Tamilnadu

மூக்கு, காதில் விஷம் ஊற்றி ஆணவக்கொலை... 13 பேர் குற்றவாளிகள்.. 18 ஆண்டுகளுக்குப் பிறகு பரபரப்பு தீர்ப்பு!

கண்ணகி - முருகேசன் தம்பதி ஆணவக்கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

விருதாச்சலம் அருகே சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட கண்ணகி - முருகேசன் தம்பதி, அ.தி.மு.க ஆட்சியின்போது கடந்த 2003ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் தேதி உறவினர்களால் ஆணவக் கொலை செய்யப்பட்டனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிகண்ணு மகன் முருகேசன் (25). தலித் சமுதாயத்தைச் சேர்ந்த முருகேசன் பி.இ பட்டதாரி.

இவர் அதே பகுதியில் வசித்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த துரைசாமி மகள் கண்ணகி (22) என்பவரை காதலித்து வந்தார். இதனையடுத்து இருவரும் கடந்த 2003 மே 5ஆம் தேதி கடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்துகொண்டனர்.

முருகேசன், கண்ணகியை விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டிலுள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு அவர் வண்ணாங்குடிகாட்டிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். கண்ணகியை காணாமல் தேடிய அவரது உறவினர்களுக்கு காதல் விவகாரம் தெரியவந்தது.

இதையடுத்து முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி மூலமாக ஜூலை 8-ஆம் தேதி முருகேசனையும், கண்ணகியையும் அழைத்துவந்தனர். இருவரையும் அருகிலுள்ள மயானத்துக்கு அழைத்துச் சென்று இருவருக்கும் மூக்கு, காது வழியாக விஷத்தை செலுத்தி அவர்களைக் கொலை செய்து, சடலங்களை தனித்தனியாக எரித்தனர்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் தற்போது கடலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கண்ணகி - முருகேசன் தம்பதி ஆணவக் கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என நீதிபதிகள் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆணவக்கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான தண்டனை குறித்த விவரங்கள் இன்னும் சில மணிநேரத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: நீதிமன்றம் கண்டித்தும் மகளை தேடிப் பிடித்து வெட்டிக் கொன்ற தந்தை : ராஜஸ்தானில் நடந்த ஆணவக்கொலை!