Tamilnadu

மாஸ்டர் ஃபிளான்.. 2 நாளில் 2,512 ரவுடிகள் கைது: தமிழ்நாடு முழுவதும் தேடுதல் வேட்டையில் இறங்கிய காவல்துறை!

தமிழ்நாட்டில் தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், காவல்துறை டி.ஜி.பியாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு சிறப்பு ஆபரேஷன் மேற்கொள்ள அனைத்து மாவட்ட எஸ்.பிக்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் நேற்று இரவு கடந்த ஐந்து ஆண்டுகளில் கொலை குற்றங்களில் ஈடுபட்டவர்களில் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

சென்னை புளியந்தோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரவுடிகளின் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்ட நிலையில் அவர்களிடமிருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தமிழ்நாடு முழுவதும் குற்றச் செயல்களில் தொடர்புடையவர்களை கைது செய்வதில் போலிஸார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 2512 ரவுடிகளை போலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஐந்து துப்பாக்கிகள், 934 அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும்,1927 ரவுடிகள் நன்னடத்தை பிணை பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளனர். ஏற்கனவே கொலை உள்ளிட்ட கொடூர குற்றங்களில் ஈடுபட்ட 733 பேர் சிறையில் உள்ளனர்.

இதையடுத்து, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் ரவுடிகள் செயல்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் பாயும். இதில் பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என டி.ஜி.பி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.

Also Read: 5வது முறையாக துப்பாக்கிச் சூடு; தலைநகரிலேயே மோடி அரசின் லட்சணம் இதுதான்!