Tamilnadu

போலி செக் கொடுத்து ரூ10 கோடியை அபேஸ் செய்ய முயற்சி: PNB வங்கியில் கையும் களவுமாக சிக்கிய மோசடி கும்பல்!

சென்னை புரசைவாக்கம் டாக்டர் ராஜா அண்ணாமலை சாலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி இயங்கி வருகிறது. கடந்த 22ஆம் தேதி காலை மத்திய பிரதேசம் போபாலில் இயங்கி வரும் நிறுவனத்தைச் சேர்ந்த dileep build con ltd என்ற கம்பெனியின் காசோலையை சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் இயங்கி வரக்கூடிய ராம்சரண் என்ற கம்பெனிக்கு சேர வேண்டுமென காசோலையை சமர்ப்பிப்பதற்காக 2 பெண்கள் மற்றும் ஒரு ஆண் வங்கிக்கு வந்திருக்கிறார்கள்.

அப்பொழுது வங்கி ஊழியர் காசோலையை சரி பார்த்துள்ளார். சந்தேகம் அடைந்த வங்கி ஊழியர் அவருடைய மேல் அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி போபாலை சேர்ந்த நிறுவனத்திற்கும் காசோலை தொடர்பாக மின்னஞ்சல் செய்து விவரம் கேட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து வங்கியின் மேலதிகாரி அந்த காசோலையை சோதனை செய்ததில் அந்த காசோலை கடந்த 2018 ஆம் ஆண்டு சச்சின் என்பவருக்கு ரூ.8,737 பணம் மாற்றம் செய்யப்பட்ட காசோலை என தெரியவந்தது.

அதன்படி அந்த காசோலை போலியானது என கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் வங்கி மேலாளர் ரவிக்குமார் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வங்கிக்கு வந்த போலீசார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சென்னை விருகம்பாக்கத்தில் சேர்ந்த பானுமதி (44), கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த சாவித்திரி (40) மற்றும் கேரளா மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிரசாத் மேத்யூ (45) என்பது தெரியவந்தது. போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம் வரகநெரி பகுதியைச் சேர்ந்த அகீம் ராஜா (40), சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த நாராயணன் (63), தர்மபுரி மாவட்டம் அக்ரகாரம் வழி பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (42), மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த கோபிநாதன் (56), திருவண்ணாமலை மாவட்டம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (39) மற்றும் கோவை மாவட்டம் தங்கமணி நகரை சேர்ந்த முருகன் (55) ஆகிய 6 பேரை வங்கிக்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் போலி காசோலையை பயன்படுத்தி 10 கோடி ரூபாய் வரை மோசடி செய்ய முயன்றது போலீசாருக்கு தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து 9 பேரையும் கீழ்ப்பாக்கம் போலீசார் கைது செய்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் யஸ்வந்த் ராவ் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Also Read: “இன்னொரு காவலாளியை நேபாளத்துக்கு அனுப்பி வைத்ததே போலிஸ்தான்” - மறு புலன் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!