடல்!