Tamilnadu

“எது நடக்கக் கூடாது என நினைத்தோமோ, அது நடந்தது..” : மாணவன் தனுஷுக்கு அஞ்சலி செலுத்திய உதயநிதி உருக்கம்!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூழையூர் கிராமத்தை சேர்ந்த சிவகுமார் - சிவஜோதி தம்பதியரின் இரண்டாவது மகன் தனுஷ் என்ற மாணவர் கடந்த இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்த நிலையில், இன்று நடைபெறும் நீட் தேர்விற்கு தயாராகி வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு 11 மணி வரை படித்து வந்த மாணவர் மாணவர் தனுஷ் , நீட் தேர்விற்கு பயந்த இன்று அதிகாலை வீட்டின் உள்ள தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடல் மேட்டூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிவுற்று அவரது சொந்த கிராமமான கூழையூர் கிராமத்திற்கு எடுத்து வரப்பட்டு, பொது மக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., அமைச்சர்கள், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன், உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் மாணவர் தனுஷின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “தமிழகத்தில் எது நடக்கக்கூடாது என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருந்தமோ அந்த துயரம் இன்று நடந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த நீட் தேர்வால் குழந்தைகள் தங்கள் இன்னுயிரை இழந்து வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். கடந்த 3 வருடங்களில் 14 குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டனர்.

இந்த நிலையில் தான் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என அனைவரும் குரல் கொடுத்து வருகின்றோம். ஆனால் தேர்வை நடத்தியே தீரவேண்டும் என ஒன்றிய அரசு பிடிவாதமாக உள்ளது.

இன்று சேலம் மாவட்டத்தில் தனுஷ் என்ற மாணவர் நீட் தேர்வினால் உயிரிழந்துள்ளார். இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நாளை சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் இரண்டு முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்திருந்த நிலையில், நாளையும் கூடுதல் அழுத்தத்தோடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்போம்.

கண்டிப்பாக நீட் தேர்வில் இருந்து நிரந்த விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான சட்டப் போராட்டம் தொடரும். எனவே கண்டிப்பாக நல்ல முடிவு கிடைக்கும். அதனால் மாணவர்கள் மனம் தளரவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், சட்ட வல்லுநர்களின் கூடி நிச்சயம் சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அது மட்டுமில்லாமல் அனைத்து மாநில முதல்வர் உடன் சேர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்த நீட் தேர்வினால் தி.மு.கவைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்லாமல், அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க உள்ளிட்ட அனைத்து கட்சி மாணவர்களும், அனைத்து தரப்பு மாணவர்களும் பாதிக்கப்படுவதாகவும், இது மாணவர்களின் பிரச்சனை என்பதால் இதுகுறித்து சட்டப் போராட்டம் தொடர்ந்து நிச்சயம் தி.மு.க முன்னெடுக்கும் என்றார்.

மாணவர்கள் தயவுசெய்து மன சோர்வு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றும் நடந்து கொண்டிருக்கும் தி.மு.க ஆட்சி மாணவர்களுக்கு எப்போதும் துணை நிற்கும் என்று உறுதிபடக் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், இந்த நீட் தேர்வை ரத்து செய்ய தன்னெழுச்சியான போராட்டம் நடைபெற வேண்டும் என்றும் அனைத்து தரப்பு மக்களும் நீட் தேர்வை எதிர்க்க வேண்டும் மாணவர்களுக்கு துணை நிற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Also Read: நீட் காரணமாக உயிரிழந்த மாணவன் தனுஷின் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி.. பெற்றோருக்கு ஆறுதல்!