Tamilnadu

“எழுத்து அறிவுடன் திகழ்ந்த தமிழர்கள்” : 7ம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு - வியக்க வைக்கும் கீழடி ஆய்வுகள்!

கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்து வந்த ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு பெற்றன. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட நான்கு தளங்களிலும் கடந்த பிப்ரவரி 13ம் தேதி தொடங்கிய அகழாய்வு பணிகள் கொரானோ பரவல் காரணமாக நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கின, மணலூரில் எதிர்பார்த்த பொருட்கள் கிடைக்காததால் பணிகள் நிறுத்தப்பட்டு விட்டன. கீழடி, அகரம், கொந்தகையில் பணிகள் நடந்து வந்தன.

செப்டம்பர் மாத கடைசி வரை பணிகள் நடைபெறும் என்ற சூழலில் பெரும்பாலான அகழாய்வு பணிகள் முடிவடைந்து விட்டன. கீழடி, அகரம், கொந்தகை ஆகிய மூன்று தளங்களையும் வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது.

கீழடியில் வீடியோ, போட்டோ எடுக்கும் பணிகள் முடிவடைந்து விட்டதால் அகழாய்வு தளங்களில் உள்ள எட்டு குழிகளும் தார்ப்பாய் வைத்து மூடப்ப்டடுள்ளன. அகரத்தில் இன்னமும் வீடியோ எடுக்கப்படாததால் குழிகள் அனைத்தும் மழை காரணமாக தார்ப்பாய் வைத்து மூடப்பட்டுள்ளன.

கொந்தகையில் இன்று மாலை வீடியோ, புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற உள்ளது. தொல்லியல் அலுவலர்கள் தரப்பில் கூறுகையில் கீழடி, அகரம், கொந்தகை ஆகிய மூன்று தளங்களிலும் தலா எட்டு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து முடிந்துள்ளன.

தொடர்ந்து மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் குழிகள் அனைத்தையும் பாதுகாப்பாக தார்ப்பாய் போட்டு மூடி வைத்துள்ளோம், பொதுப்பணித்துறை திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்க ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. அதுவரை குழிகள் மூடப்பட்டே இருக்கும் என்றனர். அகழாய்வு குழிகள் மூடப்பட்டிருப்பதால் பார்வையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

அரசு திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணியை விரைவு படுத்தினால் பண்டைய கால மக்கள் பயன்படுத்திய இடங்கள், பொருட்களை காணலாம் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கீழடி, அகரம், கொந்தகை ஆகிய மூன்று தளங்களிலும் இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. உறைகிணறுகள், வெள்ளி முத்திரை நாணயம், மூடியுடன் கூடிய பானை, சிவப்பு நிற பானை, தாழிகள், பொம்மைகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

Also Read: கீழடி வார்த்தையைக் கேட்டாலே ‘அவர்களுக்கு’ எரிகிறது : துக்ளக் பதிவுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு சாட்டையடி