Tamilnadu
“தன் வழி.. தனி வழி என்று நிரூபித்து விட்டார்” : தமிழ்கூறும் நல் உள்ளங்கள் மு.க.ஸ்டாலினைப் பாராட்டுகிறது!
‘தினத்தந்தி’ (05.09.2021) தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :-
தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு என்று பாடினார் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை. அந்த வழிவந்த தமிழக அரசியல்வாதிகளான நமது தலைவர்களுக்கும் தனியான ஒரு அரசியல் நாகரிகம் உண்டு. தனியான பெருந்தன்மை உண்டு. அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அதையும் தாண்டி அடுத்த கட்சிகளில் உள்ள தலைவர்களை மதிக்கும் பண்பு, பெருந்தலைவர் காமராஜர் தொடங்கி இன்றும் நீடித்து வருவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.
காங்கிரஸ் தோல்வியடைந்ததும் பெருந்தலைவர் காமராஜர் 6 மாத காலத்துக்கு அண்ணா தலைமையிலான தி.மு.க. அரசை பற்றி எந்த விமர்சனமும் செய்யப்போவதில்லை என்று கூறினார். கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் காலமான நேரத்தில் அவர் வீட்டுக்கு வருவதற்குமுன்பே அங்குச்சென்று எல்லா ஏற்பாடுகளையும் கவனித்தவர் காமராஜர். அவர் குடியாத்தம் தேர்தலில் போட்டியிட்டபோது ’குணாளா, குலக்கொழுந்தே’ என்று அறிஞர் அண்ணா வாய்மணக்க அழைத்து, அவர் வெற்றிக்காக பாடுபட்டார்.
காங்கிரசுக்கு எதிர்ப்பு, காமராஜருக்கு மட்டும் ஆதரவு என்ற நிலைப்பாட்டை குடியாத்தம் தேர்தலுக்குபிறகு பல நேரங்களில் அண்ணா கடைப்பிடித்தார். கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த நேரத்தில், தேசிய மாணவர் தமிழ் வளர்ச்சிக்குழு சார்பாக நடந்த காமராஜர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு, காமராஜரை வானளாவ புகழ்ந்து பேசினார். அந்த பேச்சின் இறுதியில். “காமராஜர் வாழ்க, பல்லாண்டு வாழ்க, தமிழ்போல் தழைத்து வாழ்க!” என வாழ்த்தி பேச்சை முடித்தார்.
எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த நேரத்தில் சட்டமன்ற மேலவையில் முன்னாள் அமைச்சர் ராஜாமுகமது, எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி என்று கூறியதும், வேகமாக எழுந்த எம்.ஜி.ஆர்., ’எனது அமைச்சர், கருணாநிதி என்று கூறியதை அவைக்குறிப்பிலிருந்து நீக்கவேண்டும். அதை கலைஞர் என்று பதிவிடவேண்டும். எனது அமைச்சரும் தான் கூறியதற்கு வருத்தம் தெரிவிக்கவேண்டும்’ என்று கூறினார். எதிரே உட்கார்ந்திருந்த கருணாநிதி, அதனால் என்ன? வேண்டாம்... வேண்டாம்... என்று எவ்வளவோ மறுத்த நேரத்திலும், அமைச்சர் ராஜாமுகமதுவை, எம்.ஜி.ஆர். வருத்தம் தெரிவிக்கவைத்தார்.
இப்போது முதல்-அமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின், கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று அறிவித்ததை, எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்று, கருணாநிதி பற்றிய அனைத்து சிறப்பு அம்சங்களும் அந்த நினைவிடத்தில் இடம்பெறவேண்டும் என்று கோரிக்கை வைத்ததோடு மட்டுமல்லாமல், தன் தந்தை கருணாநிதியின் தீவிரபக்தர் என்று அவையில் வெளிப்படையாக சொன்ன பாங்கு போற்றுதலுக்குரியதாக இருந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் சட்டமன்றத்தில் இது எனது அரசாகத்தான் முதலில் உருவானது. இப்போது நான் சொல்கிறேன். இது எனது அரசு அல்ல. நமது அரசு. இதுதான் என்னுடைய கொள்கை என்று கூறி, அரசியலில் ஒரு நல்ல பரிமாணத்தை உருவாக்கினார்.
இதுமட்டுமல்லாமல், இப்போது நடப்பது தி.மு.க. ஆட்சி. 65 லட்சம் மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் புத்தகப்பையில் ஜெயலலிதா படமும், எடப்பாடி பழனிசாமி படமும் அ.தி.மு.க. ஆட்சியில் பொறிக்கப்பட்டிருந்தது. இப்போது தி.மு.க. ஆட்சி நடந்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் அந்த புத்தகப்பையை மாற்றிக்கொடுக்கவேண்டும் அல்லது அதில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டலாம் என்ற ஒரு கருத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தபோது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த பையில் அவர்கள் முகமே இருக்கட்டும். இதற்காக ஆகும் செலவான ரூ.13 கோடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வேறு ஏதாவது திட்டங்கள் கொண்டுவருவேன் என்று தெரிவித்துவிட்டார்.
எம்.ஜி.ஆர். பெயரிலான சத்துணவுத் திட்டத்தை அந்த பெயரிலேயே செயல்பட வைத்து அரசு பணம் ஒதுக்கிக்கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி அரசு கொண்டுவந்த கல்வி தொலைக்காட்சியை மேம்படுத்துவதற்காக திட்டங்களை தீட்டிக்கொண்டிருக்கிறார். அம்மா உணவகமும் தொடர்ந்து இயங்குகிறது. இவ்வாறு தமிழகத்துக்கு புகழ்சேர்த்த தலைவர்கள் காட்டிய பெருந்தன்மையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் தொடர்ந்து காட்டி தன் வழி... தனி வழி... என்று நிரூபித்துவிட்டார் என தமிழ்கூறும் நல்உள்ளங்கள் பாராட்டுகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!