Tamilnadu

வீதி வீதியாக செயல்படும் தடுப்பூசி முகாம்; எங்க ஊர்ல இந்த வசதியில்லை - தமிழகத்தை எண்ணி கேரள நபர் பூரிப்பு!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் 2ஆம் கட்ட முகாமை சாலையில் செல்லும்போது பார்வையிட்ட கேரளாவைச் சேர்ந்த ஒருவர், "தமிழகத்தில் தடுப்பூசி முகாம் சாலையில் செல்பவர்கள் கூட செலுத்திக்கொள்ளும் வகையில் சிறப்பாக செய்துள்ளனர். கேரளாவில் இதுபோன்ற வசதிகள் இல்லை’’ என்றும் இங்கு தடுப்பூசி முகாம்களில் கூட்டம் - நெரிசல் இல்லை என்றுப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இது பற்றிய விபரம் வருமாறு:- கொரோனா பேரலை இன்று தமிழகத்தில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு முழுமுதற் காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் துரித நடவடிக்கைதான், ஒன்றிய அரசினை தொடர்ந்து வலியுறுத்திகொரோனா தடுப்பூசியை வரவழைத்து தடுப்பூசி முகாம்களை நடத்தி மக்களுக்கு செலுத்தி கொரோனா நோய் தொற்றிலிருந்து காத்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (19.9.2021) தமிழகத்தில் இரண்டாம் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் இரவு7 மணி வரை நடைபெற்றது. சென்னை சூளைமேட்டில் சாலையின் ஓரத்தில் தடுப்பூசி முகாம் நடைபெறுவதைக் கண்ட கேரளாவில் இருந்து வந்த ஒருவர் உணர்ச்சி பொங்க மலையாள மொழியில் தனது ஆதங்கத்தை, தமிழக அரசின் செயல்பாட்டினைப் பாராட்டி கூறியதை அப்படியே தமிழில் மொழிப்பெயர்த்து வெளியிட்டுள்ளோம்.

அவர் கூறியதாவது:- சூளைமேட்டுப் பகுதியில் நான் நிற்கின்றேன். கேரளாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் தடுப்பூசி போடுவதில் உள்ள வித்தியாசத்தை நான் சொல்கிறேன். தடுப்பூசி போடும் இடத்தில் மக்கள் கூட்டமாகக் கூடவில்லை. மக்கள் வரிசையில் இல்லை. எவ்வித நெருக்கடியும் இல்லாமல் சாலையில் செல்பவர்கள் எளிதாக தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வசதி செய்து கொடுத்து இருக்கிறார்கள். கேரளாவில் அப்படி இல்லை. "இதுதான், சென்னை மாநகரின் சிறப்பு’’ என்று கூறினார்.