Tamilnadu
“6 மாசம் என் புள்ள என்னென்ன சித்ரவதையெல்லாம் அனுபவிச்சானோ” : தாயால் தாக்கப்பட்ட குழந்தையின் தந்தை பேட்டி!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் மதுரமோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவழகன். இவரது மனைவி துளசி (23). இவர்களுக்கு கோகுல் (4) மற்றும் பிரதீப் (2) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது மோட்டூர் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
இரண்டு ஆண்டுகளாக சென்னையில் வசித்து வந்தபோது துளசிக்கும் சென்னையை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மோட்டூர் கிராமத்தில் வசித்து வந்த துளசியிடம் செல்போனில் அடிக்கடி தொடர்புகொண்டு மண்கண்டன் பேசியுள்ளார்.
அப்போது குழந்தைகளைப் பெற்றுக்கொண்டதால் உன் அழகு போய்விட்டது என்றும் இளைய மகன் பிரதீப் உன் கணவர் போல் உள்ளதாகவும் தெரிவித்ததை தொடர்ந்து அக்குழந்தையை கண்மூடித்தனமாகவும் கொடூரமாகவும் தாக்கி அதை வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பி உள்ளார் துளசி.
இந்நிலையில், கடந்த 50 நாட்களுக்கு முன் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு துளசி தன் தாய் வீடான ஆந்திர மாநிலம் சித்தூருக்கு சென்றுவிட்டார். இதனிடைய வீட்டில் இருந்த செல்போனில் இருந்த வீடியோவை வடிவழகன் பார்த்தபோது தன் மகனை கொடூரமான முறையில் தாக்கியது தெரியவந்தது.
இதுகுறித்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் வடிவழகன் அளித்த புகாரின் பேரில், சத்தியமங்கலம் போலிஸார் வழக்கு பதிவு செய்து, சித்தூரில் உள்ள துளசியை கைது செய்து விசாரணை நடத்தி கடலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைத்தனர். இதில், சென்னையில் உள்ள காதலன் மணிகண்டனுக்காகத்தான் குழந்தையை தாக்கியதாக கூறியுள்ளார்.
மேலும் குழந்தையை தாக்கினால் கணவரை விட்டு பிரிந்து விடலாம் என்று குழந்தையை தாக்கியதாக விசாரணையில் துளசி கூறினார். இதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் போலிஸார் தனிப்படை அமைத்து, மணிகண்டனை சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தேடி வந்தனர். அப்போது போலிஸாருக்கு மணிகண்டன் புதுக்கோட்டை மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்ற தனிப்படை போலிஸார், அறந்தாங்கியில் உள்ள தனது சித்தி வீட்டில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்தனர். மேலும் விசாரணையில், மணிகண்டனின் (31) சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் மச்சவாடி என்பதும் தெரியவந்தது. இவர் தனது பெயரை பிரேம்குமார் எனக் கூறி துளசியிடம் பழகி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்த போலிஸார் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், குழந்தையின் தந்தை தனியார் செய்தி நிறுவனத்திற்கு உருக்கமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்தப் பேட்டியில், “காலையில் வேலைக்குச் சென்றால் மாலையில் தான் வருவேன். ஒருநாள் காலையில் வேலைக்குச் செல்லும்போது, நன்றாக விளையாடிக்கொண்டிருந்த எனது இரண்டாவது மகன், மாலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு கிடந்தான். அவனது இரு கால்களிலும் இரத்தவீக்கம் இருந்தது.
இதுகுறித்து எனது மனைவிடம் கேட்டபோது, தவறி கிழே விழுந்துவிட்டான் எனக் கூறினாள். நானும் அவனுக்கு கொஞ்சம் ஊட்டச்சத்து குறைப்பாடு இருப்பதனால் அதனை நம்பிவிட்டேன். பிறகு 1 வாரம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து அழைத்து வந்தேன்.
அதன்பிறகும் தொடர்ச்சியாக அவன் உடம்பில் காயங்கள் ஏற்பட்டன. கேட்கும் போதெல்லாம் அவன் விழுந்துவிட்டதாக எனது மனைவி கூறுவாள். நான் இருக்கும் நேரத்தில் குழந்தையின் காயத்திற்கு மருந்து போட்டு அவனைப் பார்த்துக்கொள்வார். அதனால் எனக்கு எந்தச் சந்தேகமும் வரவில்லை. இந்நிலையில் தான் போனில் வீடியோ பார்த்ததும் உறைந்து போனேன்.
அவ அடிக்கிற வேகத்தையும், என் மகன் துடிக்கிறதையும் பார்க்கும்போதே ஆடிப்போயிட்டேன். ஆறு மாசமா என்னோட பிள்ளை என்னென்ன சித்ரவதையெல்லாம் அனுபவிச்சுருப்பானோ. அவளுக்கு சரியான தண்டனை கெடைக்கணும்” எனக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!