Tamilnadu

“CAA விவகாரத்தில் பாஜகவுக்கு உண்மையாக இருக்கும் அதிமுக கும்பல்” : எடப்பாடியின் நாடகம் அம்பலம் - முரசொலி!

முரசொலி நாளேட்டின் இன்றைய (10-09-2021) தலையங்கம் வருமாறு:

நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கேள்விக்குறியாக்கும் ஒன்றிய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித் தீர்மானத்தை நேற்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்தார்கள். எந்தச் சட்டத்துக்கு எதிராக கடந்த இரண்டாண்டு காலமாக திராவிட முன்னேற்றக் கழகம் போராடியதோ அந்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை இன்றைய தினம் சட்டமன்றத்திலும் நிறைவேற்றிக் காட்டி தலை நிமிர்ந்து நிற்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர். எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு, ஆளும்கட்சியாக ஆனபிறகு மறுபேச்சு என்று எந்நாளும் கழகம் இருந்ததில்லை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த தனித்தீர்மானத்தை சட்டமன்றத்துக்குள் இருந்து அ.தி.மு.க ஆதரித்திருக்க வேண்டும். அல்லது தீர்மானத்தை எதிர்த்திருக்க வேண்டும். இரண்டையும் செய்யவில்லை. வேறு ஒரு காரணத்தைச் சொல்லி முன்னதாகவே வெளிநடப்பு நாடகத்தை நடத்தி வெளியேறி விட்டார்கள்.

காலையில் வெளிநடப்புச் செய்தவர்கள், மாலையில் சபைக்குள் வந்தார்கள். அப்போது இது தொடர்பான விமர்சனத்தை தி.மு.க சட்டமன்றக் கொறடா முனைவர் கோவி செழியன் வைத்தார்கள். அப்போதாவது குடியுரிமைச் சட்டம் தொடர்பான அ.தி.மு.க கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதைச் சொன்னார்களா என்றால் இல்லை. அ.தி.மு.க சட்டமன்றக் கட்சிக் கொறடா முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள், முடிந்தவரை மழுப்பினார். குடியுரிமைச் சட்டம் என்ற சொல்லைச் சொல்லாமல், ‘அ.தி.மு.க எப்போதும் சிறுபான்மையினர்க்கு பாதுகாவலாகத் தான் இருந்துள்ளது' என்றார். இதைவிட நகைப்புக்குரிய காரியம் ஏதாவது இருக்க முடியுமா?

இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது என்ன நடந்தது மாநிலங்களவையில் CAAவுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்:

அ.தி.மு.க எம்.பி.க்கள்:

01. எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன்

02. என்.சந்திரசேகரன்

03. ஏ.முகமது ஜான்

04. ஏ.கே.முத்துக்கருப்பன்

05. ஏ.நவநீதகிருஷ்ணன்

06. ஆர்.சசிகலா புஷ்பா

07. ஏ.கே.செல்வராஜ்

08. ஆர்.வைத்திலிங்கம்

09. ஏ.விஜயகுமார்

10. விஜிலா சத்யநாத்

பா.ம.க. எம்.பி.:

11. அன்புமணி ராமதாஸ் - இவர்களால்தான் சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமைச் சட்டம் மாநிலங்கள் அவையில் நிறைவேறியது.

மாநிலங்களவையில் எதிர்த்து வாக்களித்தவர்கள்:

தி.மு.க எம்.பி.க்கள்:

1. திருச்சி சிவா

2. ஆர்.எஸ்.பாரதி

3. டி.கே.எஸ்.இளங்கோவன்

4. எம்.சண்முகம்

5. பி.வில்சன்

ம.தி.மு.க. எம்.பி.:

6. வைகோ

காங்கிரஸ் எம்.பி.:

7. பி.சிதம்பரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.

8. டி.கே.ரங்கராஜன்

அதாவது ஆதரித்தவர்கள் 125 பேர். எதிர்த்து வாக்களித்தவர்கள் 105 பேர். பா.ம.க. மற்றும் அந்த 10 அ.தி.மு.க. எம்.பி.க்களின் ஓட்டுதான் குடியுரிமைச் சட்டம் நிறைவேறக் காரணம். அந்த 11 பேரும் எதிர்த்து வாக்களித்திருந்தால் தோற்றுப் போயிருக்கும்.

ஆதரவு 125-11=114 ஆக குறைந்திருக்கும்.

எதிர்ப்பு 105+11=116 என்று உயர்ந்திருக்கும்.

எதிர்த்தவர்கள் 116 பேர் என்றும் ஆதரித்தவர்கள் 114 பேர் என்றும் வந்திருக்கும். குடியுரிமைச் சட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்கும். 116 க்கும் 114 என்ற கணக்கில் CAA சட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்கும்.

இதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து சிறுபான்மையினர்க்கான பாதுகாவலராக நாடகம் போடுகிறது அ.தி.மு.க குடியுரிமைச் சட்டமானது இசுலாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினரையும், ஈழத்தமிழர்களையும் மட்டுமல்ல; இங்குள்ள தமிழர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்போகும் சட்டம் ஆகும். அதனால்தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி.மு.க சார்பில் கடுமையாக எதிர்க்கப்பட்டது. மாநிலங்களவையில் தி.மு.க குழுத்தலைவர் திருச்சி சிவா அவர்கள் இரண்டு திருத்தங்களைக் கொடுத்தார்கள். இசுலாமியர்கள் பெயரும் இலங்கை நாட்டின் பெயரும் சேர்க்கப்பட வேண்டும் என்று சொன்னார்கள். அந்தத் திருத்தத்துக்கு எதிராக வாக்களித்த கட்சிதான் அ.தி.மு.க.

குடியுரிமைச் சட்டத்தை முழுமையாக பழனிசாமி ஆதரித்தார். அந்தச் சட்டத்தால் யாருமே பாதிக்கப்படவில்லையே என்று சட்ட மேதையைப் போல கேள்வி கேட்டார். யார் பாதிக்கப்பட்டது, காட்டுங்கள் என்று குறளி வித்தைக்காரரைப் போல நிருபர்களைப் பார்த்துக் கேள்வி கேட்டார். இதே சட்டமன்றத்தில் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி சட்டமேதையைப் போல வகுப்பு எடுத்தார் பழனிசாமி. இவர்கள்தான் இன்று சிறுபான்மையினருக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.

சட்டமன்றத் தேர்தல் வந்ததும் பயம் பற்றிக் கொண்டது பழனிசாமிக்கு. உடனே அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பதைப் போல நடித்தார்கள். அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் 80 ஆவது வாக்குறுதி, ‘மைய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கைவிட வலியுறுத்தல்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அதன் கீழே, “மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மத்திய அரசை அ.தி.மு.கழகம் தொடந்து அழுத்தம் கொடுத்து வலியுறுத்தும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தலுக்காக நடத்தப்பட்ட நாடகம் இது. பின்னர் இவர்கள் ஒன்றிய அரசை வலியுறுத்தினார்களா என்றால் இல்லை! தன்னுடைய தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதற்கு உண்மையாக இருக்க அ.தி.மு.க.வுக்கே ஒரு வாய்ப்புக் கிடைத்தது. முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து தனது தேர்தல் அறிக்கைக்கு அ.தி.மு.க உண்மையாக இருந்திருக்க வேண்டும். மாறாக இன்னமும் பா.ஜ.க.வுக்குதான் உண்மையாக இருக்கிறார்கள்.

‘நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு, இடையில் ஆண்டவன் சிரிப்பு' என்று சொல்வதைப் பார்க்கும் போது சிரிப்பு வரவில்லை. அருவருப்பு தான் வருகிறது!

Also Read: “திராவிடம் என்றால் என்ன தெரியுமா?” : ஆரியச் சக்திகளுக்கும், கைக்கூலிகளும் ‘முரசொலி’ தலையங்கம் பதிலடி!