Tamilnadu

“டூ-வீலர்களை திருடி உதிரி பாகங்களை பிரித்து விற்பனை செய்த கும்பல்” : போலிஸாரிடம் சிக்கியது எப்படி?

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார்கள் குவிந்தன. இதனையடுத்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சிவபிரசாத் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலிஸார் விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலிஸார் கைப்பற்றி விசாரணை செய்தபோது, திருடியவர் மதுரையைச் சேர்ந்த பெருமாள் என்கின்ற வீரப்பெருமாள் என்றும் இவர் ராயபுரம் குடிநீர் வாரியத்தில் வேலை செய்வதும் தெரியவந்தது.

ராயபுரத்தில் உள்ள மெட்ரோ வாட்டர் பம்பிங் ஸ்டேஷனில் வேலை செய்வதை அறிந்த போலிஸார் வீரப்பெருமாள் மற்றும் அவனது கூட்டாளி கிஷோர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், திருடப்பட்ட வாகனங்களை புதுப்பேட்டையில் உள்ள ரசித் என்பவரிடம் கொடுத்து உதிரிபாகங்களை பிரித்து அதனை விற்பனை செய்து பணத்தைப் பெற்றுக்கொண்டது தெரியவந்தது.

இதனையடுத்து மூன்று பேரையும் போலிஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 இருசக்கர வாகனங்கள் விலையுயர்ந்த 13 ஆண்ட்ராய்டு செல்போன்களை போலிஸார் பறிமுதல் செய்தனர். வீரப்பெருமாள் மற்றும் கிஷோர் மீது வழிப்பறிக் கொள்ளை, வீடு புகுந்து செல்போன்கள் திருடுவது, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களை திருடுவது உள்ளிட்ட வழக்குகள் விசாரணையில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Also Read: "நடிகர் சூரி இல்லத் திருமண விழாவில் 10 பவுன் நகை திருட்டு"... CCTV காட்சிகளை கைப்பற்றி போலிஸ் விசாரணை!