Tamilnadu

அ.தி.மு.கவில் அடுத்து சிக்கப்போவது யார்? : கிலியில் முன்னாள் அமைச்சர் - Hint கொடுத்த அமைச்சர் மூர்த்தி!

பாரதியார் நூற்றாண்டு நினைவு நாளையொட்டி வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி , மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ்சேகர் ஆகியோர் பாரதியார் பணியாற்றிய புகழ்மிக்க சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பி.மூர்த்தி, சிறு வணிகர்களாக இருந்தாலும் பெரும் தொழில் அதிபர்களாக இருந்தாலும் கடன் பெறுவதற்கு பதிவு அலுவலகத்திற்கு செல்லாமல் வங்கியில் இருந்து ஆன்லைன் மூலமாக பதிவு செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டுள்ளது.

பல்வேறு மாற்றங்கள் செய்து வந்தாலும் கூட பதிவு அலுவலகங்களில் முறைகேடு நடந்தால் சார்பதிவாளர் மட்டுமன்றி சம்பந்தப்பட்டுள்ள பதிவாளர்கள் என யாராக இருந்தாலும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

தவறு செய்யும் பட்சத்தில் 3 ஆண்டு சிறைத் தண்டனை சட்டம் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநர் அனுமதி பெற்றவுடன் நடைமுறைப்படுத்தப்படும். ஆவண எழுத்தர், சாட்சிகள் என சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் குற்றம் உறுதி செய்யப்பட்டால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்திருக்கிறது. இதற்காக உயர்நிலைக்குழு அமைக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து விவசாயிகள், பத்திரப்பதிவு செய்ய வருபவர்கள் எளிதாக பதிவு மேற்கொள்ள ஆறு மாத காலத்தில் எளிமைப்படுத்தப்படும்.

பல்லாயிரம் கோடி சொத்துக்கள் மோசடியாக பதியப்பட்டுள்ளதாக தகவல்கள் உள்ளது. கடந்த ஆட்சியில் பதிவு மற்றும் வணிக வரித்துறையில் தவறு செய்த அதிகாரிகள், அமைச்சர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 2016 முதல் 2021 வரை அ.தி.மு.க ஆட்சியில் வெளிப்படையாகவே பத்திரப்பதிவு துறையில் பல மோசடிகள் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளது. முறைகேடு தொடர்பாக விசாரணை உயர்நிலைக்குழு அமைக்கப்பட உள்ளது என்றார்.

Also Read: “நிதி அமைச்சரை நாங்க நியமிச்சு பெட்ரோல் விலையை குறைச்சு காட்டட்டுமா? : மோடி அரசுக்கு ப.சிதம்பரம் சவால்!