Tamilnadu

மனைவியை ஆபாசமாக படமெடுத்து கணவருக்கு வாட்ஸ் அப்பில் மிரட்டல்; டிராவல்ஸ் அதிபர் சிக்கியது எப்படி?

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பாளையர் மடம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (41). டூரிஸ்ட் மற்றும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனமும் நடத்தி வருகிறார். திருமணமாகிவிட்டது. இவருக்கும் கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த 31 வயது பெண்ணுடன் 2019-ம் ஆண்டு முதல் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பெண்ணுக்கும் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.

இந்த பெண் அண்ணாநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த போது சிவக்குமாருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது திருமணத்தை மீறிய உருவாக மாறியது. இருவரும் ஒன்றாக சுற்றி உள்ளனர். வெளியூருக்கு சென்று தங்கும் விடுதிகளிலும் தங்கி உள்ளனர். அந்த சமயங்களில் சிவக்குமார் அந்த பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து வைத்ததாக கூறப்படுகிறது. மேலும் வீடியோ காலில் பேசும்போது வீடியோ பதிவும் செய்து வைத்ததாக தெரிகிறது.

2 ஆண்டுகளாக ஒன்றாக சுற்றுவதை அறிந்த அந்த பெண்ணின் கணவர் இதனை கண்டித்துள்ளார். இதையடுத்து அந்த பெண் சிவக்குமாருடன் பழகுவதையும் செல்போனில் பேசுவதையும் நிறுத்தி கொண்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமார் அந்த பெண்ணுக்கு போனில் பேசி "ஒழுங்காக என்னுடன் வா, இல்லை என்றால், உன்னுடைய ஆபாச படங்களை வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.

இதனால் அந்த பெண் அவரிடம் பேசவில்லை. மேலும் ஆத்திரமடைந்த சிவக்குமார் அந்த பெண்ணின் கணவருக்கே போன் செய்து, "உன்னுடைய மனைவியை என்னிடம் அனுப்பிவை இல்லையென்றால் அவளது நிர்வாண போட்டோ வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விடுவேன் என்று மிரட்டினார்.

மேலும் ஆபாச படங்களை வாட்ஸ்அப் மூலம் கணவருக்கும், அவரது உறவினர்களுக்கும் சிவக்குமார் அனுப்பி உள்ளார். அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் கணவர் இது தொடர்பாக டிபி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் போலீசார் விசாரணை நடத்தி இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான 354 (சி)- அனுமதி இல்லாமல் பெண்ணை கண்காணித்து புகைப்படம் எடுத்தல், 509- பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல் 506(1)- கொலை மிரட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் பதுங்கி இருந்த சிவக்குமாரை டிபி சத்திரம் போலீசார் கைது செய்தனர். காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அவரது செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். வேறு ஏதேனும் பெண்களை சிவக்குமார் ஆபாச வீடியோ எடுத்து வைத்து மிரட்டி உள்ளாரா? என்பது தொடர்பாக கோலீசார் செல்போனை ஆய்வு செய்தனர்.

விசாரணைக்கு பிறகு சிவக்குமாரை போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் பொன்னேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

Also Read: ஃபேக் ஐடி அமுதா... 2 வருடங்களாக ஏமாற்றிய நபரை விஷம் வைத்துக் கொன்ற இளைஞர் - விசாரணையில் ‘பகீர்’ தகவல்கள்!