Tamilnadu
“இனி தமிழ்நாட்டில் நிரந்தரமாக தி.மு.க ஆட்சிதான் அமைய வேண்டும்” : முப்பெரும் விழாவில் முதல்வர் சூளுரை!
தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15, தி.மு.க தொடங்கப்பட்ட செப்டம்பர் 17 ஆகிய இந்த மூன்று முக்கிய நிகழ்வுகளும் இணைந்த தி.மு.கவின் முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
பெரியார் விருதை மிசா பி.மதிவாணனுக்கும், பேரறிஞர் அண்ணா விருதை எல்.கே.மூக்கையாவிற்கும், கலைஞர் விருதை கும்மிடிபூண்டி கீ.வேணுவிற்கும், பாவேந்தர் விருதை வாசுகி ரமணனுக்கும், பேராசிரியர் விருதை பா.மு.முபாரக்கிற்கு முதலமைச்சர் வழங்கினார்.
பின்னர் விழாவில் தலைமை ஏற்று பேசிய தி.மு.க தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், முப்பெரும் விழாவை நாம் மாநாடு போல நடத்துவதுண்டு, கொரோனா காலமாக இருப்பதால் அதை தவிர்த்து காணொலிக் காட்சி மூலமாக 28 மாவட்டங்களில் நடத்துவதாக கூறினார்.
6வது முறையாக தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றபின், நடைபெறும் முதல் முப்பெரும் விழா என்றும், நீங்கள் (தொண்டர்கள்) இல்லாமல் இந்த வெற்றி இல்லை. உங்கள் தியாகத்தால், உழைப்பினால், வியர்வையால் கிடைத்ததே இந்த வெற்றி, என பெருமைபடக் கூறினார்.
நீதிக்கட்சி ஆட்சி பொறுப்பேற்ற நூற்றாண்டு, 6வது முறையாக தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றது, நான் முதன் முறையாக முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்றதும் இந்த ஆண்டு முப்பெரும் விழாவிற்கு கூடுதல் சிறப்பு என முதலமைச்சர் தெரிவித்தார்.
எனக்கு நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் தலைவர் கலைஞர் இல்லை என்கிற குறையை போக்கிக் கொண்டிருப்பவர் முரசொலி செல்வம் என அவரை புகழ்ந்தார். சட்டமன்றத்தில் பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்தபோது பெரிய உணர்வு ஏற்பட்டதாகவும், பேரவையில் கிடைத்த வரவேற்பு நூற்றாண்டு எழுச்சியை நினைவுபடுத்தியதாக கூறினார்.
பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, பால் விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு, கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாய் குடும்பத்திற்கு வழங்கியது, நியாயவிலை கடைகளில் 14 வகை மளிகை பொருட்கள், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற துறை சார்பில் லட்சக்கணக்கான கோரிக்கை மனுக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது, தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்து உள்ளோம், அயோத்திதாசர் பண்டிதர் மணிமண்டபம், சிதம்பரனார் பாரதியாரை பெருமைப்படுத்தியிருக்கிறோம். வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட், 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற தீர்மானம், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற தீர்மானம், நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்டு சட்ட மசோதா நிறைவேற்றம், சென்னையில் தலைவர் கலைஞருக்கு நினைவகம், மதுரையில் தலைவர் கலைஞரின் பெயரால் நூலகம், போட்டித்தேர்வில் தமிழை கட்டாயமாக்கியது, ஒரு கால பூஜை செய்யும் பூசாரிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை, ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையம், அரசு பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தியது, என இவை அனைத்தும் 100 நாட்களுக்குள் நாம் செய்த சில சாதனைகள் என முதலமைச்சர் பட்டியலிட்டார்.
நாட்டுக்கு நல்லவர்கள் நாம், வல்லவர்கள் நாம் என்ற பெயரையும், கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்கள் என பெயரையும் வாங்கி இருக்கிறோம். தி.மு.க ஆட்சி சொன்னதை செய்யும் என்ற நம்பிக்கையை மக்களிடத்தில் ஏற்படுத்தி இருப்பதாக கூறினார்.
ஒவ்வொரு துறையிலும் விடியல் பிறக்கப்போகிறது. மானியக் கோரிக்கைகள், உறுதிமொழிகள் மீதான நடவடிக்கை குறித்து மாதம் இருமுறை ஆய்வு செய்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை செய்யப்போவதாக தெரிவித்தார்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது 60-70% வென்ற நாம், ஆளுங்கட்சியாக நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றிபெற வேண்டும். இனி தமிழ்நாட்டில் நிரந்தரமாக நம் ஆட்சிதான் நடைபெறவேண்டும். நிரந்தரமான ஆட்சிக்கு தேவையான அடித்தளத்தை கழகத் தொண்டர்கள் உருவாக்க வேண்டும் என்றும், பெரியாரின் பிள்ளைகள் நாம், அண்ணாவின் தம்பிகள் நாம், கலைஞரின் உடன்பிறப்புகள் நாம்- என கட்சியிலும் ஆட்சியிலும் நிரூபித்து வண்ணமிகு தமிழ் நாட்டை உருவாக்க இந்த முப்பெரும் விழாவில் சபதம் ஏற்ப்போம், என தெரிவித்தார்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !