Tamilnadu
CAA-க்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இது மக்களை மத ரீதியாகப் பிரிக்கிறது என்பதால் இந்த சட்டத்தை ஆரம்ப நிலையிலேயே திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்ப்பைத் தெரிவித்தது.
இந்த சட்டமானது, நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு, குறிப்பாக மதச்சார்பற்ற தன்மைக்கு, முற்றிலும் எதிரானதாகும் என்ற காரணத்தினாலும், அது நாட்டு நலனுக்கு உகந்ததல்ல என்பதாலும் எதிர்ப்பை தெரிவித்தோம்.
இச்சட்டத்தினை எதிர்க்கும் வகையில், அது நிறைவேற்றப்படுவதற்கு முன்பே, அதனை எதிர்த்து இந்த மன்றம் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால், அக்கோரிக்கை முந்தைய அரசால் ஏற்கப்படவில்லை.
அகதிகளாக வருபவர்களை சக மனிதர்களாகப்பார்க்கவேண்டும், மத ரீதியிலோ, இன ரீதியிலோ, எந்த நாட்டிலிருந்து வருபவர்கள் என்ற ரீதியிலோ அவர்களைப் பிரித்துப் பார்க்கக்கூடாது என்பதுதான் சரியான பார்வையாக இருக்கும். வாழ்க்கையை இழந்து, சொந்த நாட்டில் வாழ முடியாமல் வேற்று நாட்டுக்கு வருபவர்களைக் கூட மதம் பிரித்துப் பார்ப்பது அகதிகளுக்கு நன்மை செய்வது ஆகாது. ஏற்கனவே துன்பப்பட்ட மக்களை மேலும் துன்பத்துக்கு ஆளாக்கிப் பார்ப்பது ஆகும்!
அரசியல் ரீதியான பாகுபாட்டை சட்டரீதியான பாகுபாடாக உறுதிப்படுத்துவது மிகமிகத் தவறானது ஆகும்.
உலகில் மிகப்பெரிய மக்களாட்சி நாடாக இன்றும் இந்தியா மிளிர்வதற்குக் காரணம் “வேற்றுமையில் ஒற்றுமை’’ என்னும் தத்துவம் ஆகும். பல்வேறு மொழிகள், பல்வேறு இனங்கள், பல்வேறு மதங்கள், பல்வேறு கலாச்சாரங்கள் லொண்ட நாடாக இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமையுடன் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்தியாவின் சுதந்திரம் என்பது, அனைவரும் ஒன்று சேர்ந்து போராடியதால் கிடைத்தது. இமயம் முதல் குமரி வரையிலான ஒற்றுமையால் அடைந்த வெற்றி ஆகும்.
இத்தகைய உன்னதமான நல்லிணக்க மரபிற்கு ஊறுவிளைவிக்கும் வகையில், இந்திய மக்களிடையே பேதத்தைத் தோற்றுவிக்க வழிவகை செய்யும் இச்சட்டத் திருத்தம் தேவையற்றது, ரத்து செய்யப்பட வேண்டியது என நாம் கருதுகிறோம். மேலும், இச்சட்டத்தின் நீட்சியாக தேசிய குடிமக்கள் அல்லது குடியுரிமைப் பதிவேடு (National Register of Citizens), தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டைத் (National Population Register) தயாரிக்கும் பணியினையும் ஒன்றிய அரசு முழுவதுமாகக் கைவிடவேண்டும் எனவும் நாம் கருதுகிறோம்.
மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில், இணக்கமாக ஒன்றிணைந்து வாழும் இந்திய மக்களிடையே மத-இன ரீதியான பாகுபாடுகளை ஏற்படுத்தி, இந்திய ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கேள்விக் குறியாக்கும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் ரத்து செய்ய வேண்டுமென ஒன்றிய அரசை இம்மாமன்றம் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டு அமைகிறேன்.
குடியுரிமை என்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை. இந்திய நிலப்பரப்புக்குள் தங்கள் இருப்பிடத்தைக் கொண்ட அனைவருக்கும் குடியுரிமை வழங்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14 வது பிரிவு இந்திய நிலப்பரப்புக்குள் எந்த நபருக்கும் எந்தக் குடிமகனுக்கும் சட்டப்படியான சமத்துவம், அனைவருக்கும் சட்டப்படியான பாதுகாப்பு ஆகிய அம்சங்களை அரசு மறுக்க முடியாது.
1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் படி மதம் ஒரு அடையாளமாக இல்லை.” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அரசின் இத்தகைய நடவடிக்கை பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துவருகின்றனர்.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!