Tamilnadu

"மாணவர்களை பள்ளிக்கு வர தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்தக் கூடாது" - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் நார்த் சார்பில் 2021ஆம் ஆண்டிற்கான "ஆசான் விருதுகள்" வழங்கும் நிகழ்ச்சி சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலுவும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இருத்து தேர்வு செய்யப்பட்ட 53 ஆசிரியர்களுக்கு விருதினையும் பாராட்டுச் சான்றிதழையும் அமைச்சர் வழங்கி, வாழ்த்துகளை தெரிவித்தார்.

சிறப்புரை ஆற்றிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, விருது பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். "ஆசிரியர்களையும் தியாகிகளையும்தான் என்றைக்குமே முன்னாள் ஆசிரியர் என்றோ முன்னாள் தியாகி என்றோ அழைக்க மாட்டார்கள். உலகத்தில் உள்ள அனைத்து தலைவர்களையும் உருவாக்கியவர்கள் ஆசிரியர்கள்தான்.

இந்த கல்லூரி வளாகத்தில் எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது குறித்து சொன்னார்கள். இன்றைக்கு ஆயிரத்தில் ஒருவனாக இருக்கும் முதலமைச்சர் இந்த தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கிறார். அவரது வழிகாட்டுதலோடு துறையின் ஒவ்வொரு முடிவுகளையும் கொரோனா காலகட்டத்தை கருத்தில் கொண்டு அளந்து அளந்து எடுத்து வைக்கிறோம்.

குழந்தைகளின் இரண்டாவது பெற்றோராக ஆசிரியர்கள் உள்ளனர். வருங்காலத்தில் ஒரு குழந்தை என்ன குணத்தோடு வாழ வேண்டும், எதைக் கண்டு அஞ்ச வேண்டும் ஏதை துணிச்சலோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதை ஆசிரியரே கற்றுக் கொடுக்கிறார்கள். Special childrensக்கு சிறப்பு கவனமெடுத்து physical education and physical activity மூலம் எப்படி பயிற்றுவிக்க வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும்.

Also Read: அயர்ன் மேன் ரசிகர்களை மகிழ்வித்த சியோமி நிறுவனம்: கூகுள்-க்கு போட்டியாக ஸ்மார்ட் கிளாஸ் அறிமுகம்!

இதுகுறித்து என்னிடம் கோரிக்கை வைத்தார்கள். முதலமைச்சரிடம் எடுத்துச் சென்று அவரது ஆலோசனைப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என்னுடைய குடும்ப விழாவை இன்னொரு குடும்பம் நடத்துவதாக பார்க்கிறேன்" என்றார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தற்போது பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு தேவைக்கேற்ப மாஸ்க், சானிடைசர் வழங்க தலைமை ஆசிரியர்களை கேட்டுக் கொண்டுள்ளோம். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் மூலமாக அதற்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் இரண்டரை லட்சம் பேர் வரை உள்ளனர். அவர்கள் படும் சிரமங்கள் குறித்து வரும் செய்திகளை கடந்த 3 மாதமாக கவனித்து, அவற்றை களைய எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து துறை ரீதியாக பேசிக் கொண்டிருக்கிறோம். பெருந்தொற்று காலத்தை காரணமாக காட்டி ஆசிரியர்களை கைவிட்டு விடாதீர்கள் என தனியார் பள்ளிகளை கேட்டுக் கொள்கிறேன். அதிகப்படியான ஆசிரியர்கள் பாதிக்கப்படும் சூழல் இருந்தால் அதனை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்த அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்திருப்பது குறித்த கேள்விக்கு, " ஊரடங்கு குறித்து வாரம் தோறும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடக்கும் உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில் விவாதித்து வல்லுநர் குழுவின் ஆலோசனைப் படி முடிவெடுக்கலாம் என முதலமைச்சர் கூறியுள்ளார்" என்றார்.

தென் மாவட்டங்களிலும் பள்ளிகளில் அதிகமான ஆசிரியர்களும், வட மாவட்டங்களில் குறைவான ஆசிரியர்களும் இருப்பதாக கூறப்படும் பிரச்சனை குறித்த கேள்விக்கு, " துறையின் கூட்டத்திலேயே இதுகுறித்து பேசியுள்ளேன். ஆசிரியர்களுக்கு வேண்டுகோளாக வைக்கிறோம்; பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய 40 பிளாக்ஸ் உள்ளன. வடமாவட்டங்களில்தான் அவை அதிகம் உள்ளன. அங்கு பணிக்கு செல்ல கவனம் செலுத்துங்கள். நியாயமான காரணங்களின் அடிப்படையில் மட்டுமே இடமாறுதல்கள் வழங்கும் வகையில் கொள்கை வகுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்றார்.

கோவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வார இறுதியில் முழு முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பள்ளிகளை திறப்பதில் விலக்கு அளிக்கப்படுமா? என்ற கேள்விக்கு, "எங்குமே மாணவர்களை கட்டாயமாக பள்ளிக்கு வர வலியுறுத்தவில்லை. அவர்கள் விரும்பினால் மட்டுமே வரலாம் என்றுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தனியார் பள்ளிகள் மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளோம்" என்றார்

Also Read: ஒருபக்கம் அமைச்சராக சிக்ஸர்... இன்னொரு பக்கம் பிஎச்.டி மாணவர்... அசத்தும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!