Tamilnadu
“மோடி அரசின் ‘குஜராத் மாடல்’ எதையும் உருவாக்காது; அழிக்கும் அல்லது விற்கும்” : முரசொலி சரமாரி தாக்கு !
முரசொலி நாளேட்டின் இன்றைய (04-09-2021) தலையங்கம் வருமாறு:
“பொதுச்சொத்துகளை ஒன்றிய அரசு விற்கத் திட்டமிட்டிருப்பது தேச நலனுக்கு உகந்தது அல்ல’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் எழுப்பிய குரல் இந்தியா முழுமைக்கும் எதிரொலித்தாக வேண்டும். ‘குஜராத் மாடல்’ என்பது எதையும் உருவாக்காது, அழிக்கும் அல்லது விற்கும் என்பதைத்தான் பா.ஜ.க.வின் ஆட்சி திரும்பத் திரும்பக் காட்டிக் கொண்டு இருக்கிறது. அதனைப் பட்டவர்த்தனமாகக் கூச்சமே இல்லாமல் செய்வதுதான் பா.ஜ.க.வின் தனித்தன்மை ஆகும். ‘ஆட்சிக்கு வந்த பின்னால் எத்தனை பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி இருக்கிறீர்கள்’ என்று கேட்டால், எதுவும் இருக்காது. ‘எத்தனை பொதுத்துறை நிறுவனங்களை முடக்கினீர்கள், விற்றீர்கள்’ என்றால் வரிசையாகப் பட்டியல் போடலாம்.
இத்தனை நடந்தபிறகும் பொருளாதாரத்தை நாங்கள் இமய உயரத்துக்கு வைத்திருக்கிறோம் என்று வாய்நீளம் காட்டுவதைத்தான் காணச் சகிக்கவில்லை. எதையும் புதிதாக உருவாக்காத ஒன்றிய பா.ஜ.க அரசு எதையெல்லாம் விற்கப் போகிறது என்பதை ஆங்கில ஊடகங்கள் விரிவாக எழுதி இருக்கின்றன. விற்கப்போகும் பொதுச்சொத்துகளின் பட்டியலை 8 அமைச்சகங்கள் கொடுத்துள்ளன என்றும் அவற்றில் ரயில் நிலையங்கள் முதல் தொலைத்தொடர்பு கோபுரங்கள், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு குழாய் பாதைகள், மின்சார டிரான்ஸ்மிஷன், விளையாட்டு அரங்கங்கள், சாலைகள் வரை அடங்கும் என்றும் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி தெரிவிக்கிறது.
இந்த ஆண்டு சொத்துகளை விற்பதன் மூலம் ரூ.2.5 லட்சம் கோடி ரூபாய் நிதிதிரட்டும் மோடி அரசின் திட்டத்தின்படி இந்தப் பொதுச் சொத்துகளின் பட்டியலை அமைச்சகங்கள் தயாரித்துள்ளதாக அச்செய்தி கூறுகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள 2021-22- இல் விற்பதற்கான சொத்துகளின் விபரம் பின்வருமாறு அமைந்துள்ளது:
1. ரயில்வே அமைச்சகம்: ரூ.90,000 கோடி மதிப்பிலான 50 ரயில் நிலையங்கள், 150 தனியார் பயணியர் ரயில்கள் -
2. தொலைத்தொடர்பு அமைச்சகம்: ரூ. 40,000 கோடி மதிப்பிலான பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல்., பாரத்நெட் ஆகியவற்றின் சொத்துகள் -
3. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை: ரூ.30,000 கோடி மதிப்பிலான 7,000 கி.மீ-க்கு அதிகமான நீளம் கொண்ட சாலைகள்-
4. மின்சாரத் துறை: ரூ.27,000 கோடி மதிப்பிலான மின்சார டிரான்ஸ்மிஷன் பாதைகள் -
5. இளைஞர்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம்: ரூ.20,000 கோடி மதிப்பிலான விளையாட்டு மைதானங்கள்-
6. விமானப் போக்குவரத்துத் துறை: ரூ.20,000 கோடிக்கு 13 விமான நிலையங்கள். டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்களின் பங்குகளை விற்றல் -
7. பெட்ரோலியம் - இயற்கை எரிவாயு அமைச்சகம்: ரூ.17,000 கோடி மதிப்பிலான கெயில், ஐ.ஒ.சி.எல்., எச்.பி.சி.எல். குழாய் பாதைகள் -
8. கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள், நீர்வழிகள் அமைச்சகம்: ரூ.4,000 கோடி மதிப்பிலான 30-க்கும் மேற்பட்ட கப்பல் நிறுத்தும் பெர்த்துகள் (berths) - என்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இது தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானம் சட்டமன்றத்தில் வந்தபோது, முதலமைச்சர் அவர்கள் தமிழக அரசின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். “நாட்டின் பொதுத் துறை நிறுவனங்கள் நம் அனைவருடைய சொத்தாகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் சிறு குறு தொழில்கள் ஆணிவேராக விளங்கக்கூடிய வகையில் பெருந்தொழில் நிறுவனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. லாப நோக்கம் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் மக்கள் நலன் கருதிச் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பதோ, குத்தகைக்கு விடுவதோ தேச நலனுக்கு உகந்தது அல்ல’’ என்று கூறிய முதலமைச்சர், இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுத இருப்பதாகச் சொன்னார். தமிழ்நாடு முதலமைச்சர் மட்டுமல்ல, இக்கருத்தை ஏற்றுக் கொள்ளும் மற்ற மாநில முதலமைச்சர்களும் இதுபோல் பிரதமருக்குக் கடிதம் எழுத வேண்டும்.
இப்படி, விற்க இருக்கும் சொத்துக்களில் தமிழகத்தில் இருக்கும் சொத்துகளும் இருக்கின்றன என்று தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சொல்லி இருக்கிறார். பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்குவதற்கு மாநில அரசு செய்துள்ள உதவிகளை அவர் சுட்டிக் காட்டி உள்ளார். எனவே தன்னிச்சையாக இதனை ஒன்றிய அரசு செய்ய முடியாது. எத்தனை ஆண்டுகளாக எத்தனை கோடித் தொழிலாளர்களால் இந்த நிறுவனங்கள் வளர்ந்துள்ளன என்பதையும் ஒன்றிய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். “தலை முதல் கால் வரை ஒவ்வொரு துவாரத்திலும் ரத்தமும் அழுக்கும் சொட்டச் சொட்ட மூலதனம் வருகிறது’’ என்று பேராசான் கார்ல் மார்க்ஸ் எழுதினார். இத்தகைய சிந்தனையை பா.ஜ.க அரசிடம் எதிர்பார்க்க முடியாதுதான்.
ஆனால் குறைந்தபட்ச ஆக்கபூர்வமான முன்னெடுப்புகள் எதுவும் இல்லாமல்; இருப்பதை மட்டும் விற்றுக்கொண்டே போவது என்ன வகைப்பட்ட பொருளாதாரம்? என்ன வாக்குறுதி கொடுத்தார்கள்? என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்? எத்தனை லட்சம் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை உருவாக்கப் போவதாகச் சொன்னார்கள்? அதில் எந்த அளவை எட்டி இருக்கிறார்கள்? அப்படி எட்டமுடியாமல் போனதற்கு என்ன காரணம்? எதனையும் உருவாக்குவதன் மூலமாக, வளர்த்தெடுப்பதன் மூலமாக பொருளாதாரத்தை மேம்படுத்த முடியுமா? அல்லது எல்லாவற்றையும் விற்றுக் கொண்டே போவதன் மூலமாக பணம் சேர்க்க முடியுமா? இந்தக் குறைந்தபட்ச சிந்தனைகூட இல்லாதவர்களாக பா.ஜ.க ஆட்சியாளர்கள் இருப்பது ஏன்?
அனைத்துத் துறைகளிலும் ‘மொட்டை’ அடிக்கப்பட்ட நிலையில் தேசம் ஜவஹர்லால் நேருவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்தான் பல பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார். அதற்காக தனியார் துறையை முடக்கிவிடவில்லை. தனியார் துறைக்கும் உதவிகள் செய்தார். பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக ஒன்றிய அரசு - மாநில அரசுகள் - தொழிலாளர்கள் வாழ்க்கை - தொழில்வளர்ச்சி - உள்நாட்டு உற்பத்தி - வெளிநாட்டு ஏற்றுமதி - வேலைவாய்ப்புகள் - சொத்துக்கள் சேர்ப்பு என்பதை ஒருசேர இணைத்தும் பிணைத்தும் பொதுத்துறை நிறுவனங்களை வளர்த்தெடுத்தார்.
‘இந்தியப் பொருளாதாரத்தை வளர்த்தெடுக்கும் கோவில்கள்’ என்று பொதுத்துறை நிறுவனத்தைச் சொன்னார் பிரதமர் நேரு. காங்கிரசை ஒழிப்பதாக நினைத்து நேருவை ஒழிப்பதும், நேருவை ஒழிப்பதாக நினைத்து பொதுத்துறை நிறுவனங்களைச் சிதைப்பதும் சரியல்ல. தனது காலுக்குக் கீழே தானே குழி தோண்டுவதாகும். இது தேசத்தைச் சிதைப்பது. அதனால் தான் தேச நலனுக்கு உகந்தது அல்ல என்று முதலமைச்சர் எச்சரித்துள்ளார்! அரசியலைக் கடந்து சிந்திக்க வேண்டிய நெருக்கடியான சூழலை ஒன்றிய அரசு ஏற்படுத்தி வருகிறது!
Also Read
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!