Tamilnadu

சாலையில் வீசப்பட்ட பெண் சடலம் வழக்கில் திடீர் திருப்பம்: குற்றவாளியைக் காட்டிக் கொடுத்த மெக்கானிக் ஷெட் !

கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் சோதனை சாவடி அருகே கடந்த 6ம் தேதி நெடுஞ்சாலையின் நடுவே சிதலமடைந்த நிலையில், பெண்ணின் சடலத்தை போலிஸார் மீட்டனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

யார் இந்த பெண், கொலை செய்யப்பட்டு காரில் இருந்து தூக்கி வீசப்பட்டாரா என்ற கோணத்தில் போலிஸார் விசாரணையை துவக்கினர். இதையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கையில், அந்த பெண் கொலை செய்யப்பட்டதற்கான எந்த அடையாளமும் இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பெண் விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை நடத்தினர். மேலும் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அந்த வழியாக வந்த வாகனங்களை ஆய்வு செய்தனர்.

இதில் இனோவா கார் ஒன்று பெண்ணின் சடலம் இழுத்துச் செல்லும் காட்சி இடம் பெற்றிருந்தது. இதையடுத்து அந்த காரின் உரிமையாளர் பைசல் என்பவரிடம் இது குறித்து போலிஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது இது குறித்துத் தெரியாது என பதில் அளித்துள்ளார். பிறகு பைசல் தனது காரை பட்டிணம் புதூர் பகுதியில் உள்ள மெகானிக்கல் ஷெட்டில் அண்மையில் நிறுத்தியுள்ளார். இதனை அறிந்த போலிஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையின் போது, பைசல் காரில் கிழிந்த சேலை சிக்கியிருந்ததாக போலிஸாரிடம் அங்கு பணிபுரிந்த ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். பிறகு மீண்டும் போலிஸார் பைசலிடம் விசாரணை செய்ததில், சாலையைக் கடக்கும் போது, அந்த பெண் தனது காரில் அடிபட்டு இறந்துவிட்டார் என்றும் தான் பதட்டத்தில் உடனே காரை நிறுத்தாமல் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார் பைசல்.

மேலும் விபத்தில் உயிரிழந்த அந்தப் பெண் சாலையோரம் தங்கும் ஆதரவற்ற மூதாட்டி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் பைசலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: மனநலம் பாதிக்கப்பட்டவரை கொடூரமாக அடித்து கொலை செய்த குடும்பம் : நடந்தது என்ன ?