Tamilnadu
"ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வழிகாட்டும் துணிச்சலான முடிவு”: நீட் விலக்கு மசோதாவுக்கு திருமாவளவன் பாராட்டு!
“நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதா : ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வழிகாட்டும் துணிச்சலான முடிவு!” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாராட்டியுள்ளது.
இதுதொடர்பாக வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், “நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்தும் பள்ளி இறுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர்க்கை நடத்தப்படும் என அறிவித்தும் தமிழ்நாடு அரசு இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ள சட்ட மசோதாவை மிகுந்த மகிழ்வோடு வரவேற்கிறோம். அத்துடன், ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையிலான துணிச்சல்மிக்க இந்த முடிவை வி.சி.க சார்பில் நெஞ்சாரப் பாராட்டுகிறோம்.
நீட் நுழைவுத் தேர்வு என்பது ஏழை எளிய மாணவர்களின் உயிரைக் குடிப்பதற்கான உயிர்க் கொல்லியாக அமைந்திருக்கிறது. மருத்துவப் படிப்பில் தகுதியின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கறாராகக் கூறியது. ஆனால், அது உருவாக்கியுள்ள நீட் நுழைவுத்தேர்வு தகுதி, திறமை என்பதைக் காற்றில் பறக்க விட்டுவிட்டது. பொருளாதார வலிமை உள்ளவர்களுக்கு மட்டுமே இப்போது மருத்துவக்கல்வி என்கிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. நீட் நுழைவுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரையில் செய்யப்பட்டுள்ள மாணவர் சேர்க்கை விவரங்களை ஆராய்ந்து பார்த்தால் இந்த உண்மை புலப்படும். எனவேதான் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வி.சி.க உட்பட தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளும் ஒருமித்துக் குரல் எழுப்பி வந்தன. திராவிட முன்னேற்றக் கழகமும் எதிர்க்கட்சியாக இருந்தபோதிலிருந்து இதற்காகப் போராடி வந்தது.
மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை இரண்டு அம்சங்களை உள்ளடக்கியிருக்கிறது. முதல் அம்சம்: குறைந்தபட்ச கல்வித் தர அளவுகோல்களை நிர்ணயித்தல் அதை ஒருங்கிணைத்தல் – இது அதிகாரப் பட்டியல்-1 (இந்திய ஒன்றிய அரசின் அதிகாரம் ) இன் - 66 ஆவது பிரிவில் சொல்லப்பட்டிருக்கிறது. இரண்டாவது அம்சம்: அந்தத் தர அளவுகோல்களை நடைமுறைப்படுத்துதல். இது அதிகாரப் பட்டியல்-3 இன் ( பொதுப்பட்டியல் ) 25-ஆவது பிரிவில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப் பிரிவின் கீழ் மாநிலங்களும் சட்டம் இயற்றலாம். அந்த அதிகாரத்தின் அடிப்படையிலேயே இப்பொழுது தமிழ்நாடு அரசு இந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
இந்திய ஒன்றிய அரசின் அதிகாரப் பட்டியலில் உள்ள எண்-66 இல் விவரிக்கப்பட்டிருக்கும் தரத்தைக் காப்பாற்றுவது தொடர்பான கடமையை இந்திய ஒன்றிய அரசு நிறைவுசெய்யவில்லை என்பதை நீட் தேர்வு புலப்படுத்துகிறது.
இந்த உண்மையைத் தமிழ்நாடு அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவும் புள்ளி விவரங்களோடு நிரூபித்திருக்கிறது.
இந்தச் சூழலில் நீட்தேர்வு இப்படியே தொடர்வது மருத்துவக் கல்வியின் தரத்தைக் காப்பாற்றுவதற்கு எவ்விதத்திலும் உதவியாக இருக்காது.
மத்திய தொகுப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு நீண்ட போராட்டத்துக்குப் பிறகே 27%இட ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளோம். எனினும், மத்திய தொகுப்புக்குத் தொடர்ந்து மருத்துவ இடங்கள் அளிப்பது தேவையற்றதாகும். அது சட்டபூர்வமாக செய்தாகவேண்டிய கட்டாயக் கடமையல்ல.
மருத்துவம், உயர் மருத்துவம், சிறப்பு உயர் மருத்துவம் ஆகியவற்றில் முறையே, 15%, 50% மற்றும் 100% அளவில் இடங்களை ஒதுக்கீடு செய்வது தமிழக மாணவர்களுக்கான வாய்ப்புக்களை ஆண்டுதோறும் இழக்க நேருகிறது.
தற்போது பிற மாநிலங்களிலும் மருத்துவக் கல்வி வளர்ச்சியடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு அவ்வாறு மைய தொகுப்புக்கு இடங்கள் ஒதுக்குவதை மறுபரிசீலனை செய்யவேண்டும். அதனைக் கைவிடுவதற்கு இதுவே உகந்த நேரமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருதுகிறது.
எனவே, இந்த ஆண்டு முதல் மத்திய தொகுப்புக்கு மருத்துவக் கல்வி இடங்களை வழங்குவதில்லையென தமிழ்நாடு அரசு முடிவெடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !