Tamilnadu

நடு ரோட்டில் பெண் பத்திரிகையாளருக்கு தொல்லை கொடுத்த வாலிபர்.. அதிரடியாக கைது செய்த போலிஸ்!

தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றும் பெண் பத்திரிகையாளர் ஒருவர் அண்ணா நகர் காவல்நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்திருந்தார். அதில், "அண்ணாநகர் 2வது அவென்யூவில் உள்ள ஐயப்பன் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்.

அப்போது காரில் வந்த இளைஞர் ஒருவர் திடீரென என்னை வழிமறித்து தவறாக நடந்து கொண்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" எனத் தெரிவித்திருந்தார். அப்பெண்ணின் புகாரின் அடிப்படையில் போலிஸார் விசாரணை நடத்தினர்.

மேலும் பத்திரிகையாளர் குறிப்பிட்ட இடத்திலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது காரில் வந்த இளைஞர் ஒருவர், பத்திரிகையாளரை வழிமறித்து தொந்தரவு செய்தது பதிவாகியிருந்தது. இதையடுத்து இளைஞர் வந்த காரின் நம்பரை வைத்து போலிஸார் விசாரணை நடத்தினர்.

அவர் சென்னை அண்ணா நகர் 12 வது பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பதும், அமெரிக்காவில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. பின்னர் அவரது வீட்டிற்குச் சென்ற போலிஸார் அவரை கைது செய்தனர்.

இது தொடர்பாகப் பெண் பத்திரிகையாளர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதில், "காவல் உதவி ஆணையர் அகஸ்டின் உங்களிடம் தகராறில் ஈடுபட்டவரை கைது செய்துவிட்டதாகத் தெரிவித்தார். துரிதமான நடவடிக்கை எடுத்ததற்கு அகஸ்டின் மற்றும் எஸ்.ஐ. செல்லத்துரை மற்றும் போலிஸாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “இந்துக்கள் மனதை புண்படுத்திய கே.டி.ராகவன், மதன் மீது நடவடிக்கை எடுங்க” : கமிஷனரிடம் பியூஷ் மனுஷ் புகார்!