Tamilnadu
“இன்றைய முதலமைச்சர் முனைப்புடன் உள்ளார்.. நிச்சயம் நீட்டிலிருந்து விலக்கு பெறுவோம்” : கி.வீரமணி பாராட்டு!
‘நீட்’டை நீக்க சட்டப் போராட்டம் - மக்கள் போராட்டங்களை திராவிடர் கழகம், தி.மு.க மற்றும் தமிழகக் கட்சிகள் (பா.ஜ.க.வை தவிர) மேற்கொண்டுதான் வருகின்றன- இறுதியில் நாம் வெற்றி பெறுவோம்; அவசரப்பட்டு, உணர்ச்சிவயப்பட்டு தற்கொலை செய்துகொள்ள வேண்டாம் - தற்கொலை என்பது பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கொரோனா கொடுந்தொற்று இன்னமும் நாட்டில் அறவே நீங்காது; மறுமுறையும் பரவி வரும் ஆபத்து இருக்கும் நிலையில், மாணவர்கள் உயிர் காக்கும் வகையில், பல பொதுத் தேர்வுகளைத் தள்ளி வைத்தன ஒன்றிய அரசும் - மாநில அரசுகளும்! ஆனால், இந்த ‘நீட்’ தேர்வைத் தள்ளி வைக்காமல், ‘‘முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா’’ என்பதாக ‘நீட்’ தேர்வை நேற்று நடத்தியுள்ளனர்!
இந்த ‘நீட்’ தேர்வினை 2019 முதல் இரண்டுமுறை எழுதியும், தொடர்ந்து தோல்வியடைந்தும் மூன்றாம் முறையும் தேர்வு எழுத ஆயத்தமானார் மேட்டூர் அருகே உள்ள கூழையூரில் உள்ள விவசாயி சிவக்குமார் என்பவரின் மகன் தனுஷ் என்ற மாணவன். ஆனால், முதல் நாள் இரவு 2 மணியளவில் - இம்முறையும் இத்தேர்வில் நமக்கு வெற்றி கிட்டுமா? தோல்வியைத்தான் மீண்டும் மீண்டும் சந்திக்க வேண்டியிருக்குமா? என்ற மன அழுத்தத்தின் உச்சியில், தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துள்ளார் என்ற செய்தி - அவர்களது பெற்றோரைப்போலவே நம்மையும் வாட்டி வதைத்து மனங்குமுறச் செய்கிறது! அரசியல் சட்டக் கூறுகளுக்கு விரோதமாக வேண்டுமென்றே திட்டமிட்டு திணிக்கப்பட்டு, நம் நாட்டு ஏழை, எளிய, கிராமப்புற மாணவ - மாணவிகளுக்கு மருத்துவப் படிப்பு கிட்டாதவையாக ஆக்கப்பட்டுள்ள இந்த ‘நீட்’ தேர்வு தொடங்கப்பட்டு, இதுவரை மாணவி அனிதா தொடங்கி சுமார் 10 மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் உள்பட உயிர்களை இப்படி பலிவாங்கியுள்ளது ‘நீட்’ தேர்வு என்னும் கொடுவாள்! இரக்கமிலா நெஞ்சர்களாக இதில் இன்னமும் பிடிவாதம் காட்டியே வருகின்றனர் - தேவையின்றி! இது ஆபத்தானது.
அப்படியென்ன இந்த ‘நீட்’ தேர்வு ஊழலை ஒழித்த தேர்வா? ஆள் மாறாட்டங்களும், கேள்வித் தாள் - விடைத்தாள்களில் ஊழலில் குளித்துத் திளைத்ததை உயர்நீதிமன்றங்களில் சுட்டிக்காட்டப்பட்டதை ஏனோ ஒன்றிய ஆட்சியாளர்கள் மறந்துவிட்டனர்! உச்சநீதிமன்றமும் இதில் தேவையற்ற பிடிவாதம் காட்டுகிறது; குதிரை கீழே தள்ளியது மட்டுமல்லாமல், குழியும் பறித்த கொடுமை போன்றது இது! இதனை ஒழிக்க அல்லது தமிழ்நாட்டுக்கு இந்த ‘நீட்’ தேர்விலிருந்து விலக்குப் பெற கடந்த நான்கு ஆண்டுகளாக முயற்சி செய்யப்பட்டு வருகிறது!
ஜெயலலிதா அம்மையார் முதலமைச்சராக இருந்தபோது மட்டும் பிரதமர் மோடி அரசு விலக்குக் கொடுத்தது; இதன்மூலம் ‘விலக்கே கொடுக்க முடியாது’ என்ற வீண் பிடிவாதம் ஏற்கத்தக்கதல்ல என்பது புரிந்துவிட்டது. (அது அரசியல்தானே!)
கடந்த நான்கு ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இருண்ட ஆட்சியில், சட்டமன்ற எதிர்க்கட்சிகள் (தி.மு.க., காங்கிரஸ், முஸ்லிம் லீக்) அனைத்தும் ஒருங்கிணைந்து நிறைவேற்றிய விலக்குக் கோரிய இரண்டு மசோதாக்களுக்கு விலக்கு வாங்க, உரிய முறையில் வற்புறுத்தவோ, அழுத்தங்கொடுக்கவோ தயாராக இல்லாமல், ‘இரட்டை வேடம்‘ பூண்டதோடு - மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டதைக்கூட சட்டமன்றத்தில் மறைத்து, நீதிமன்ற வழக்குமூலமே இச்செய்தி வெளியாகி, அ.தி.மு.க. ஆட்சியின் இரட்டை வேடத்தினை நன்கு அம்பலப்படுத்தியது!
புதிதாகப் பொறுப்பேற்ற தி.மு.க. ஆட்சி அதன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமரை சந்தித்த முதல் சந்திப்பிலேயே ‘நீட்’ தேர்வு விலக்குப்பற்றி வற்புறுத்தினார். இதுவரை மவுனம் மூலமே மறுப்பு வெளியாகியது. தொடர்ந்து எவ்வளவு ஊழல் நடந்தாலும், ‘நீட்’டை நடத்தியே தீருவோம் என்ற நிலையில், ஜஸ்டிஸ் ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு வல்லுநர் ஆலோசனைக் குழுவை அமைத்து, பரிந்துரை பெற்று, இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ‘நீட்’ தேர்வு விலக்குக் கோரி - அதன் அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான நிலைப்பாட்டை விளக்கிடும் வகையில் தனி மசோதா இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது!
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடனே ஏன் ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படவில்லை என்று சில அரைவேக்காட்டுத்தன கேள்விகளை எழுப்பும் இன்றைய எதிர்க்கட்சியினருக்கு ஒன்றிய அரசு மூலம் திணிக்கப்பட்டுள்ள ஒரு சட்டம் இது, ஏற்பாடு இது என்பதுகூடவா தெரியாது? இது சட்ட விரோதமானது - நியாய விரோதமானது - மக்கள் விரோதமானது. காரணம், சமூகநீதிக்கே இது குழிதோண்டும் ஏற்பாடு ஆகும்!
தமிழ்நாடுதான் வழக்கம்போல இந்தியாவின் வழிகாட்டியாக இதற்கும் உள்ளது; மற்ற மாநிலங்கள் இனிமேல்தான் இந்தக் கொடுமையை உணர்ந்து - புரிந்துகொண்டு தங்களது உரிமைப் பறிப்பை உணர முடியும்.
எத்தனை ஆண்டுகள் ஆனாலும், தமிழ்நாடு ஒருபோதும் இதனை ஏற்காது; காரணம், இது சமூகநீதியில் பழுத்த மண் - அனைவருக்கும் அனைத்தும் என்ற லட்சியத்தில் பயணிக்கும் நிலை; இந்த ‘நீட்’ தேர்வு என்ற இந்தத் தடையை உடைக்க தொடர்ந்து மக்கள் இயக்கத்தையும் கட்டி, சட்டப் போராட்டத்தையும் நடத்தவேண்டியது மிகவும் இன்றியமையாததாகும்.
எமதருமை மாணவ கண்மணிகளே, எக்காரணம் தொட்டும், தற்கொலை போன்ற ஏற்க முடியாத முடிவினை எடுக்காதீர்கள்; வாழ்வின் எந்தப் பிரச்சினைக்கும் ‘தற்கொலை’ உரிய தீர்வாகாது!
தடைகளை எதிர்த்துப் போராடி வெற்றி காண சூளுரைத்து, அறவழியில் போராடும் அமைப்புகள் உங்கள் நலன் காக்கவே களத்தில் நிற்கின்றன!
இன்றைய முதலமைச்சர் ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ மு.க.ஸ்டாலின் இதில் முனைப்புடன் உள்ளதால், நிச்சயம் இதில் வெற்றி பெற்றே தீருவோம்.
நுழைவுத் தேர்வை எதிர்த்து ஒழித்து தனிச் சட்டம் இயற்றிய வரலாறு படைத்த இயக்கம் தி.மு.க.; திராவிடர் கழகம் தொடர்ந்து குரல் கொடுத்தும், போராடியும் வந்துள்ளது. இப்போது தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை தவிர, அனைத்து கட்சிகளும் ‘நீட்’டுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் நிலையில், நாம் நீதிமன்றம், வீதிமன்றம் உள்பட அனைத்துத் தளங்களையும் களங்களாக்கிப் போராடுவோம் - வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. மன அழுத்தத்தில் எந்த விபரீத முடிவினையும் எடுக்காதீர்கள் என்று அன்புடன், உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம். எல்லா இரவுகளுக்கும் விடியல் உண்டு, மறவாதீர்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!