Tamilnadu

“திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை என் அறையிலேயே பெரிய திரை வைத்து கண்காணிப்பேன்” : முதலமைச்சர் பேச்சு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள், அமைச்சர் பெருமக்களால் அவர்களது துறை சம்பந்தப்பட்ட மானியக் கோரிக்கைகளின்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மற்றும் அரசு செயல்படுத்தி வரும் நலத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., மற்றும் அனைத்துத் துறைச் செயலாளர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் அவர்கள் தொடக்க உரை நிகழ்த்தினார். பின்னர், ஆய்வினை மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆற்றிய உரை பின்வருமாறு:

முதலமைச்சர் அவர்களது உரை, “தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்துத் துறைச் செயலாளர்களே! வணக்கம்!

கடந்த மே 7ஆம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் பொறுப்பேற்றுக் கொண்டது முதல், இன்றுவரை அரசினுடைய அனைத்து முயற்சிகளுக்கும் ஊக்கமாகவும், உறுதுணையாகவும் இருந்து கொண்டிருக்கக்கூடிய அரசுத் துறைச் செயலாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். அதுவும் இந்தக் கொரோனா காலத்திலும் தொய்வு இல்லாமல் மக்களுக்குப் பணியாற்றுவதன் மூலமாக இந்த அரசுக்கு சிறப்பான பெயரைத் தேடித் தந்திருக்கிறீர்கள், அதற்கும் நான் என்னுடைய வணக்கத்தை, நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஒத்துழைப்பும், செயல்பாடும் எப்போதும் நீடிக்க வேண்டும் என்று நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால், இனிமேல்தான் உங்களுக்குக் கடினமான பொறுப்பு இருக்கிறது. முதலமைச்சர் என்ற முறையில், அந்தந்தத் துறையின் அமைச்சர்கள் என்ற முறையில் அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறோம். அவற்றையெல்லாம் நிறைவேற்ற வேண்டுமென்று சொன்னால், அதற்கு நீங்கள் தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், ஐந்து மலைகளை நாம் தாண்டியாக வேண்டும்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகத்தின். சார்பில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்யப் போகிறோம், என்னென்ன செய்வோம் என்று உறுதிமொழிகள் கொடுத்து, தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறோம். அதில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அடங்கியிருக்கின்றன. அப்போது மாவட்ட ரீதியாகவும் ஒரு தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறோம். அதிலும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் என்னென்ன வாக்குறுதிகள் என்று பிரித்து வெளியிட்டிருக்கிறோம்.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், ஆளுநர் உரை தரப்பட்டிருக்கிறது; நிதிநிலை அறிக்கை வெளியிட்டிருக்கிறோம்; வேளாண் நிதிநிலை அறிக்கை என்று புதிதாக தாக்கல் செய்து, அதையும் வெளியிட்டிருக்கிறோம்; சட்டமன்றத்தில் துறைவாரியாக மானியக் கோரிக்கை விவாதத்தின்போது புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டிருக்கிறோம்; சட்டமன்றத்தில் விதி 110-ன் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறோம்.

இவை அனைத்தையும் நிறைவேற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நம்மிடம்தான் இருக்கிறது. அதைத்தான் ஐந்து மலைகளைத் தாண்டியாக வேண்டும் என்று நான் சொன்னேன். இந்த அறிவிப்புகள் அனைத்தையும் படிப்படியாக நாம் நிறைவேற்றியாக வேண்டும். அதற்கு உங்களுடைய முழு ஒத்துழைப்பு அவசியம் தேவை. இவை அனைத்தும் மக்கள் நன்மைக்காக அளிக்கப்பட்டிருக்கக்கூடிய உறுதிமொழிகள் ஆகும். இந்த வாக்குறுதிகள், அறிவிப்புகள் அனைத்தும் அரசாணைகளாக வரவேண்டுமென்று சொன்னால், அதற்கு துறைகளின் செயலாளர்கள் தான் பொறுப்பேற்றுச் செயலாற்ற வேண்டும்.

ஒவ்வொரு அறிவிப்பினை நிறைவேற்றுவதிலும் பல கட்டங்கள் இருக்கும், Procedures இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு அறிவிப்பிற்கு பல துறைகளின் ஒத்துழைப்பு, அனுமதி தேவைப்படுகிறது. அவை குறித்து அந்தந்தத் துறைகளின் செயலாளர்கள் எல்லாம் ஓரிடத்தில் அமர்ந்து - துறை ரீதியான கூட்டத்தைக் கூட்டி நீங்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் தொடர்புடைய துறைகளோடு ஒரு துணைக் கமிட்டி நீங்கள் நியமித்துக் கொள்ளலாம்.

துறைச் செயலாளர்கள் கூடி முடிவு எடுப்பதாக இருக்கட்டும், துணைக் கமிட்டிகள் முடிவு எடுப்பதாக இருக்கட்டும், ஒரு காலவரம்பிற்குள் அதை நிறைவேற்றிட வேண்டும். எல்லாமே Time bound செயல்பாடுகளாக அமைந்திட வேண்டும். ஏனென்றால் நாம் வெளியிட்டிருக்கக்கூடிய அறிவிப்புகள் நிதித்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளின் ஆலோசனைகளைப் பெற்று ஒவ்வொரு துறையிலும் Review Meeting வைத்து, எதைச் செய்யலாமென்று கலந்தாலோசித்து, அதற்கு என்ன

நிதி ஆதாரம் என்பதையெல்லாம் அலசி ஆராய்ந்துதான், அதையெல்லாம் அறிவிப்புகளாக வெளியிட்டிருக்கிறோம். அதேபோல் எந்தவொரு அறிவிப்பினையும் செயல்படுத்தும்போது, வழக்குகள் வராமல், நீதிமன்றத்திற்குச் சென்று Stay வாங்குவது போன்றவை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் உங்களிடத்தில் இருக்கிறது. ஆகவே, இந்தக் கூட்டத்தில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புவது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், அதில் பிரச்சினைகள் ஏதும் ஏற்பட்டுவிடாமல் நிறைவேற்றிட வேண்டும்.

நாம் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துவிட்டோம். அடுத்து நமக்கு இருப்பது 6 மாதங்கள் தான். ஏனென்றால், அடுத்த 6 மாதங்களுக்குப் பிறகு சட்டமன்றத்தில் அடுத்த நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். ஆக, இந்த ஆறு மாதத்திற்குள் நாம் செய்துள்ள அறிவிப்புகளைச் செயல்படுத்திட வேண்டும். எனவே, விவேகமாகவும் வேகமாகவும் நீங்கள் காரியங்களை ஆற்றிட வேண்டும்.

நான் இந்த அறிவிப்புகள் செயல்படுத்துவது குறித்து அமைச்சர்களைக் கண்காணிப்பேன் என்று சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்தவுடன் சொல்ல ஆரம்பித்துவிட்டேன். இரண்டு நாட்களாக, நான் செல்கிற நிகழ்ச்சிகளில், கட்சி நிகழ்ச்சிகளாக இருந்தாலும், எந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும், நானே நேரடியாகக் கண்காணிக்கப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறேன். எனவே, அமைச்சர்களை மட்டுமல்ல; ஒவ்வொரு துறைச் செயலாளர்களும் இந்த அறிவிப்புகளை குறித்த காலத்திற்குள் முடிக்கக்கூடிய வகையில் என்னுடைய கண்காணிப்பு இருக்கும் என்பதை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

கோவிட் பெருந்தொற்று காரணத்தினால் சில பொருளாதார நெருக்கடிகள் உள்ளதை நீங்களும் அறிவீர்கள், நாங்களும் அறிந்திருக்கிறோம். இந்தச் சூழ்நிலையில், ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கக்கூடிய நிதியினை அந்தந்தத் திட்டப்பணிகளுக்கு முழுமையாகவும், முறையாகவும் செலவிடுவதன் மூலம் அந்தந்த அளவிற்கு நம் பொருளாதாரத்திற்கு உங்கள் திறமையான செயல்பாடுகள் தக்க வகையில் ஊக்கமளிப்பதாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஆகவே, அனைத்துத் துறைகளின் திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்த தகவல்களை நான் தெரிந்துகொள்ளும் விதமாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் “ஆன்லைன் தகவல் பலகை” (Dash Board) ஒன்றை ஏற்படுத்தி, அதன்மூலம் தகவல்களை நான் தினமும் பார்க்கப் போகிறேன். தகவல்களை அளிக்கும் வகையில்தான் “ஆன்லைன் தகவல் பலகை” ஏற்படுத்தப்படவிருக்கிறது. என்னுடைய அறையிலேயே பெரிய திரை (Screen) ஒன்றினை வைத்து, தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு நடந்து வருகிறது.

நாம் எனவே, அளித்திருக்கக்கூடிய வாக்குறுதிகள், வெளியிட்டிருக்கக்கூடிய அனைத்து அறிவிப்புகள், அரசினுடைய முக்கியத் திட்டங்கள், எடுத்துக் கொண்டிருக்கக்கூடிய உறுதிமொழிகள் தொடர்பான பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு எனத் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நல்லாட்சியை வழங்க, நாம் நிறைவேற்றும் ஒவ்வொரு திட்டங்களும் தகவல்களும் இந்தத் தகவல் பலகையில்" இடம்பெறும். அந்தத் தகவல்கள் தினந்தோறும் அப்டேட் செய்யப்படும். தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆலோசகர் இதன் ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்படப் போகிறார் என்பதையும் நான் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

அந்த Dash Board எப்படி இருக்க வேண்டுமென்றால், ஒவ்வொரு அறிவிப்பும் செயல்படும் விதம் குறித்து, Physical Target மற்றும் Financial Target என்று இடம்பெற்றிருக்க வேண்டும். வாரம் ஒருமுறை இந்த Dash Board-ஐ வைத்து நான் ஆய்வு செய்யப் போகிறேன். அறிவிப்பு தொடர்பாக அரசாணை போட்டு விட்டோம் என்பதால் அறிவிப்பு நடைமுறைக்கு வந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. அந்த அறிவிப்பின் பலன் மக்களைச் சென்றடைய வேண்டும்.

அப்போதுதான் நாம் அறிவிப்பை செயல்படுத்தி விட்டோம் என்று அர்த்தமாகும் என்பதையும் நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு அறிவிப்பையும் செயல்படுத்துவதற்கு கால நிர்ணயம் செய்து கொள்ளுங்கள். அந்தக் காலத்துக்குள் நிறைவேற்றுங்கள். அமைச்சர்களும் அதிகாரிகளும் இணைந்ததுதான் இந்த அரசு. எனவே, இணைந்து செயல்படுங்கள். இணைந்து செயல்படுவதன் மூலமாக வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றித் தாருங்கள் என்று நான் உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

அனைத்துத் துறையும் ஒருசேர வளர வேண்டும். ஒரு துறை வளர முன்னேறியது, சுறுசுறுப்பாகச் செயல்பட்டது என்று இல்லாமல் அனைத்துத்துறைகளும் ஒருசேர முன்னேற்றம் கண்டது என்ற சூழலை நாம் உருவாக்க வேண்டும். அனைத்துத் துறை வளர்ச்சி - அனைத்து மாவட்டங்களின் வளர்ச்சி - அனைத்துச் சமூக வளர்ச்சி ஆகியவை உங்களுடைய எண்ண ஓட்டமாக இருக்க வேண்டும். இந்தச் சிந்தனை அனைத்துத் துறைகளின் செயலாளர்களுக்கும் ஏற்படுமானால் தமிழ்நாட்டின் எதிர்காலம் என்பது, இந்தியாவில் தலைசிறந்ததாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு நீங்களெல்லாம் ஒத்துழைக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

இன்னுமொரு முக்கியமான விஷயத்தையும் நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அரசுத் துறைகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக இயங்காமல் ஒன்றுபட்டு, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், அப்போது தான் திட்டங்கள் செம்மையான முறையிலும், காலதாமதம் ஆகாத நிலையிலும் மக்களைச் சென்றடையும் என்று கருதுகிறேன். திட்டங்கள் சம்பந்தப்பட்ட கோப்புகளில், சிறுசிறு காரணங்களுக்காக மற்றொரு துறை தாமதம் ஏற்படுத்திவிடும். அது திட்டச் செயல்பாட்டில் தேக்கநிலையை ஏற்படுத்துவதோடு, நிதிச் செலவினத்தையும் அதற்கேற்ப குறைத்து வேறு சில நிர்வாக சிக்கல்களையும் உருவாக்கிவிடுகிறது.

எனவே, துறைச் செயலாளர்கள் ஆகிய நீங்கள் அனைவரும் உங்கள் துறையின் திட்டங்கள் மட்டுமல்லாமல், வேறு துறைகளின் திட்டங்களையும் இவை மக்களுக்கான திட்டங்கள், தமிழ்நாடு அரசின் திட்டங்கள் என்ற வகையிலே அணுக வேண்டுமென்றும், அதன்மூலமாக முடிவுகளை விரைந்து எடுக்க வேண்டுமென்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த ஆய்வுக் கூட்டத்தின் நோக்கம், நான் முன்பே குறிப்பிட்டது போல அறிவிக்கப்பட்ட திட்டங்கள் சிறப்பாகவும், விரைவாகவும் மக்களுக்குக் கொண்டு சேர்த்திட வேண்டுமென்று உங்களுக்குத் தெரிவிப்பது என்னுடைய கடமையாகும். உங்கள் துறையினால் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் செயலாக்கத்தினை, அவை குறித்து நான் தெரிந்துகொள்ள, வரும் அக்டோபர் மாதம் நான் மீண்டும் ஆய்வு செய்யவிருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதற்குள்ளாக தேவையான அரசாணைகளை வெளியிட்டு பணிகளைத் துவக்குவதற்கான நல்ல முயற்சிகளை நீங்கள் ஒவ்வொருவரும் எடுக்க வேண்டுமென்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். அதற்கு இந்த அரசு உங்களுக்கு எப்போதும் துணை நிற்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: 'கோயில்களில் முப்பொழுதும் அன்னதானம்' - அசத்தலான திட்டத்தை தொடங்கிவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!