Tamilnadu

"ஒரே ஒரு திருட்டு, ஓஹோனு வாழ்க்கை.. பேராசையால் போலிஸிடம் சிக்கிய வங்கி கொள்ளையர்கள்” : சிக்கியது எப்படி?

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மேற்கு ரத வீதியில் இந்தியன் வங்கியின் கிளை ஒன்று உள்ளது. இதில் கடந்த ஞாயிறன்று இரவு சிசிடிவி கேமராக்களின் இணைப்புகளைத் துண்டித்து, வங்கியின் ஜன்னல்களை அறுத்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.

இந்த கொள்ளை முயற்சி குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவரின் கைப்பையைப் பறித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலிஸார் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரைச் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர். அவர்கள் போலிஸாரின் கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாகக் கூறினர்.

இதையடுத்து போலிஸார் அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தியதில், பெண்ணிடம் கைப்பையை பறித்ததை ஒப்புக்கொண்டனர். மேலும் வங்கி கொள்ளையில் ஈடுபட்டதும் இவர்கள்தான் என்பது போலிஸாருக்கு தெரியவந்தது. மேலும் திருச்செங்ககோடு மாங்குட்டை பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் மற்றும் சாணார்பாளையம் பகுதியைச் சேர்ந்த 18 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது.

பின்னர், போலிஸார் நடத்திய விசாரணையில் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடவேண்டும் என்பதற்காகவே வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் இவர்களால் கொள்ளையடிக்க முடியவில்லை. இவர்கள் கையில் பணம் இல்லாததால் சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கைப்பையைத் பறித்துச் சென்று போலிஸிடம் சிக்கியுள்ளனர். இதையடுத்து போலிஸார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Also Read: “கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட அரசியல் பிரமுகர் வெட்டிக் கொலை” : பதபதைக்கும் வீடியோ காட்சி - நடந்தது என்ன?