Tamilnadu

“நாங்களும் ரெடி” : குறுக்கே புகுந்த எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை, தொழிலாளர் நலன்துறை ஆகிய துறைகளின் மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய கும்பகோணம் தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன், “இங்கு சட்டமன்றத்தில் கடந்த 2016ம் ஆண்டு முதல் நடைபெற்ற ஒன்றிரண்டு சம்பவங்களை குறிப்பிட்டே ஆக வேண்டும். கண்ணுக்கு தெரிகிற தூரம் வரை எதிரிகளே இல்லை என்று ஆவேசமாக சட்டமன்றத்தில் பேசியவர்களை பார்த்தோம்.

எங்கே உங்கள் தளபதி? எந்த போர்ப்படைக்கு அவர் தளபதி என்றெல்லாம் அவர்கள் பேசினார்கள். ஆனால் இன்று தமிழகத்திற்கே போர்ப்படை தளபதியாக இருந்து இங்கு, அமைதியாக, அனைவரும் விரும்புகிற, கவுரவம் இல்லாமல் அமைதியான தளபதியாக அமர்ந்திருக்கிறார்.

இன்னொரு குரலும் அடிக்கடி ஒலிக்கும். ஒலிபெருக்கியை கண்டாலே இவர்போய் பேசுவார். நகைச்சுவை என்ற பெயரில், அனைவரையும் விமர்சனம் செய்து வந்தார். ஸ்டாலின் வெற்றி பெறவே முடியாது என்று கூறியதுடன், வேண்டும் என்றே முதலில் ராயபுரம் தொகுதியில் என்னை வெற்றி பெறட்டும் என்று கூறினார்.

ஆனால் இன்று அவர் முகத்தை இந்த மன்றத்தில் தேடிப்பார்க்கிறேன். ஆனால் அந்த முகத்தை காணமுடியவில்லை. ஆனால் எங்கள் தலைவர், சரியான ஒரு வேலை செய்தார். யாருக்கும் அறிமுகம் இல்லாத, ஐட்ரீம்ஸ் மூர்த்தியை ராயபுரம் தொகுதியில் போட்டியிட வைத்தார். இன்று இந்த மன்றத்தில் அவர் முகத்தை காண்கிறேன். ஆனால், சவால் விட்டவர் முகம் தெரியவில்லை.” என்றார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஏற்கனவே சபாநாயகர் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர் 15 நிமிடம் மட்டுமே பேசவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். எனவே அருள்கூர்ந்து, மானியக் கோரிக்கைக்கு வாருங்கள்; அது பற்றி பேசுங்கள்.” என்றார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “உறுப்பினர் அவையில் இல்லாத ஒருவர் பற்றி பேசுகிறார். அதேபோன்று 2017ம் ஆண்டு நடந்த சம்பவம் பற்றி சொன்னாலும் நன்றாக இருக்கும்.” என்றார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உறுப்பினரிடம் நானும், நேரத்தை வீணாக்காதீர்கள் என்று கட்டுப்படுத்தி சொல்லியிருக்கிறேன். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் அதுபற்றி பேசினால், நாங்களும் பேசத் தயாராக இருக்கிறோம்.” எனத் தெரிவித்தார்.

Also Read: “இதுபோன்ற அரசியலை நான் பார்த்ததில்லை; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அசத்துறாரு” : விஜய் சேதுபதி பாராட்டு!